ஆற்றில் மணல் அள்ள அனுமதிக்க கோரி புதுவையில் மாட்டு வண்டிகளுடன் தொழிலாளர்கள் ஊர்வலம் போலீசாருடன் தள்ளு–முள்ளு


ஆற்றில் மணல் அள்ள அனுமதிக்க கோரி புதுவையில் மாட்டு வண்டிகளுடன் தொழிலாளர்கள் ஊர்வலம் போலீசாருடன் தள்ளு–முள்ளு
x
தினத்தந்தி 25 Feb 2019 10:30 PM GMT (Updated: 25 Feb 2019 8:34 PM GMT)

சோரியாங்குப்பம் தென் பெண்ணையாற்றில் மூலம் மணல் அள்ள அனுமதிக்ககோரி மாட்டு வண்டிகளுடன் தொழிலாளர்கள் ஊர்வலமாக சென்றனர். ஊர்வலத்தை தடுக்க முயன்றதால் போலீசாருடன் வாக்குவாதம், தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் அங்கு பரபரப்பு நிலவியது.

புதுச்சேரி,

புதுவை மாநிலம் சோரியாங்குப்பம் தென் பெண்ணையாற்றில் மாட்டு வண்டிகள் மூலம் மணல் அள்ளி வினியோகம் செய்ய வேண்டும் என்றும் சி.ஐ.டி.யு. தொழிற்சங்கம் சார்பில் அரசுக்கு வலியுறுத்தப்பட்டு வந்தது. ஆனால் அதற்கு அரசு அனுமதிக்கவில்லை. அதனை கண்டித்தும், மணல் அள்ள அனுமதி வழங்கக்கோரியும் மாட்டு வண்டிகளுடன் ஊர்வலமாக சென்று பாகூர் தாசில்தார் அலுவலகத்தில் வண்டிகளையும், மாடுகளையும் ஒப்படைக்கும் போராட்டம் நடத்தப்போவதாக தொழிற்சங்கத்தினர் அறிவித்து இருந்தனர்.

அதன்படி பாகூர், குருவிநத்தம், சோரியாங்குப்பம், கரையாம்புத்தூர், கிருமாம்பாக்கம், கன்னியக்கோவில், மணப்பட்டு, குடியிருப்புபாளையம் சேலியமேடு உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த மாட்டு வண்டி தொழிலாளர்கள் நேற்றுக்காலை பாகூர் புறவழிச்சாலையில் திரண்டனர்.

அங்கிருந்து மாட்டு வண்டிகளுடன் ஊர்வலமாக செல்ல தயாரானார்கள். அதுபற்றி தகவல் அறிந்ததும் பாகூர் போலீசார் அங்கு விரைந்து வந்து இந்த ஊர்வலத்தால் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படும் என்று கூறி அவர்களை தடுக்க முயன்றனர். அதனால் தொழிலாளர்களுக்கும் அவர்களுக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் சிறிது நேரத்தில் போலீசார் அனுமதித்தனர். அதைத் தொடர்ந்து புறவழிச்சாலையில் இருந்து மாட்டு வண்டிகள் ஊர்வலமாக புறப்பட்டன. தாசில்தார் அலுவலகம் அமைந்துள்ள ரோட்டில் அவர்கள் செல்ல முயன்றபோது பேரிகார்டு வைத்து போலீசார் தடுத்தனர். அதையடுத்து மீண்டும் அங்கு வாக்குவாதம் ஏற்பட்டது.

ஆனால் தடையையும் மீறி அவர்கள் ஊர்வலமாக செல்ல முயன்றதால் போலீசாருக்கும், தொழிலாளர்களுக்குமிடையே தள்ளு முள்ளு ஏற்பட்டது. அதனால் அங்கு பரபரப்பு நிலவியது.

பின்னர் 2 மாட்டு வண்டிகள் மட்டுமே தாசில்தார் அலுவலகத்துக்கு செல்ல முடியும் என்று போலீசார் அனுமதித்ததை தொடர்ந்து 2 வண்டிகளுடன் தொழிலாளர்கள் சென்று அலுவலக வாயிலில் அமர்ந்து தர்ணா போராட்டம் நடத்தினார்கள். ஆற்றில் மணல் அள்ள அனுமதிக்கும்வரை போராட்டம் தொடரும் என்றதால் அங்கு பரபரப்பு நிலவியது.

இந்த நிலையில் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பாகூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் கவுதம் சிவகணேஷ், அரியாங்குப்பம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாபுஜி மற்றும் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். பின்னர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களின் பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தை தாசில்தார் கார்த்திகேயன் பேச்சுவார்த்தை நடத்தினார். அதிகாரிகளின் சமரசத்தை தொழிலாளர்கள் ஏற்க மறுத்தனர். அதனால் போராட்டம் இரவிலும் நீடித்தது.

இந்த நிலையில் போராட்டத்தில் ஈடுபட்ட 100–க்கும் மேற்பட்ட மாட்டு வண்டி தொழிலாளர்களுக்காக தாசில்தார் அலுவலகம் அருகிலேயே கஞ்சி காய்ச்சி வழங்கப்பட்டது. இந்த போராட்டம் காரணமாக அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து வாகனங்களை போலீசார் புறவழிச்சாலை வழியாக மாற்றுப்பாதையில் திருப்பிவிட்டனர்.

புதுச்சேரி மாநிலத்தில் கட்டுமான பணிகளுக்கான மணல் தேவைக்காக அரசு சார்பில் மணல் குவாரி அமைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டதை தொடர்ந்து அரசு சார்பில் மணமேடு பகுதியில் மணல்குவாரி அமைக்க இடம் தேர்வு செய்யப்பட்டு அதற்கான கோப்புகள் தயாரிக்கப்பட்டு மத்திய அரசின் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டது. இதற்கிடையே அந்த இடத்தில் புதுச்சேரி அரசின் திட்ட அமலாக்க முகமை மூலம் அந்த பகுதியில் மணல் அள்ளப்பட்டு அரசு சார்ந்த கட்டுமான பணிகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது. எனவே மாட்டு வண்டி தொழிலாளர்களும் அங்கு மணல் அள்ள அனுமதிக்க வேண்டும் என்று தொழிலாளர்கள் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.


Next Story