குடிநீர் வசதி செய்து தரக்கோரி காலி குடங்களுடன் வந்த பொதுமக்கள் கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு


குடிநீர் வசதி செய்து தரக்கோரி காலி குடங்களுடன் வந்த பொதுமக்கள் கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு
x
தினத்தந்தி 26 Feb 2019 4:30 AM IST (Updated: 25 Feb 2019 9:44 PM IST)
t-max-icont-min-icon

குடிநீர் வசதி செய்து தரக்கோரி காலி குடங்களுடன் மக்கள் குறைதீர்வு கூட்டத்துக்கு பொதுமக்கள் வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

திருவண்ணாமலை,

திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்வு நாள் கூட்டம் கலெக்டர் கே.எஸ்.கந்தசாமி தலைமையில் நடந்தது. கலெக்டர் அலுவலகத்தில் உள்ள கூட்டரங்கில் பொதுமக்களிடம் இருந்தும், மாற்றுத் திறனாளிகள் நல அலுவலகத்தில் மாற்றுத் திறனாளிகளிடமும் இருந்தும் மனுக்கள் பெறப்பட்டது.

இதில் மாவட்டத்தின் பல்வேறு பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கலந்து கொண்டு வீட்டுமனை பட்டா, கல்வி உதவித்தொகை, குடிநீர் பிரச்சினை, முதியோர் உதவித்தொகை, மாற்றுத் திறனாளிகள் உதவித்தொகை உள்பட பல்வேறு கோரிக்கை வலியுறுத்தி 500-க்கும் மேற்பட்ட மனுக்கள் பெறப்பட்டது.

மனுக்களை பெற்று கொண்ட கலெக்டர் அதனை சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் வழங்கி உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள உத்தரவிட்டார். மேலும் நிலுவையில் உள்ள மனுக்கள் குறித்து ஆய்வு மேற்கொண்டார். கூட்டத்தில் பல்வேறு துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

திருவண்ணாமலை தாலுகா மாதலம்பாடி காலனியை சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட பெண்கள் உள்பட பொதுமக்கள் காலி குடங்களுடன் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தனர். அவர்களுக்கு ஆதரவாக அ.ம.மு.க. திருவண்ணாமலை தெற்கு மாவட்ட செயலாளர் தருமலிங்கம் காரில் அங்கு வந்தார். அந்த கார் கலெக்டர் அலுவலக நுழைவு வாயில் உள்ளே செல்லும் போது, அதன் பின்னால் மாதலம்பாடி மக்களும் காலி குடங்களுடன் செல்ல முயன்றனர். அவர்களை பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் தடுத்து நிறுத்தினர்.

பின்னர் அவர்கள் போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். போலீசார், அனைவரையும் உள்ளே செல்ல அனுமதிக்க முடியாது. 5 பேர் மட்டும் செல்லுங்கள் என்றனர். தொடர்ந்து அவர்கள் போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு சமாதானம் அடைந்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் அவர்கள் அ.ம.மு.க. திருவண்ணாமலை தெற்கு மாவட்ட செயலாளர் தருமலிங்கத்துடன் கலெக்டரை நேரில் சந்தித்து மனு அளித்தனர்.

அந்த மனுவில், எங்கள் கிராமத்தில் சுமார் 200 குடும்பங்கள் உள்ளது. கடந்த சில மாதங்களாக குடிநீர் வசதியின்றி உள்ளது. எனவே குடிநீர் வசதி செய்து தர வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது.

திருவண்ணாமலை தாலுகா அய்யம்பாளையம் கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் அளித்த மனுவில் எங்கள் கிராமத்தில் ஆதிதிராவிடர் இன மக்கள் அதிகமாக வசித்து வருகின்றனர். கடந்த 1984-ம் ஆண்டு ஆதிதிராவிட நலத்துறை மூலம் 100 இலவச வீட்டுமனை பட்டாக்கள் வழங்கப்பட்டது. அதன்பிறகு இலவச வீட்டு மனை பட்டா வழங்கப்படவில்லை. ஆக்கிரமிக்கப்பட்ட தரிசு நிலங்களை கையகப்படுத்தி, வீட்டுமனை இல்லாமல் தவிக்கும் ஏழை ஆதிதிராவிட பொதுமக்களை பயனாளியாக தேர்வு செய்து இலவச வீட்டு மனை பட்டா வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

செய்யாறு தாலுகா கீழாத்தூர் கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது:-

எங்கள் கிராம பஞ்சாயத்திற்கு உட்பட்ட பொதுப்பணித்துறை ஏரியில் குடிநீர் வடிகால் வாரியம் கிராமமக்களிடம் கலந்து ஆலோசிக்காமல் தன்னிச்சையாக ராட்சத கிணறு வெட்ட ஆரம்பித்து உள்ளது. இது சம்பந்தமாக நாங்கள் உதவி கலெக்டர், தாசில்தார் மற்றும் குடிநீர் வடிகால் வாரியத்திற்கு ஆட்சேபனை மனு அளித்து உள்ளோம். இந்த திட்டம் நிறைவேறினால் எங்கள் கிராமம் பெரிதும் பாதிக்கப்படும். இந்த ஊரில் குடிநீர் ஆதாரம், மக்கள், கால்நடை, விவசாயம் ஆகியவை பாதிக்கப்படும். நாங்கள் ஊராட்சியை விட்டு வெளியேறுவதை தவிர வேறு வழியில்லை. எனவே இதுகுறித்து நேரில் வந்து விசாரணை நடத்தி, இந்த கூட்டு குடிநீர் திட்டத்தை மாற்றி ½ கிலோ மீட்டரில் உள்ள ஆற்று படுகையில் செயல்படுத்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story