நாமகிரிப்பேட்டை அருகே நிலக்கரி ஏற்றிச்சென்ற லாரி தீப்பிடித்து எரிந்தது
நாமகிரிப்பேட்டை அருகே நிலக்கரி ஏற்றிச்சென்ற லாரி தீப்பிடித்து எரிந்து சாம்பல் ஆனது.
ராசிபுரம்,
கரூர் மாவட்டம், புகழூரில் இருந்து 20 டன் எடையுள்ள நிலக்கரியை ஏற்றிக்கொண்டு டாரஸ் லாரி ஒன்று நெல்லிக்குப்பம் சென்றது. அந்த லாரி நாமக்கல் மாவட்டம், நாமகிரிப்பேட்டையை அடுத்த, ராசிபுரம்-ஆத்தூர் சாலையில் மங்களபுரம் தனியார் குளுக்கோஸ் நிறுவனம் அருகே நேற்று இரவு 10 மணியளவில் சென்றுகொண்டிருந்தது.
அப்போது திடீரென்று சாலையின் நடுவில் உள்ள தடுப்புச்சுவர் மீது மோதியது. இதில் திடீரென லாரியில் தீப்பற்றி முழுவதும் எரிந்து விட்டது. கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்த இந்த விபத்தில் லாரி முற்றிலும் எரிந்து எலும்புக்கூடு போல் காட்சி அளித்தது. அதில் இருந்த நிலக்கரி முழுவதும் தீயில் எரிந்து சாம்பல் ஆனது.
இது குறித்து வாழப்பாடி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. வாழப்பாடி தீயணைப்பு படையினர் விரைந்து சென்று தீயை அணைத்தனர். லாரியில் இருந்த டிரைவர்கள் சேகர் (வயது 34) மற்றும் இன்னொரு டிரைவர் வடிவேலு (37) இருவரும் காயம் இன்றி தப்பினர். இவர்கள் இருவரும் ராசிபுரம் அருகேயுள்ள கட்டனாச்சம்பட்டியைச் சேர்ந்தவர்கள் ஆவார்கள்.
இது பற்றி மங்களபுரம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story