ஆரணி, கண்ணமங்கலம் பகுதிகளில் ரூ.2½ கோடியில் குடிநீர் பராமரிப்பு பணிகள் அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன் பேச்சு


ஆரணி, கண்ணமங்கலம் பகுதிகளில் ரூ.2½ கோடியில் குடிநீர் பராமரிப்பு பணிகள் அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன் பேச்சு
x
தினத்தந்தி 26 Feb 2019 3:15 AM IST (Updated: 26 Feb 2019 1:41 AM IST)
t-max-icont-min-icon

ஆரணி, கண்ணமங்கலம் பகுதிகளில் ரூ.2 கோடியே 60 லட்சம் மதிப்பில் குடிநீர் பராமரிப்பு பணிகள் செய்யப்பட்டுள்ளது என்று அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன் பேசினார்.

ஆரணி,

ஆரணி நகர அ.தி.மு.க. சார்பில் ஜெயலலிதா பிறந்த நாளை முன்னிட்டு ஆரணி அண்ணா சிலை அருகே பொதுக்கூட்டம் நடந்தது. வேலூர் ஆவின் துணைத்தலைவர் பாரி பி.பாபு தலைமை தாங்கினார். நகர செயலாளர் அசோக்குமார், அரசு வக்கீல்கள் கே.சங்கர், வி.வெங்கடேசன், ஒன்றிய செயலாளர்கள் பி.ஆர்.ஜி.சேகர், எம்.வேலு, மாவட்ட இளைஞர் பாசறை செயலாளர் கஜேந்திரன், முன்னாள் மாவட்ட கவுன்சிலர் சேவூர் ஜெ.சம்பத், கூட்டுறவு சங்க தலைவர் பி.ஜி.பாபு ஆகியோர் முன்னிலை வகித்தனர். நகர அவைத்தலைவர் எஸ்.ஜோதிலிங்கம் வரவேற்றார்.

சிறப்பு அழைப்பாளராக திருவண்ணாமலை தெற்கு மாவட்ட செயலாளரும். இந்து சமய அறநிலையத்துறை அமைச்சருமான சேவூர் எஸ்.ராமச்சந்திரன் கலந்து கொண்டு தையல் எந்திரம் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசினார்.

அப்போது அவர் பேசியதாவது:-

முன்னாள் முதல்-அமைச்சர் ஜெ.ஜெயலலிதா ஆட்சி காலத்தில் பள்ளி மாணவர்களுக்கு இலவச பாட புத்தகங்கள், சைக்கிள்கள், லேப்டாப் உள்ளிட்ட நலத்திட்டங்கள் வழங்கி கல்வித்தரத்தை உயர்த்தினார். அதனை பின்தொடர்ந்து முதல்-அமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் பள்ளி கல்வித்துறைக்கு கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு தரமான அடுக்குமாடி பள்ளி கட்டிடங்கள், நவீனமயமாக்கப்பட்ட ஆய்வு கூடங்கள் அமைத்து மாணவர்களுக்கு இலவச பஸ்பாஸ், சீருடைகள் வழங்கப்பட்டு வருகின்றன.

கடந்த இரண்டாண்டு சாதனையாக மகளிருக்கு ஸ்கூட்டி வழங்குதல், மகளிர்கள் மேம்பாட்டிற்காக விலையில்லா ஆடு, மாடுகள், தற்போது கோழிகளும் வழங்கப்படுகிறது.

தற்போது சட்டமன்றத்தில் 110 விதியின் கீழ் 60 லட்சம் குடும்பத்தினருக்கு ரூ.2 ஆயிரம் சிறப்பு நிதி வழங்க உத்தரவிட்டுள்ளார். வறுமைகோட்டிற்கு கீழ் உள்ளவர்கள் பட்டியல் கடந்த 2004-ல் தயாரிக்கப்பட்டவை என்பதால் இதனை முறைப்படுத்தி நியாயமாக கிடைக்க வேண்டியவர்களுக்கு கிடைக்க வேண்டும் என்பதற்காக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

ஆரணியில் ஒருங்கிணைந்த பஸ் நிலையம் வேண்டுமென முதல்-அமைச்சரிடம் கோரிக்கை வைத்துள்ளேன். அதற்கு 5 ஏக்கர் நிலம் ஏற்பாடு செய்து கொடுத்தால் கண்டிப்பாக ஒருங்கிணைந்த பஸ் நிலையம் அமைக்க நிதி ஒதுக்கீடு செய்வதாக தெரிவித்துள்ளார். அதற்கான இடத்தை தேர்வு செய்ய கலெக்டரிடம் தெரிவித்துள்ளேன். அவரும் இடம் தேர்வு செய்து தருவதாக உறுதியளித்துள்ளார்.

ஆரணி நகரில் ரூ.10 கோடி செலவில் சாலை மேம்பாட்டு பணிக்காக நிதி ஒதுக்கீடு செய்து பணிகள் நாளை முதல் தொடங்கப்பட உள்ளது.

மேலும் வரும் வறட்சியை கருத்தில் கொண்டு ஆரணி, மேற்கு ஆரணி, கண்ணமங்கலம் ஆகிய பகுதிகளுக்கு ரூ.2 கோடியே 60 லட்சம் மதிப்பில் குடிநீர் பராமரிப்பு பணிக்களுக்காக அனுமதி பெறப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் பேசினார்.

கூட்டத்தில் திருவண்ணாமலை வடக்கு மாவட்ட செயலாளர் தூசி கே.மோகன் எம்.எல்.ஏ., தலைமை கழக பேச்சாளர் இடிமுரசு ரவி, செஞ்சி வி.ஏழுமலை எம்.பி, மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற இணை செயலாளர்கள் அ.கோவிந்தராசன், எஸ்.சுந்தரமூர்த்தி, மாவட்ட துணை செயலாளர்கள் டி.கருணாகரன், ரமணிநீலமேகம், மகளிரணி நிர்வாகி கலைவாணி உள்பட நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டனர். முடிவில் ஜெயலலிதா பேரவை மாவட்ட துணைத் தலைவர் ஜி.வெங்கடேசன் நன்றி கூறினார்.

Next Story