வெள்ளகோவில் அருகே சரக்குவேன்–கார் மோதல்; கேபிள் டி.வி.ஆபரேட்டர் பலி
வெள்ளகோவில் அருகே சரக்குவேன்– கார் மோதிய விபத்தில் கேபிள் டி.வி.ஆபரேட்டர் பலியானார். 3 பேர் பலத்த காயம் அடைந்தனர்.
வெள்ளகோவில்,
கோவை பாப்பநாயக்கன்பாளையத்தை சேர்ந்தவர் அங்குராஜ் (வயது 65). கேபிள் டி.வி.ஆபரேட்டர். இவருடைய மனைவி நாகமணி (60). இவர்கள் 2 பேரும் ஒரு காரில் நாமக்கல் மாவட்டம் மோகனூரில் நடைபெற்ற விசேஷத்திற்கு சென்றனர். அப்போது அங்குராஜ் தனது உறவினரான ஆறுமுகம் (70), இவருடைய மனைவி ஜெகதீஸ்வரி (60) ஆகியோரையும் காரில் அழைத்து சென்றார்.
பின்னர் விசேஷத்தை முடித்து விட்டு 4 பேரும் கோவைக்கு திரும்பி சென்று கொண்டிருந்தனர். காரை அங்குராஜ் ஓட்டினார். காரில், டிரைவரின் இருக்கை அருகே நாகமணி அமர்ந்து இருந்தார். பின் இருக்கையில் ஆறுமுகம் மற்றும் அவருடைய மனைவி ஜெகதீஸ்வரி ஆகியோர் இருந்தனர்.
இந்த கார், வெள்ளகோவில்–காங்கேயம் சாலை எல்லக்காட்டு வலசு பிரிவு அருகே சென்று கொண்டிருந்தபோது எதிரே ஊத்துக்குளியில் சென்று வெள்ளகோவில் நோக்கி சரக்கு வேன் ஒன்று வந்து கொண்டிருந்தது. கண் இமைக்கும் நேரத்தில் காரும், சரக்கு வேனும் நேருக்குநேர் மோதிக்கொண்டன.
இந்த விபத்தில் 4 பேரும் பலத்த காயம் அடைந்தனர். உடனே அருகில் உள்ளவர்கள் அவர்களை மீட்டு காங்கேயம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் ஆஸ்பத்திரிக்கு போகும் வழியில், அங்குராஜ் பரிதாபமாக இறந்தார். மற்ற 3 பேரும் கோவையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து குறித்து வெள்ளகோவில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.