வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கக்கோரி சிறப்பு முகாமில் 13,222 பேர் விண்ணப்பம் அதிகாரிகள் தகவல்

நாமக்கல் மாவட்டத்தில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கக்கோரி சிறப்பு முகாமில் 13,222 பேர் விண்ணப்பம் செய்து இருப்பதாக தேர்தல் பிரிவு அதிகாரிகள் தெரிவித்தனர்.
நாமக்கல்,
தமிழகம் முழுவதும் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கம் செய்தல், திருத்தம் செய்தல் மற்றும் முகவரி மாற்றம் உள்ளிட்ட பணிகளுக்கான சிறப்பு முகாம் கடந்த 23-ந் தேதியும், 24-ந் தேதியும் நடந்தது. இதையொட்டி நாமக் கல் மாவட்டத்தில் 661 வாக்குச்சாவடி மையங்களிலும் பொதுமக்களிடம் இருந்து வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்குதல், திருத்தம் செய்தல் மற்றும் முகவரி மாற்றம் செய்வதற்கு விண்ணப்ப படிவங்கள் பெறப்பட்டன. குறிப்பாக 18 வயது பூர்த்தி அடைந்த இளைஞர்கள் மற்றும் இளம்பெண்கள் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க ஆர்வமுடன் விண்ணப்பங்களை பூர்த்தி செய்து கொடுத்தனர்.
இதன்படி ராசிபுரம் சட்டசபை தொகுதியில் 1,977 பேரும், சேந்தமங்கலம் தொகுதியில் 2,077 பேரும், நாமக்கல் தொகுதியில் 2,290 பேரும், பரமத்திவேலூர் தொகுதியில் 2,020 பேரும், திருச்செங்கோடு தொகுதியில் 1,742 பேரும், குமாரபாளையம் தொகுதியில் 3,116 பேரும் என மொத்தம் 13 ஆயிரத்து 222 பேர் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க விண்ணப்பம் கொடுத்து உள்ளனர்.
இதேபோல் மாவட்டம் முழுவதும் வாக்காளர் பட்டியலில் இருந்து பெயரை நீக்கம் செய்யக்கோரி 1,687 பேரும், திருத்தம் செய்யக்கோரி 2,301 பேரும், முகவரி மாற்றம் செய்யக்கோரி 1,333 பேரும் என மொத்தமாக 4 படிவங்களையும் சேர்த்து 18,543 பேர் விண்ணப்பம் கொடுத்து இருப்பதாக தேர்தல் பிரிவு அதிகாரிகள் தெரிவித்தனர்.
Related Tags :
Next Story