நாடாளுமன்ற தேர்தலுக்குப்பின் காங்கிரஸ் ஆட்சி கவிழும் அன்பழகன் எம்.எல்.ஏ. சொல்கிறார்


நாடாளுமன்ற தேர்தலுக்குப்பின் காங்கிரஸ் ஆட்சி கவிழும் அன்பழகன் எம்.எல்.ஏ. சொல்கிறார்
x
தினத்தந்தி 25 Feb 2019 12:05 AM GMT (Updated: 25 Feb 2019 12:05 AM GMT)

புதுவையில் நாடாளுமன்ற தேர்தலுக்குப்பின் காங்கிரஸ் ஆட்சி கவிழும் என்று அ.தி.மு.க. சட்டமன்ற கட்சி தலைவர் அன்பழகன் எம்.எல்.ஏ. கூறினார்.

புதுச்சேரி,

மறைந்த தமிழக முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் பிறந்தநாள் விழா புதுவை அ.தி.மு.க. சார்பில் உப்பளத்தில் உள்ள தலைமை அலுவலகத்தில் நேற்று நடந்தது. விழாவுக்கு மாநில செயலாளர் புருஷோத்தமன், சட்டமன்ற கட்சி தலைவர் அன்பழகன் எம்.எல்.ஏ. ஆகியோர் தலைமை தாங்கினார்கள்.

கட்சி அலுவலகத்தில் உள்ள எம்.ஜி.ஆர். சிலைக்கு மாலை அணிவித்த அவர்கள், ஜெயலலிதாவின் படத்துக்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார்கள். தொடர்ந்து ஏழை, எளிய மக்களுக்கு தையல் எந்திரம், மிக்சி, மின்சார அடுப்பு, சலவை பெட்டி, வேட்டி, சேலை போன்ற நலத்திட்ட உதவிகளை வழங்கினர். விழாவில் சட்டமன்ற கட்சி தலைவர் அன்பழகன் எம்.எல்.ஏ. பேசியதாவது:-

புதுவை மாநிலத்தில் தேர்தல் அறிக்கையில் கூறியதை ஒன்றைக்கூட இந்த காங்கிரஸ் ஆட்சியாளர்கள் நிறைவேற்றவில்லை. மாநில வளர்ச்சியும் பின்னுக்கு தள்ளப்பட்டுள்ளது. கவர்னரும், முதல்-அமைச்சரும் மலிவு விளம்பரத்துக்காக மட்டுமே செயல்படுகிறார்கள்.

இந்த ஆட்சியை கலைக்க முயற்சி செய்வதாக எங்கள் கட்சியை சேர்ந்த எம்.எல்.ஏ. மீது புகார் கூறுகின்றனர். காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் விலைபோக தயாராக உள்ளனர். அவர்கள்தான் இந்த ஆட்சி வேண்டாம் என்கிறார்கள். அப்படிப்பட்டவர்களை வைத்துள்ள உங்களால் எங்களை எதுவும் செய்ய முடியாது. தற்போது முதல்-அமைச்சர் நாராயணசாமி நாடாளுமன்ற தேர்தலுக்காக தர்ணா போராட்ட நாடகம் நடத்தி உள்ளார். சபாநாயகரும் இதில் அரசியல் செய்கிறார். நாங்கள் சபாநாயகர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவருவோம். நாடாளுமன்ற தேர்தலுக்குப்பின் காங்கிரஸ் ஆட்சி கவிழும். அ.தி.மு.க. தலைமையில் புதிய ஆட்சி வரும். இவ்வாறு அன்பழகன் எம்.எல்.ஏ. பேசினார்.

விழாவில் எம்.எல்.ஏ.க்கள் பாஸ்கர், வையாபுரி மணிகண்டன், நிர்வாகிகள் கணேசன், அன்பானந்தம், நாகமணி, கிருஷ்ணமூர்த்தி, பாப்புசாமி, பொன்னுசாமி, அப்பாவு, குமாரவேல், கணேசன், கலியபெருமாள், காந்தி, அன்பழக உடையார், ஞானவேலு உள்பட பலர் கலந்துகொண்டனர்.

முத்தியால்பேட்டை மணிக்கூண்டு அருகே நடைபெற்ற விழாவில் வையாபுரி மணிகண்டன் எம்.எல்.ஏ. கலந்துகொண்டு ஜெயலலிதாவின் உருவப்படத்துக்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார். தொடர்ந்து அன்னதானம் மற்றும் இனிப்புகளை வழங்கினார். இதில் அ.தி.மு.க. நிர்வாகிகள் தனஞ்செழியன், முருகேசன், மண்ணாங்கட்டி, அரிகிருஷ்ணன், முனியாண்டி, செல்வம், நவீன், திருநாவுக்கரசு உள்பட பலர் கலந்துகொண்டனர்.

புதுவை 100 அடி ரோட்டில் உள்ள ஜெயலலிதாவின் சிலை மற்றும் நெல்லித்தோப்பு லெனின் வீதியில் உள்ள கட்சி அலுவலகத்தில் உள்ள ஜெயலலிதா உருவப்படத்துக்கு முன்னாள் எம்.எல்.ஏ. ஓம்சக்தி சேகர் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. விழாவில் 1000 பேருக்கு அன்னதானம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

இதில் இணை செயலாளர்கள் திருநாவுக்கரசு, காசிநாதன், ராமதாஸ், துணை செயலாளர்கள் வெங்கடசாமி, பெரியசாமி, கணேசன், கோவிந்தம்மாள், ஊசுடு செல்வராஜ், ராமலிங்கம், மாசிலா குப்புசாமி, வக்கீல் குணசேகரன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

காக்காயந்தோப்பு கிளை கழகம் சார்பில் நடந்த விழாவில் எம்.ஜி.ஆர். மன்ற துணை செயலாளர் மாசிலா குப்புசாமி ஜெயலலிதாவின் உருவப்படத்துக்கு மரியாதை செலுத்தி இனிப்பு வழங்கினார். நிகழ்ச்சியில் தொகுதி அவைத்தலைவர் நடராஜன் மற்றும் நிர்வாகிகள் குமரன், சரவணன், ஆறுமுகம், மோகன்ராஜ் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

வில்லியனூரில் அ.தி.மு.க.வின் முன்னாள் எம்.எல்.ஏ. நடராஜன் தலைமையில் ஜெயலலிதா பிறந்தநாள் கொண்டாடப்பட்டது. இதையொட்டி பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

Next Story