33 ஏரிகளுக்கு உபரிநீர் கால்வாய் அமைக்காததை கண்டித்து நாடாளுமன்ற தேர்தலை புறக்கணிக்க வேண்டும் விவசாயிகள் சங்க கூட்டத்தில் தீர்மானம்


33 ஏரிகளுக்கு உபரிநீர் கால்வாய் அமைக்காததை கண்டித்து நாடாளுமன்ற தேர்தலை புறக்கணிக்க வேண்டும் விவசாயிகள் சங்க கூட்டத்தில் தீர்மானம்
x
தினத்தந்தி 26 Feb 2019 3:15 AM IST (Updated: 25 Feb 2019 11:36 PM IST)
t-max-icont-min-icon

33 ஏரிகளுக்கு உபரிநீர் கால்வாய் அமைக்காததை கண்டித்து நாடாளுமன்ற தேர்தலை புறக்கணிப்பது என விவசாயிகள் சங்க கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

ஊத்தங்கரை, 

கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள 33 ஏரிகள் பாசன விவசாயிகள் சங்கத்தின் பொதுக்குழு கூட்டம் ஊத்தங்கரையை அடுத்த கெரிகேப்பள்ளியில் நடைபெற்றது. கூட்டத்திற்கு தலைவர் சண்முகம் தலைமை தாங்கினார். செயலாளர் மூர்த்தி, அனைத்து வணிகர் சங்க தலைவர் செங்கோட்டையன், பொருளாளர் காளியண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இந்த கூட்டத்தில், பாரூர் கிழக்குப்புற கால்வாயிலிருந்து 33 ஏரிகளுக்கு உபரிநீர் கால்வாய் அமைக்க 2005-ம் ஆண்டில் தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டும் இதுநாள் வரை கால்வாய் அமைக்கப்படாமல் உள்ளது. போதிய மழையின்மையால் ஊத்தங்கரை மற்றும் போச்சம்பள்ளி பகுதியில் உள்ள மா மற்றும் தென்னை மரங்கள் காய்ந்து விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆதலால் பாரூர் கிழக்குப்புற கால்வாயிலிருந்து 33 ஏரிகளுக்கான உபரிநீர் இணைப்பு கால்வாய் திட்டத்தை உடனே அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஏரி பாசன கால்வாய்க்கு நிலம் கையகப்படுத்தப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீட்டு தொகையை உடனடியாக வழங்க வேண்டும். 10 ஆண்டுகளுக்கு மேலாக 33 ஏரி பாசனத்திற்கு உட்பட்ட விவசாயிகள் வலியுறுத்தியும், வறட்சியால் பாதிக்கப்பட்ட நிலையிலும் கால்வாய் அமைக்கும் பணியை முடிக்காததை கண்டித்தும் நிலம் கையகப்படுத்தப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு தொகையை வழங்காததை கண்டித்தும் அனைத்து விவசாயிகள் வீடுகளிலும் கால்வாய் அமைக்கும் வரை கருப்பு கொடி ஏற்றுவது எனவும், இதனை கண்டித்து வருகின்ற நாடாளுமன்ற தேர்தலை புறக்கணிக்க வேண்டும் எனவும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இதில் விவசாயிகள் சங்க நிர்வாகிகள் செந்தில், ஜெகநாதன், கமலநாதன், மணி, சரவணன், தங்கவேல், துரைசாமி, வெங்கடேசன், சதாசிவம், வெங்கடாசலம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story