கோவை முருகானந்தத்தின் கதை, இந்திய ஆவண படத்துக்கு ஆஸ்கார் விருது


கோவை முருகானந்தத்தின் கதை, இந்திய ஆவண படத்துக்கு ஆஸ்கார் விருது
x
தினத்தந்தி 26 Feb 2019 5:00 AM IST (Updated: 26 Feb 2019 12:44 AM IST)
t-max-icont-min-icon

கோவையை சேர்ந்த முருகானந்தம் கதையை கருவாக வைத்து தயாரிக்கப்பட்ட ‘பீரியட் எண்ட் ஆப் சென்டன்ஸ்’ என்ற இந்திய ஆவண படத்துக்கு ஆஸ்கார் விருது கிடைத்தது.



கோவையை சேர்ந்த முருகானந்தம், விலை குறைந்த நாப்கினை தயாரிக்கும் எந்திரத்தை கண்டுபிடித்தவர் ஆவார். இதற்காக அவர் சந்தித்த பிரச்சினைகள் ஏராளம். இந்த சவால்கள் மற்றும் மாதவிலக்கு காலத்தில் இந்திய பெண்கள் சந்திக்கும் பிரச்சினைகளை மையமாக கொண்டு ‘பீரியட் எண்ட் ஆப் சென்டன்ஸ்’ என்ற ஆவண படம் தயாரிக்கப்பட்டு இருந்தது. 26 நிமிடங்கள் ஓடும் இந்த ஆவண படத்தில் நாப்கின் முருகானந்தமும் நடித்துள்ளார். இந்தியாவைச் சேர்ந்த பெண் தயாரிப்பாளர் குனீத் மோங்கா தயாரித்த இந்த படத்தை லாஸ்ஏஞ்சல்ஸ் நகரில் வசித்து வரும் ஈரானிய-அமெரிக்கரான ராய்கா ஷெடாக்சி டைரக்டு செய்திருந்தார். இந்த படத்துக்கு சிறந்த ஆவண படத்துக்கான ஆஸ்கார் விருது கிடைத்துள்ளது.

இது குறித்து முருகானந்தம் நிருபர்களிடம் கூறியதாவது:-

நான் நடித்த படத்துக்கு ஆஸ்கார் விருது கிடைத்து இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. இந்த சர்வதேச அங்கீகாரத்தால் நாப்கின் குறித்த விழிப்புணர்வு மேலும் அதிகரிக்கும் என நம்புகிறேன். குறிப்பாக கிராமப்புற பெண்களுக்கு ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்தும்.ஆரோக்கியமான வாழ்வு மிகவும் முக்கியம். இந்த விருது மூலம் பெண்களின் சுகாதாரம் காக்கப்படும். பல்வேறு குறும்படங்களுக்கு மத்தியில் இந்த ஆவண படம் அங்கீகரிக்கப்பட்டு இருப்பது மிகுந்த பெருமை. இந்த ஆவண படம் பெண்கள் மத்தியில் மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story