தமிழகத்தில் முதல் முறையாக புதுக்கோட்டையில் மருத்துவ அறிவியல் கண்காட்சி நாளை தொடங்குகிறது அமைச்சர் பேட்டி


தமிழகத்தில் முதல் முறையாக புதுக்கோட்டையில் மருத்துவ அறிவியல் கண்காட்சி நாளை தொடங்குகிறது அமைச்சர் பேட்டி
x
தினத்தந்தி 26 Feb 2019 4:45 AM IST (Updated: 26 Feb 2019 12:29 AM IST)
t-max-icont-min-icon

தமிழகத்தில் முதல் முறையாக புதுக்கோட்டையில் மருத்துவ அறிவியல் கண்காட்சி நாளை தொடங்குகிறது என மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார்.

புதுக்கோட்டை,

புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி வளாகத்தில் ரூ.100 கோடி மதிப்பீட்டில் சிறுநீரக ஒப்புயர்வு மைய கட்டிடம் கட்டப்பட உள்ளது. இதில் முதல் கட்டமாக ரூ.75 கோடி மதிப்பீட்டில் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை ஒப்புயர்வு மைய கட்டிட பணிகளுக்கான பூமி பூஜை நேற்று நடைபெற்றது. இதற்கு கலெக்டர் உமா மகேஸ்வரி தலைமை தாங்கினார். இதில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கலந்து கொண்டு பூமிபூஜையை தொடங்கி வைத்து பேசும்போது, தமிழகத்தில் முதல்முறையாக சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை ஒப்புயர்வு மையம் இங்கு அமைக்கப்படுகிறது. இந்த மையம் பயன்பாட்டிற்கு வரும் பொழுது எதிர்காலத்தில் சிறுநீரகம் தொடர்பான ஆராய்ச்சி மையமாகவும் செயல்படும் என்றார்.

தொடர்ந்து அவர் புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் ரூ.1 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு உள்ள மாவட்ட தொடக்க நிலை இடையூட்டு சிகிச்சை மைய கட்டிடத்தை திறந்து வைத்தார்.

பின்னர் அமைச்சர் விஜயபாஸ்கர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

ரூ.125 கோடி மதிப்பில் மகப்பேறு ஒப்புயர்வு மையங்கள் கள்ளக்குறிச்சி, கிருஷ்ணகிரி, பொள்ளாட்சி உள்ளிட்ட பல இடங்களில் தொடங்கப்பட உள்ளன. இதன்மூலம் தாய்சேய் இறப்பு விகிதம் குறைக்கப்படும். கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு தமிழகத்தில் தாய் சேய் இறப்பு விகிதம் குறைவு. கடந்த ஆண்டு 134 ஆக இருந்த தாயின் இறப்பு விகிதம், இந்த ஆண்டு 62 ஆக குறைக்கப்பட்டு உள்ளது. இதேபோல் 19 ஆக இருந்த குழந்தைகளின் இறப்பு விகிதம், தற்போது 17 ஆக குறைக்கப்பட்டு உள்ளது. இவை மேலும் குறைக்கப்படும். கர்ப்பிணிகளுக்கு ஊக்கம் அளிக்கும் வகையிலும் கர்ப்பிணி பெண்களுக்கு 3 மற்றும் 5-ம் மாதங்களில் ரூ.2 ஆயிரம் மதிப்புள்ள சிறப்பு மகப்பேறு பெட்டகம் வழங்கும் திட்டத்தை வருகிற மார்ச் மாதம் 4-ந் தேதி தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைக்க உள்ளார். மருத்துவப்படிப்பு குறித்து மாணவ, மாணவிகள் அறிந்து கொள்ளும் வகையில் தமிழகத்தில் இந்த ஆண்டு முதல் முறையாக புதுக்கோட்டை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் மருத்துவ அறிவியல் கண்காட்சி நாளை (புதன்கிழமை) தொடங்கி 10 நாட்கள் நடைபெற உள்ளது. இதேபோல புதுக்கோட்டை அரசு இராணியார் மருத்துவமனை ரூ.20 கோடி மதிப்பீட்டில் ஒப்புயர்வு மையமாக தரம் உயர்த்தப்பட்டு இன்னும் ஓரிரு நாட்களில் திறக்கப்பட உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story