ஓட்டுனர் உரிமத்தை ஒரு மணி நேரத்தில் புதுப்பிக்க நடவடிக்கை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தகவல்


ஓட்டுனர் உரிமத்தை ஒரு மணி நேரத்தில் புதுப்பிக்க நடவடிக்கை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தகவல்
x
தினத்தந்தி 25 Feb 2019 11:00 PM GMT (Updated: 25 Feb 2019 6:13 PM GMT)

தமிழகத்தில் ஓட்டுனர் உரிமத்தை ஒரு மணி நேரத்தில் புதுப்பிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் கூறினார்.

நாமக்கல், 

தமிழ்நாடு மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளனத்திற்கு நாமக்கல் வள்ளிபுரத்தில் ரூ.1¼ கோடியில் புதிதாக கட்டிடம் கட்டப்பட்டு உள்ளது. இதன் திறப்பு விழா நேற்று நடந்தது. விழாவில் தமிழக மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் தங்கமணி, போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு புதிய கட்டிடத்தை திறந்து வைத்து பேசினர்.

விழாவில் அமைச்சர் தங்கமணி பேசும்போது கூறியதாவது:-

தமிழகத்தில் சாலைகளின் தரம் மேம்படுத்தப்பட்டு உள்ளது. இருப்பினும் விபத்துகள் நடைபெற்று வருவது வருத்தம் அளிப்பதாக உள்ளது. விபத்தில் ஒருவர் உயிரிழந்தால் அந்த குடும்பத்தின் நிலை என்ன என்பது அனைவருக்கும் தெரியும்.

பெரும்பாலான நேரங்களில் விபத்துக்கு வாகன ஓட்டுனர்களின் கவன குறைவு காரணமாக இருந்து வருகிறது. எனவே டிரைவர்களுக்கு தக்க அறிவுரைகள் வழங்கி விபத்தை குறைக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

விழாவில் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் பேசும்போது கூறியதாவது:-

இங்கு பேசிய லாரி உரிமையாளர் சங்க நிர்வாகி, தமிழகத்தை சேர்ந்த அதிக எண்ணிக்கையிலான வாகனங்கள் கர்நாடகாவில் பதிவு செய்யப்படுவதாக கூறினார். கர்நாடகாவில் பதிவு கட்டணம் எவ்வளவு வசூலிக்கிறார்கள்? தமிழகத்தில் எவ்வளவு என்பதை ஆராய்ந்து உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்று இருந்தால் மட்டுமே கனரக வாகன ஓட்டுனர் உரிமம் பெற முடியும் என்ற அறிவிப்பை மத்திய அரசு வெளியிட்டவுடன் அப்போது தமிழக முதல்-அமைச்சராக இருந்த ஜெயலலிதா எதிர்த்து குரல் கொடுத்தார். டிரைவர் பற்றாக்குறை உள்ள நிலையில் விவசாயம் மற்றும் நெசவு தொழிலுக்கு அடுத்தபடியாக வேலை வாய்ப்பை தருவது மோட்டார் வாகன தொழில் என்பதால் அதற்கான சரத்தை நீக்க வலியுறுத்தினார். தற்போது மத்திய அரசு மோட்டார் வாகன சட்டத்தில் அதற்கான சரத்தை நீக்க முன்வந்து உள்ளது வரவேற்கத்தக்கது.

இந்திய அளவில் ஆண்டுக்கு 1½ லட்சம் பேர் விபத்தில் இறக்கிறார்கள். தமிழகத்தில் 16,680 பேர் மரணம் அடைந்து உள்ளனர். இது துல்லியமான புள்ளிவிவரம் ஆகும். ஆனால் மற்ற மாநிலங்களில் இதுபோன்று கடைபிடிப்பது இல்லை. சாலை விபத்துக்கள் நடக்கும் போது சமரசம் செய்து கொள்வதால், இறப்பு விகிதம் மற்ற மாநிலங்களில் குறைவாக உள்ளது.

4 வழிச்சாலைகளில் வாகனங்களை சில டிரைவர்கள் வரைமுறையின்றி ஓட்டி செல்கிறார்கள். எனவே டிரைவர்களுக்கு அறிவுரை வழங்க வேண்டும். போக்குவரத்து துறையும் லைசென்ஸ் வழங்கும் முறையை கடுமையாக்க உள்ளது. மேலும் விபத்துக்களை குறைக்க பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறோம்.

செங்கல்பட்டு-திருச்சி இடையே விதிமுறைகளை மீறும் வாகனங்களுக்கு தானியங்கி மூலம் அபராதம் விதிக்கும் முறை கொண்டு வரப்பட உள்ளது. மேலும் அதிக விபத்து நடக்கும் 5 சாலைகளில் 400 கேமராக்கள் வசதியுடன், போலீஸ் கட்டுப்பாட்டு அறை அமைத்து கண்காணிக்க உள்ளோம்.

இதேபோல் ஓட்டுனர் மற்றும் பழகுனர் உரிமத்தை ஒரு மணிநேரத்திலேயே புதுப்பிக்க உரிய நடவடிக்கை மேற்கொண்டு வருகிறோம். தமிழகத்தில் வேக கட்டுப்பாட்டு கருவி பொருத்தி இருப்பதால் தான் விபத்துக்களின் எண்ணிக்கை குறைந்து உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

விழாவில் கலெக்டர் ஆசியா மரியம், கே.பி.பி.பாஸ்கர் எம்.எல்.ஏ., தென்னிந்திய மோட்டார் டிரான்ஸ்போர்ட் அசோசியேசன் தலைவர் கோபால் நாயுடு, அகில இந்திய மோட்டார் போக்குவரத்து காங்கிரஸ் முன்னாள் தலைவர் சண்முகப்பா, மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளன பொருளாளர் சீரங்கன், நாமக்கல் தாலுகா லாரி உரிமையாளர்கள் சங்க தலைவர் வாங்கிலி மற்றும் மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளன நிர்வாகிகள், உறுப்பினர்கள் திரளாக கலந்து கொண்டனர். முன்னதாக சம்மேளனத்தின் தலைவர் குமாரசாமி வரவேற்று பேசினார். முடிவில் சம்மேளனத்தின் செயலாளர் தன்ராஜ் நன்றி கூறினார்.

Next Story