திருப்பத்தூரில் காதல் திருமணம் செய்த புதுப்பெண் தூக்குப் போட்டு தற்கொலை 16 நாளில் நடந்த பரிதாபம்
திருப்பத்தூர் தென்மாபட்டியில் திருமணமான 16 நாளில் புதுப்பெண் தூககுப் போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
திருப்புத்தூர்,
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே உள்ள மணககுடி கிராமத்தை சேர்ந்தவர் மூர்த்தி. இவரது மகள் துர்காதேவி (வயது 21). இவர் திருப்பத்தூரில் உள்ள ஒரு கடையில் வேலை செய்து வந்தார். இந்தநிலையில், இவரும் திருப்பத்தூர் தென்மாபட்டி மேலத்தெருவைச்சேர்ந்த சின்னச்சாமி மகன் அன்பழகன் என்பவரும் காதலித்து வந்தனர்.
இருவரும் வெவ்வேறு சமூதாயத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால், இவர்கள் காதலுக்கு எதிர்ப்பு எழுந்தது. இதனால் துர்காதேவி கடந்த 9–ந்தேதி வேலைக்கு போவதாக கூறிவிட்டு வெளியில் சென்றவர் பின்பு வீடு திரும்பவில்லை. இதனால் பெற்றோர் அவரை தேடி வந்தனர். இதையடுத்து மறுநாள் 10–ந்தேதி திருப்பத்தூர் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் இருந்து துர்காதேவி வீட்டிற்கு போன் வந்ததை தொடர்ந்து, பெற்றோர் அங்கு சென்றனர். அங்கு போலீசாரின் விசாரணையில் இருவரும் காதல் திருமணம் செய்து கொண்டது தெரியவந்தது.
அதைத்தொடர்ந்து துர்காதேவி, அன்பழகனுடன் செல்வதாக கூறிவிட்டு, அவரின் வீட்டிற்கு சென்று விட்டார். இந்தநிலையில் நேற்று மதியம் துர்காதேவி வீட்டில் சேலையால் தூககுப் போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து திருப்பத்தூர் நகர் போலீசில் துர்காதேவியின் தாயார் செல்வி தனது மகள் சாவில் சந்தேகம் உள்ளதாக புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் விசாரித்து வருகின்றனர். மேலும் திருமணமாகி 16 நாட்களே ஆவதால் இன்று (செவ்வாய்கிழமை) சப்–கலெகடர் நேரடி விசாரணை செய்ய உள்ளார்.