கனிம வளம் முறைகேடாக எடுப்பதை தடுக்காவிட்டால் நாடாளுமன்ற தேர்தலை புறக்கணிப்போம் சேந்தமங்கலம் பகுதி கிராம மக்கள் முதல்-அமைச்சருக்கு மனு
கனிம வளம் முறைகேடாக எடுப்பதை தடுக்காவிட்டால் நாடாளுமன்ற தேர்தலை புறக்கணிப்போம் என்று சேந்தமங்கலம் பகுதி கிராம மக்கள் முதல்-அமைச்சருக்கு கோரிக்கை மனு அனுப்பி உள்ளனர்.
சேந்தமங்கலம்,
நாடாளுமன்ற தேர்தல் களம் சூடுபிடிக்க தொடங்கி உள்ளது. கொள்கை வேறு, கூட்டணி வேறு என்று தமிழகத்தின் பிரதான அரசியல் கட்சிகள் கூட்டணி கணக்குகளை தொடங்கி உள்ளன. தேர்தல் எந்த நேரமும் அறிவிக்கப்படலாம் என்ற சூழலில், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள கிராம மக்கள் தங்கள் அடிப்படை பிரச்சினைக்காக இந்த தேர்தலை புறக்கணிப்போம் என்று கோரிக்கை முழக்கங்களையும் எழுப்ப தொடங்கி உள்ளனர்.
நாமக்கல் மாவட்டம், சேந்தமங்கலம் அருகே உள்ள கரட்டுப்பகுதியில் முறைகேடாக கனிமவளங்களை வெட்டி எடுப்பதை தடுக்க வலியுறுத்தி நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலை புறக்கணிக்க முடிவு செய்து உள்ளதாக அப்பகுதி மக்கள் தமிழக முதல்-அமைச்சருக்கு புகார் மனு அனுப்பி உள்ளனர்.
அந்த புகார் மனுவில் கூறப்பட்டு இருப்பதாவது:-
சேந்தமங்கலம் ஒன்றியம் பொட்டணம் ஊராட்சி பகுதியில் தண்டி கரடு அமைந்துள்ளது. அந்த கரட்டில் இருந்து சிறு ஜல்லிக்கற்கள் தயாரிப்பதற்காக இரவு, பகலாக பாறைகளை வெட்டி எடுத்து வருகின்றனர். அப்போது பாறைகளை தகர்க்க அதிகப்படியான வெடிமருந்து வைத்து தகர்ப்பதால் அந்த பகுதியில் காற்று மாசுபடுகிறது. அந்த காற்றை சுவாசிப்பதால் அங்கு வசிக்கும் மக்களுக்கு உடல் நலக்குறைவு ஏற்படுகிறது. நில அதிர்வு ஏற்படுகிறது. நீர் போக்கு மாற்றம் ஏற்படுகிறது. இதை தடுக்க வேண்டும்.
கோதுப்பாறை பகுதியில் அனுமதியின்றி வண்டல் மண் கடத்தப்படுவதை தடுப்பதுடன், புதிய கல்குவாரிகளுக்கு அனுமதி வழங்க கூடாது. நாச்்சூர், ஓந்திதோட்டம், காரிபாப்பனூர், கல்சினாம்பட்டி ஆகிய பகுதிகளில் குடிநீர் பிரச்சினை தீர்க்க வேண்டும். பொட்டணம் ஊராட்சியில் உள்ள ராஜவீதி, கலப்பாறை, ஆதிதிராவிடர் தெரு, கிழக்கு மேற்கு நடுத்தெரு, சப்பான் தோட்டம், சேலத்தார் தோட்டம், பழைய முன்சிப் காலனி ஆகிய பகுதிகளில் பொது குடிநீர் குழாய் அமைக்க வேண்டும்.
வீட்டுக்கு பயன்படுத்தப்படும் தண்ணீர் இரண்டு வாரங்களாக வரவில்லை. அதற்காக ஆழ்துளை கிணறுகளை சீரமைக்க வேண்டும். இந்த கோரிக்கைகள் கிராம சபை கூட்டங்களில் நிறைவேற்றப்பட்டது. ஆனால் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை. எனவே அந்த குறைகளை தீர்க்க வலியுறுத்தி நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலை புறக்கணிக்க முடிவு செய்துள்ளோம். அத்துடன் ரேஷன் கார்டு, ஆதார் கார்டு, வாக்காளர் அட்டை ஆகியவற்றை திரும்ப ஒப்படைக்கவும் முடிவு செய்துள்ளோம்.
இவ்வாறு அந்த புகார் மனுவில் கூறப்பட்டு உள்ளது.
Related Tags :
Next Story