தனுஷ்கோடி பகுதியில் ஹெலிகேமராவில் படம் பிடித்த வெளிநாட்டுக்காரர்
தனுஷ்கோடி பகுதியில் ஹெலிகேமரா மூலம் வெளிநாட்டுக்காரர் ஒருவர் படம் பிடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
ராமேசுவரம்,
உலக நாடுகள் முழுவதும் சைக்கிளில் சென்று சுற்றிப்பார்த்து வரும் போலந்து நாட்டைச் சேர்ந்த மார்ட் (வயது 39) நேற்று ராமேசுவரம் வந்தார். கடந்த 7 மாதங்களுக்கு முன்பு தனது பயணத்தை தொடங்கிய இவர் கிர்கிஸ்தான், கஜகஸ்தான், ஈரான், பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகளுக்கு சென்றுவிட்டு பஞ்சாப் வழியாக இந்தியாவிற்கு வந்தார்.
பின்னர் இங்கிருந்து குஜராத், ராஜஸ்தான், கர்நாடகா, கேரளா ஆகிய மாநிலங்களுக்கு சென்று பல இடங்களை சுற்றிப் பார்த்துவிட்டு கன்னியாகுமரி, தூத்துக்குடி, ராமநாதபுரம் வழியாக நேற்று ராமேசுவரம் தனுஷ்கோடி பகுதிக்கு வந்தார். தனுஷ்கோடி பகுதிக்கு வந்த அவர் ஆள் இல்லாத குட்டி விமானத்தை (ஹெலிகேமரா) பறக்கவிட்டு படம் பிடித்ததாக கூறப்படுகிறது.
அப்போது அந்த வழியாக வந்த உள்ளூர் சுற்றுலா வாகன ஓட்டுனர்கள் சிலர் ஹெலி கேமரா மூலம் படம் பிடித்தால் காவல் துறையினர் நடவடிக்கை எடுப்பார்கள் என்று அவரை எச்சரித்தனர். இதையடுத்து அவர் அங்கிருந்து சென்றுவிட்டார். பாகிஸ்தான் உள்ளிட்ட பல வெளிநாடுகளுக்கு சென்று சுற்றிப் பார்த்து விட்டு வந்த வெளிநாட்டுக்காரர் தனுஷ்கோடி பகுதியில் ஹெலிகேமராவில் படம் பிடித்தது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.