பணம் தர மறுத்ததை தட்டிக்கேட்ட டாஸ்மாக் ‘பார்’ உரிமையாளருக்கு கத்திக்குத்து
மது குடித்து விட்டு பணம் தர மறுத்ததை தட்டிக் கேட்ட டாஸ்மாக் பார் உரிமையாளருக்கு கத்திக்குத்து விழுந்தது. இது தொடர்பாக 7 பேர் கும்பலை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
வடவள்ளி,
கோவையை அடுத்த வடவள்ளி- சிறுவாணி ரோட்டில் டாஸ்மாக் மதுபானக்கடை உள்ளது. இதன் அருகே உள்ள பாரில் நேற்று முன்தினம் இரவு 10 மணியளவில் 7 பேர் கொண்ட கும்பல் மது குடிக்க வந்தது. அவர்கள், மது குடித்து விட்டு அங்கிருந்து புறப்பட்டு செல்ல முயன்றனர். இதை பார்த்த ‘பார்’ உரிமையாளர் பழம்பதி (வயது 37) அவர்களை வழிமறித்து மது குடித்ததற்கு பணம் கேட்டு உள்ளார். ஆனால் அவர்கள் பணம் கொடுக்க மறுத்துள்ளனர். இதை அவர் தட்டிக்கேட்டுள்ளார்.
இதனால் அவர்கள் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த அந்த கும்பல் தாங்கள் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து பழம்பதியை சரமாரியாக குத்தியது. இதனால் படுகாயம் அடைந்து வலிதாங்க முடியாமல் கதறி துடித்தார். அவரின் அலறல் சத்தம் கேட்டு அந்த பகுதியை சேர்ந்தவர்கள் விரைந்து வந்தனர். இதை பார்த்த அந்த கும்பல் அங்கிருந்து தப்பி ஓடி விட்டது.
இதையடுத்து பொதுமக்கள் பழம்பதியை மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்த புகாரின் பேரில் வடவள்ளி போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். மேலும் அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளில் 7 பேர் கும்பலின் உருவம் பதிவாகி உள்ளதா? என்று ஆய்வு செய்து வருகின்றனர்.
இது குறித்து வழக்குப்பதிவு செய்து 7 பேர் கும்பலை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். ‘பார்’ உரிமையாளரை 7 பேர் கும்பல் கத்தியால் குத்திய சம்பவம் கோவையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story