அ.தி.மு.க. கூட்டணியை மக்கள் புறக்கணிக்க வேண்டும் - வேப்பூரில் டி.டி.வி. தினகரன் பேச்சு
அ.தி.மு.க. கூட்டணியை மக்கள் புறக்கணிக்க வேண்டும் என்று வேப்பூரில் நடந்த மக்கள் சந்திப்பு பயணத்தில் டி.டி.வி. தினகரன் பேசினார்.
விருத்தாசலம்,
அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணை பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் எம்.எல்.ஏ. தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் ஈடுபட்டுள்ளார். அந்த வகையில் கடலூர் மாவட்டத்தில் 4 நாட்கள் சுற்றுப்பயணத்தை நேற்று அவர் தொடங்கினார்.
அதன்படி நேற்று வேப்பூருக்கு வந்த டி.டி.வி. தினகரனுக்கு, கடலூர் கிழக்கு மாவட்ட செயலாளர் கலைச்செல்வன் எம்.எல்.ஏ. தலைமையில் கட்சி நிர்வாகிகள் வரவேற்பு அளித்தனர். அப்போது மாவட்ட அமைப்பு சாரா ஓட்டுனர் அணி செயலாளர் வேப்பூர் காமராஜ், டி.டி.வி. தினகரனுக்கு வெள்ளி வீரவாளை நினைவு பரிசாக வழங்கினார். இதில் நல்லூர் வடக்கு ஒன்றிய செயலாளர் துரைசாமி, ஒன்றிய நிர்வாகி முயல் முருகேசன் மற்றும் கட்சி நிர்வாகிகள் பலர் உடன் இருந்தனர்.
பின்னர் டி.டி.வி. தினகரன் திறந்தவேனில் நின்றபடி பொதுமக்கள் மத்தியில் பேசியதாவது:-
தமிழகத்தில் நடைபெறும் மக்கள் விரோத ஆட்சியை அகற்ற வேண்டும். தமிழகத்தை வஞ்சிக்கக் கூடிய, மக்களை கண்டுகொள்ளாத, பா.ஜ.க.வுடன் அ.தி.மு.க. கூட்டணி வைத்துள்ளது. இந்த ஆட்சியில் கொள்ளை என புத்தகம் வெளியிட்டவர்களுடனும், சி.பி.ஐ. மூலம் இந்த ஆட்சியை அகற்ற வேண்டும் என்று நினைத்தவர்களுடனும் அ.தி.மு.க. கூட்டணி வைத்துள்ளது. இந்த சந்தர்ப்பவாத கூட்டணியை மக்கள் புறக்கணிக்க வேண்டும்.
69 சதவீத இட ஒதுக்கீடு பெற்றிருந்ததாக உண்மையான சமூக நீதி போராளி ஜெயலலிதா தான். சமூக நீதி காத்த வீராங்கனை என திராவிடர் கழக தலைவர் வீரமணியே பட்டம் கொடுத்துள்ளார்.
காங்கிரஸ் கட்சி 2004-ம் ஆண்டு முதல் 2014-ம் ஆண்டுவரை என்ன செய்தார்கள். தமிழகத்திற்காக எதுவுமே செய்யவில்லை. நீட் தேர்வு, மீத்தேன், ஹைட்ரோ கார்பன் திட்டம் உள்ளிட்ட திட்டங்களை காங்கிரஸ் கட்சி ஆரம்பித்தது. அந்த திட்டங்களை பா.ஜ.க. முடித்து வைத்து விட்டது. இவர்கள் எல்லாம் தமிழ்நாட்டின் நலனில் அக்கறை காட்ட மாட்டார்கள்.
கடந்த நாடாளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. 37 தொகுதிகளில் வெற்றிபெற செய்தவர் ஜெயலலிதா. அவர் உயிரோடு இருந்திருந்தால் அனிதா போன்ற ஏழைகள் உயிர் இழக்க மாட்டார்கள். மக்கள் விரோத மத்திய அரசின் திட்டங்களை ஜெயலலிதா எதிர்த்தார். அவரின் பெயரை சொல்லி ஆட்சி செய்யும் துரோகிகள் தமிழ்நாட்டை ஒதுக்கி வைத்தவர்களுடன் கூட்டணி வைத்துள்ளனர்.
தமிழகத்தில் உள்ள 80 சதவீத இளைஞர்கள் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தில் இணைந்து உள்ளனர். அதனால் சிந்தித்து வாக்களியுங்கள். எந்த சமரசமும் செய்து கொள்ளாத எங்களுக்கு குக்கர் சின்னத்திற்கு நீங்கள் வாக்களிக்க வேண்டும்.
இன்று தமிழகத்தில் ஒரு கோடி இளைஞர்கள் வேலைக்காக காத்திருக்கின்றனர். அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் ஆட்சிக்கு வந்தால் ஒரு கோடி பேருக்கு வேலை கிடைக்கும். வேப்பூரில் மகளிர் கல்லூரி மற்றும் புதிய பேருந்து நிலையம் ஆகியவை அமைத்து தரப்படும். கீழக்குறிச்சியில் ஆரம்ப சுகாதார நிலையம் கட்டித் தரப்படும். அதனால் அனைவரும் சிந்தித்து அ.ம.மு.க. வேட்பாளர்களுக்கு வாக்களிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
தொடர்ந்து டி.டி.வி. தினகரன் வேப்பூரில் இருந்து மு.பரூர், மங்கலம்பேட்டை, விருத்தாசலம் கடைவீதி, கருவேப்பிலங்குறிச்சி, இருப்பு ஆகிய இடங்களில் பொதுமக்கள் மத்தியில் பேசினார்.
அப்போது விருத்தாசலத்தில் டி.டி.வி.தினகரன் எம்.எல்.ஏ. பேசுகையில், விருத்தாசலத்தை தனி மாவட்டமாக அறிவிப்பது, என்.எல்.சி. சுரங்கத்தால் இந்த பகுதியில் நிலத்தடி நீர் பாதிக்கப்பட்டுள்ளதால், குடிநீர் தட்டுப்பாட்டை போக்க விருத்தாசலம் பூதாமூர் மணிமுக்தாற்றில் தடுப்பணை கட்டுவது,விருத்தாசலம் முந்திரி ஆராய்ச்சி நிலையத்தில் வேளாண் பொறியியல் கல்லூரி கொண்டு வருவது உள்ளிட்ட கோரிக்கைகள் இப்பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையாக இருக்கிறது. உங்கள் ஆதரவுடன் அ.ம.மு.க. ஆட்சிக்கு வந்தவுடன் கோரிக்கைகளை நிறைவேற்றித் தரப்படும் என்று அவர் பேசினார்.
முன்னதாக விருத்தாசலத்தில் டி.டி.வி. தினகரனை கட்சி நிர்வாகிகள் வரவேற்றனர். இந்த நிகழ்ச்சியில் எம்.ஜி. ஆர். மன்ற மாநில துணை செயலாளர் சோழன் சம்சுதின், விருத்தாசலம் நகர செயலாளர் மார்க்கெட் நடராஜன், வழக்கறிஞர் பிரிவு மாநில துணை செயலாளர் வக்கீல் செந்தில்குமார், மாவட்ட பொருளாளர் சூரியமூர்த்தி, மாவட்ட வழக்கறிஞர் பிரிவு தலைவர் விசலூர் ஜெயச்சந்திரன், வழக்கறிஞர் பிரிவு மாவட்ட செயலாளர் பாஸ்கர், மாவட்ட இளைஞரணி காமராஜ், மாவட்ட பாசறை ரத்தினராஜன், ஒன்றிய செயலாளர் செல்வராஜ், மாவட்ட பேரவை இணை செயலாளர் அருளாகரன், நகர நிர்வாகிகள் ஜெயபால், சதீஷ்குமார், சேட்டு, அரப்ஷா, இளைஞரணி மணிமாறன், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இன்று (செவ்வாய்க்கிழமை) நெய்வேலி சட்ட மன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளிலும், நாளை (புதன்கிழமை) கடலூர், குறிஞ்சிப்பாடி சட்டமன்ற தொகுதிகளிலும், நாளை மறுநாள் (வியாழக்கிழமை) பண்ருட்டி சட்டமன்ற தொகுதியிலும் மக்கள் சந்திப்பு பயணங்களில் டி.டி.வி. தினகரன் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு பேசுகிறார்.
Related Tags :
Next Story