ரூ.50¾ கோடியில் கோவையில் இருந்து ஊட்டிக்கு 3-வது மாற்றுப்பாதை பணி


ரூ.50¾ கோடியில் கோவையில் இருந்து ஊட்டிக்கு 3-வது மாற்றுப்பாதை பணி
x
தினத்தந்தி 26 Feb 2019 4:15 AM IST (Updated: 26 Feb 2019 12:31 AM IST)
t-max-icont-min-icon

ரூ.50¾ கோடியில் கோவையில் இருந்து ஊட்டிக்கு 3-வது மாற்றுப்பாதை அமைக்கும் பணியை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தொடங்கி வைத்தார்.

காரமடை,

கோவையில் இருந்து நீலகிரி மாவட்டம் ஊட்டிக்கு 3-வது மாற்றுப்பாதை அமைக்க மத்திய சாலை நிதி திட்டத்தின் கீழ் ரூ.50 கோடியே 87 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. இந்த திட்டத்தில் காரமடை அருகே உள்ள வெள்ளியங்காடு முதல் பெரும்பள்ளம் வரை ரூ.23 கோடியே 88 லட்சத்திலும், பெரும்பள்ளம் முதல் மஞ்சூர் வரை ரூ.26 கோடியே 99 லட்சத்திலும் என மொத்தம் ரூ.50 கோடியே 87 லட்சம் செலவில் சுமார் 45 கிலோ மீட்டர் தூரம் சாலை பணி நடைபெறுகிறது. இதற்கான பூமி பூஜை நிகழ்ச்சி வெள்ளியங்காடு பகுதியில் நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு ஏ.கே.செல்வராஜ் எம்.பி. தலைமை தாங்கினார். வெள்ளியங்காடு முன்னாள் ஊராட்சி தலைவர் ஜீவானந்தம் வரவேற்றார். வடக்கு மாவட்ட செயலாளர் பி.ஆர்.ஜி.அருண்குமார் எம்.எல்.ஏ, ஓ.கே.சின்னராஜ் எம்.எல்.ஏ., கலெக்டர் ராஜாமணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கலந்துகொண்டு பணியை தொடங்கி வைத்தார். பின்னர் அவர் பேசும்போது கூறியதாவது:-

இந்த திட்டம் கடந்த 2011-ம் ஆண்டு அப்போதைய முதல்-அமைச்சர் ஜெயலலிதாவால் அறிவிக்கப்பட்டது. இந்த சாலை வனத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. அதை நெடுஞ்சாலைத்துறைக்கு மாற்ற வேண்டும் என்று ஓ.கே.சின்னராஜ் எம்.எல்.ஏ. கோரிக்கை வைத்தார். இது மத்திய அரசின் கவனத்துக்கு கொண்டு செல்லப்படும். மேட்டுப்பாளையம் தொகுதிக்கு பல்வேறு திட்டங்களை அ.தி.மு.க அரசு வழங்கி உள்ளது. அதில் ரூ.9 கோடி செலவில் அரசு கலை கல்லூரி, ரூ.100 கோடி செலவில் நகராட்சி அலுவலகம், ரூ.90 கோடி செலவில் பாதாள சாக்கடை திட்டம் போன்றவை அடங்கும். இதேபோன்று 70 ஆண்டு பிரச்சினையான அத்திக்கடவு-அவினாசி திட்டம் நிறைவேற்றப்பட்டு உள்ளது.

பெரியநாயக்கன்பாளையம் முதல் மத்தம்பாளையம் வரை நான்கு வழிச்சாலை, கவுண்டம்பாளையம் மற்றும் துடியலூரில் மேம்பாலம் போன்ற பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு உள்ளது. ஜெயலலிதாவின் வழியில் தற்போதைய முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் ஆகியோர் ஆட்சி செய்து வருகிறார்கள்.

இந்த அரசை குறை கூறுவதற்கு தி.மு.க.வுக்கு எந்த தகுதியும் கிடையாது. ஏனெனில் இலங்கையில் நமது தமிழ் மக்களை கொன்று குவிக்கும்போது, அமைதியாக இருந்தவர்கள் தி.மு.க.வினர். மக்களுக்காக வாழ்ந்து உயிர்நீத்தவர் ஜெயலலிதா. அவரின் பல்வேறு திட்டங்கள் மற்றும் விடுபட்ட அனைத்து திட்டங்களையும் தற்போதைய அரசு செயல்படுத்தி வருகிறது. எனவே நாடாளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணி வேட்பாளருக்கு நீங்கள் வாக்களித்து வெற்றி பெற செய்ய வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

இதைத்தொடர்ந்து 1,500 பேருக்கு இலவச வேட்டி, சேலையை அமைச்சர் வழங்கினார். இதில் தாசில்தார் புனிதா, மாவட்ட அம்மா பேரவை செயலாளர் நாசர், காரமடை ஒன்றிய செயலாளர் பி.டி.கந்தசாமி, நகர செயலாளர் டி.டி.ஆறுமுகசாமி, மோகன்ராஜ், கூட்டுறவு கைத்தறி நெசவாளர் சம்மேளன துணைத்தலைவர் ரவிக்குமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Next Story