குடோனில் பதுக்கி வைத்திருந்த பாலித்தீன் பைகள் பறிமுதல்


குடோனில் பதுக்கி வைத்திருந்த பாலித்தீன் பைகள் பறிமுதல்
x
தினத்தந்தி 25 Feb 2019 10:30 PM GMT (Updated: 25 Feb 2019 4:53 PM GMT)

ஆண்டிப்பட்டியில் குடோனில் பதுக்கி வைத்திருந்த ரூ.1 லட்சம் மதிப்பிலான பாலித்தீன் பைகள் பறிமுதல் செய்யப்பட்டன.

ஆண்டிப்பட்டி,

தமிழகத்தில் கடந்த மாதம் 1-ந்தேதி முதல் 14 வகையான பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் மற்றும் பாலித்தீன் பைகள் விற்பனையை தடுக்கும் வகையில் ஆண்டிப்பட்டி பேரூராட்சி செயல் அலுவலர் பாலசுப்பிரமணி தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில் ஆண்டிப்பட்டி அரசு மருத்துவமனை அருகே உள்ள தனியார் குடோனில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பதுக்கி வைத்திருப்பதாக தனிப்படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் செயல் அலுவலர் பாலசுப்பிரமணி தலைமையில், சுகாதார ஆய்வாளர் முருகானந்தம், போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கள் செல்வராஜ், குணசேகரன் மற்றும் பேரூராட்சி பணியாளர்கள் அங்கு சென்று குடோனில் சோதனை செய்தனர்.

அப்போது, அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் கப்புகள், பாலித்தீன் பைகள் பண்டல்கள் இருப்பது தெரியவந்தது. அவற்றை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இதன் மதிப்பு ரூ.1 லட்சம் இருக்கும் என்று கருதப்படுகிறது. மேலும் சம்பந்தப்பட்ட குடோன் உரிமையாளருக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

இதுகுறித்து செயல்அலுவலர் கூறும்போது, ஆண்டிப்பட்டி பேரூராட்சி பகுதியில் பாலித்தீன் பைகள், பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்த கூடாது என்று விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம். ஆனால் நகரின் சில இடங்களில் அவற்றை பயன்படுத்தி வருகின்றனர். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

Next Story