பிரதம மந்திரி கிசான் சம்மான் திட்டம், சிறு, குறு விவசாயிகளுக்கு நிதி உதவிக்கான சான்றிதழ்
தூத்துக்குடியில் பிரதம மந்திரி கிசான் சம்மான் நிதி திட்டத்தின் கீழ் சிறு, குறு விவசாயிகளுக்கு நிதி உதவிக்கான சான்றிதழை கலெக்டர் சந்தீப் நந்தூரி வழங்கினார்.
தூத்துக்குடி,
பிரதம மந்திரி கிசான் சம்மான் நிதி திட்டத்தின் கீழ் சிறு, குறு நில உடைமையாளர்களுக்கு முதல் தவணைக்கான நிதி உதவி பெறுவதற்கான சான்றிதழ் வழங்கும் விழா நேற்று நடந்தது. மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி தலைமை தாங்கி, 134 சிறு, குறு நில உடைமையாளர்களுக்கு முதல் தவணைக்கான நிதி உதவி பெறுவதற்கான சான்றிதழை வழங்கினார். ஜெயசிங் தியாகராஜ் நட்டர்ஜி எம்.பி. முன்னிலை வகித்தார்.
விழாவில் கலெக்டர் சந்தீப் நந்தூரி பேசியதாவது:-
ஒரு மாதத்திற்கு முன்பாக நடந்த பட்ஜெட் கூட்டத்தொடரில் பிரதம மந்திரி விவசாயிகள் வெகுமதி திட்டத்தின் கீழ் (பிரதம மந்திரி கிசான் சம்மான் நிதி உதவி வழங்கும் திட்டம்) சிறு, குறு நில உடைமையாளர்களுக்கு 5 ஆண்டுகளுக்கு தலா ரூ.6 ஆயிரம் வழங்கப்படும் என்று அறிவித்தார். இந்த தொகை ஒவ்வொரு ஆண்டும் 3 தவணைகளாக தலா ரூ.2 ஆயிரம் வீதம் வழங்கப்படுகிறது.
இந்த திட்டத்தின் கீழ் பயன்பெற ஒரு விவசாயிக்கு ஐந்து ஏக்கருக்கு குறைவாக நிலம் இருக்க வேண்டும். நிறுவன நிலங்களாக இருக்க கூடாது.
சிறு, குறு விவசாயிகள் நில உடைமைப்பட்டா எண், ஆதார் அட்டை எண், வங்கி கணக்கு புத்தக முதல் பக்க நகல் விவரங்கள் (வங்கியின் பெயர், கிளை, கணக்கு எண், ஐ.எப்.எஸ்சி கோடு) ரேஷன்கார்டு எண், செல்போன் எண் ஆகிய விவரங்களை கிராம நிர்வாக அலுவலர் அலுவலகங்களில் பதிவு செய்துகொள்ளலாம். இதற்கான கணக்கெடுக்கும் பணி தற்போது கிராமங்களில் கடந்த 15 தினங்களாக நடந்தது.
இதுவரை பதிவு செய்யாத விடுபட்ட சிறு, குறு விவசாயிகள் கிராம நிர்வாக அலுவலர் அலுவலகங்கள், தாசில்தார் அலுவலகங்கள், உதவி கலெக்டர் அலுவலகங்களில் வருகிற 25, 26 மற்றும் 27 ஆகிய தேதிகளில் நடைபெறும் சிறப்பு முகாம்களில் தங்களது விவரங்களை பதிவு செய்ய வேண்டும். தவிர்க்க முடியாத காரணங்களினால் இந்த முகாம்களில் பதிவு செய்ய முடியாமல் போனாலும் வருகிற 28 மற்றும் அதற்குப் பின்பாகவும் கிராம நிர்வாக அலுவலகத்தில் சுய விவர படிவத்தை வழங்கி பதிவு செய்து கொள்ளலாம். தகுதியான விவசாயிகள் கணக்கெடுப்பு பணியில் விடுபட்டிருந்தால், அவர்களை பட்டியலில் சேர்த்து, அடுத்த தவணையில் இருந்து உதவி தொகை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் பேசினார். நிகழ்ச்சியில் மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் மகாதேவன், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) பாலசுப்பிரமணியன், தோட்டக்கலைத்துறை துணை இயக்குனர் சரசுவதி, தூத்துக்குடி உழவர் பயிற்சி நிலைய வேளாண்மை துணை இயக்குனர் புருஷோத்தமன், புதுக்கோட்டை வேளாண் உதவி இயக்குனர் மார்டின் ராணி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story