சேலத்தில் மக்கள் சந்திப்பு பயணம், டி.டி.வி. தினகரன் மீது 3 போலீஸ் நிலையங்களில் வழக்கு


சேலத்தில் மக்கள் சந்திப்பு பயணம், டி.டி.வி. தினகரன் மீது 3 போலீஸ் நிலையங்களில் வழக்கு
x
தினத்தந்தி 25 Feb 2019 4:30 AM IST (Updated: 25 Feb 2019 3:26 AM IST)
t-max-icont-min-icon

சேலம் மாவட்டத்தில் மக்கள் சந்திப்பு பயணத்தின் போது விதிமுறை மீறியதாக டி.டி.வி. தினகரன் எம்.எல்.ஏ. மீது 3 போலீஸ் நிலையங்களில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

சேலம், 

சேலம் மாவட்டத்தில் அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணை பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் எம்.எல்.ஏ., மக்கள் சந்திப்பு புரட்சி பயணம் என்ற பெயரில் சுற்றுப்பயணத்தில் ஈடுபட்டார். அதன்படி அவர் நேற்று முன்தினம் கெங்கவல்லி, மல்லியகரை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு சென்று மக்களை சந்தித்தார்.

இந்த நிலையில் மல்லியகரை கிராம நிர்வாக அலுவலர் காமராஜ், மல்லியகரை போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதில், இரவு 10 மணிக்கு மேல் விதிமுறையை மீறி ஒலிபெருக்கி வைத்து, பொதுக்கூட்டத்தில் டி.டி.வி. தினகரன் பேசியதாகவும், அவருடைய கட்சியை சேர்ந்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியிருந்தார். இதன் பேரில் டி.டி.வி. தினகரன் உள்பட 50 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

கெங்கவல்லி கிராம நிர்வாக அலுவலர் ஆனந்தன் கெங்கவல்லி போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதில் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் இரவு 11 மணிக்கு மேல் டி.டி.வி. தினகரன் பிரசாரம் செய்ததால், நடவடிக்கை எடுக்குமாறு கூறியிருந்தார். அதன் பேரில் டி.டி.வி. தினகரன் உள்பட அ.ம.மு.க. நிர்வாகிகள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

இதே போல தம்மம்பட்டி கிராம நிர்வாக அலுவலர் ராஜ்குமார் தம்மம்பட்டி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதில், இரவு 12.45 மணியளவில் தம்மம்பட்டி பகுதியில் சாலையை மறித்து போக்குவரத்துக்கு இடையூறு செய்ததுடன், கூம்பு வடிவ ஒலிபெருக்கி மூலம் அதிக சத்தம் ஏற்படுத்தியதால், டி.டி.வி. தினகரன் மற்றும் அவருடைய கட்சியினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறப்பட்டிருந்தது. அதன் பேரில் டி.டி.வி. தினகரன் உள்பட பலர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

Next Story