செய்தி மக்கள் தொடர்புத் துறை சார்பில் தமிழக அரசின் சாதனை விளக்க புகைப்பட கண்காட்சி அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன் திறந்து வைத்து பார்வையிட்டார்


செய்தி மக்கள் தொடர்புத் துறை சார்பில் தமிழக அரசின் சாதனை விளக்க புகைப்பட கண்காட்சி அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன் திறந்து வைத்து பார்வையிட்டார்
x
தினத்தந்தி 26 Feb 2019 3:45 AM IST (Updated: 26 Feb 2019 1:33 AM IST)
t-max-icont-min-icon

திருவண்ணாமலையில் தமிழக அரசின் சாதனை விளக்க புகைப்பட கண்காட்சியை அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன் திறந்து வைத்து பார்வையிட்டார்.

திருவண்ணாமலை,

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் ராஜகோபுரம் எதிரில் உள்ள தேரடி வீதியில் தமிழக அரசின் சாதனை விளக்க புகைப்பட கண்காட்சி அமைக்கப்பட்டுள்ளது. செய்தி மக்கள் தொடர்புத் துறையின் சார்பில் ‘தமிழக அரசின் சாதனைகள் ஈராண்டு தொடரும் பல்லாண்டு ’என்ற தலைப்பில் 2 நாட்கள் நடைபெறும் இந்த கண்காட்சி தொடக்க விழாவிற்கு கலெக்டர் கே.எஸ்.கந்தசாமி முன்னிலை வகித்தார். இந்து சமய மற்றும் அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன் தலைமை தாங்கி கண்காட்சியை திறந்து வைத்து பார்வையிட்டார்.

தொடர்ந்து ‘குழந்தைகள் பாதுகாப்புக்கு சில யோசனைகள்’ என்ற தலைப்பில் தயாரிக்கப்பட்டு உள்ள மடிப்பு கையேடு மற்றும் திருவண்ணாமலை மாவட்டத்தில் தமிழக அரசின் ஈராண்டு சாதனைகள் குறித்த விளக்க கையேட்டினை பொதுமக்களுக்கு அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன் வழங்கினார். மேலும் அமைச்சரும், கலெக்டரும் இணைந்து மாற்றுத் திறனாளிகள் நலத்துறை சார்பில் 2018-19-ம் ஆண்டு 100 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.58 லட்சத்து 68 ஆயிரம் மதிப்பிலான இணைப்பு சக்கரங்கள் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர் வழங்கும் திட்டத்தினை பயனாளிகளுக்கு வழங்கி தொடங்கி வைத்தனர்.

அத்துடன் புகைப்படக் கண்காட்சியில் செய்தி மக்கள் தொடர்புத் துறை அதி நவீன மின்னணு எல்.இ.டி. வீடியோ வாகனம் மூலம் தமிழக முதல்-அமைச்சரின் ஈராண்டு சாதனைகளின் குறும்படம் பொதுமக்களுக்கு திரையிட்டு காண்பிக்கப்பட்டது.

நிகழ்ச்சியில் உதவி கலெக்டர் (பயிற்சி) பிரதாப், மாற்றுத் திறனாளிகள் மாவட்ட நல அலுவலர் சரவணன், முன்னாள் அமைச்சர் எஸ்.ராமச்சந்திரன், முன்னாள் எம்.எல்.ஏ. அரங்கநாதன், முன்னாள் தமிழ்நாடு கூட்டுறவு ஒன்றியத் தலைவர் அமுதா அருணாச்சலாம், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் முத்தமிழ்ச்செல்வன் மற்றும் அரசு அலுவலர்கள், கூட்டுறவு சங்கங்களின் தலைவர்கள், உறுப்பினர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story