ரூ.7 லட்சம் கையாடல்: பணத்தை மீட்டு தரக்கோரி சுயஉதவிக்குழுவினர் கலெக்டரிடம் மனு


ரூ.7 லட்சம் கையாடல்: பணத்தை மீட்டு தரக்கோரி சுயஉதவிக்குழுவினர் கலெக்டரிடம் மனு
x
தினத்தந்தி 26 Feb 2019 4:30 AM IST (Updated: 26 Feb 2019 1:14 AM IST)
t-max-icont-min-icon

மகளிர் சுயஉதவிக்குழுவில் ரூ.7 லட்சம் கையாடல் செய்து விட்டு பெண் ஒருவர் தலைமறைவாகி விட்டார். அவரை பிடித்து பணத்தை மீட்டு தரக்கோரி கலெக்டரிடம் அந்த குழுவை சேர்ந்த பெண்கள் மனு கொடுத்தனர்.

கரூர்,

கரூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நேற்று மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் அன்பழகன் தலைமை தாங்கி, பொதுமக்களிடமிருந்து 331 கோரிக்கை மனுக்களை பெற்றார்.

கரூர் மண்மங்கலம் தாலுகா செம்படாபாளையத்திலுள்ள மகளிர் சுயஉதவிக்குழுவை சேர்ந்த பெண்கள் திரண்டு வந்து கலெக்டரிடம் மனு கொடுத்தனர். அதில், எங்கள் பகுதியில் உள்ள பெண்கள் பலர் மகளிர் சுயஉதவிக்குழுவில் பணம் கட்டி வருகின்றனர். இந்த நிலையில் குழுவில் முக்கிய பொறுப்பில் இருந்த பெண் ஒருவர், ரூ.7 லட்சம் வரை கையாடல் செய்து விட்டு திடீரென தலைமறைவாகி விட்டார். எனவே அவரை கண்டுபிடித்து பணத்தை மீட்டுதர உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்து இருந்தனர்.

கரூர் மாவட்ட பழங்குடி குறவன் கூட்டமைப்பின் மாநில இணை செயலாளர் பாண்டியன் தலைமையில், நிர்வாகிகள், உறுப்பினர்கள் திரண்டு வந்து மனு கொடுத்தனர். அந்த மனுவில், எங்கள் இனத்தின் பெயரை தவறாக சித்தரித்து திரைப்படம் எடுக்கப்படுவதை தடுக்க வேண்டும். நரிக்குறவர்கள் பலரும் இந்தோ-ஆரிய மொழிக் குடும்பத்தை சேர்ந்த வாக்கிரிபோலி என்கிற மொழியிலேயே பேசி வருகின்றனர். எனவே அரசு ஆவணங்களில் நரிக்குறவர் என்பதற்கு பதிலாக வாக்கிரி என பெயர் மாற்றம் செய்திட உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று தெரிவித்து இருந்தனர்.

கடவூர் தாலுகா தெற்கு அய்யம்பாளையத்தை சேர்ந்த அம்சவள்ளி என்பவர் கொடுத்த மனுவில், எனது கணவர் இலக்குமணனை, அதே பகுதியை சேர்ந்த ஒரு தம்பதியினர் நிலப்பிரச்சினையில் அடித்து கொலை செய்து விட்டனர். இது தொடர்பான வழக்கு கரூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்துக்கு மாற்றம் செய்யப்பட்டு விசாரணை நடந்து வருகிறது. இந்த நிலையில் சிலர் வழக்கினை வாபஸ் வாங்குமாறு கூறி என்னையும், எனது குடும்பத்தினரையும் மிரட்டுகின்றனர். எனவே எனது குடும்பத்திற்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று தெரிவித்து இருந்தார்.

சாமானிய மக்கள்நலக்கட்சி கரூர் மாவட்ட செயலாளர் சண்முகம் மற்றும் அமராவதி சுற்றுசூழல் பாதுகாப்பு இயக்கம், மே 17 இயக்கம், சமநீதிக்கழகம், மனிதநேய ஜனநாயக கட்சி உள்ளிட்ட அமைப்புகளை சேர்ந்தவர்கள் கலெக்டர் அலுவலகத்திற்கு திரண்டு வந்தனர். பின்னர் அவர்கள் கரூரில் மணல்பிரச்சினைக்கு எதிராக போராட்டம் நடத்திய சுற்றுசூழல் ஆர்வலர் முகிலனின் உருவப்படம் பதித்த முகமூடியை அணிந்து கொண்டு, காணாமல் போன முகிலனை கண்டுபிடித்து தரக்கோரி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

பின்னர் இது தொடர்பாக கலெக்டரிடம் சாமானிய மக்கள்நலக்கட்சியினர் கொடுத்த மனுவில், தூத்துக்குடி ஸ்டெர்லைட் கலவரம் பற்றிய வீடியோ மற்றும் புகைப்பட ஆதாரத்தினை வெளியிட்டுவிட்டு சென்னையில் இருந்து மதுரை திரும்பியபோது முகிலன் திடீரென காணாமல் போய்விட்டார். அவரை தமிழக காவல்துறையினர் கண்டுபிடித்து தர வேண்டும் என்று தெரிவித்து இருந்தனர்.

மனுக்களை பெற்று கொண்ட கலெக்டர் அன்பழகன் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என பதில் கூறினார். கூட்டத்தில், சமூக பாதுகாப்பு திட்ட தனித்துணை கலெக்டர் மீனாட்சி, ஆதிதிராவிடர் நல அதிகாரி லீலாவதி, பிற்படுத்தப்பட்டோர் நலஅதிகாரி கணேஷ் உள்பட அரசு அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர். 

Next Story