உடுமலை அரசு மருத்துவமனையில் ரூ.6 கோடியில் கூடுதல் கட்டிடம் கட்டும் பணி - அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் தொடங்கி வைத்தார்


உடுமலை அரசு மருத்துவமனையில் ரூ.6 கோடியில் கூடுதல் கட்டிடம் கட்டும் பணி - அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் தொடங்கி வைத்தார்
x
தினத்தந்தி 26 Feb 2019 4:45 AM IST (Updated: 26 Feb 2019 4:40 AM IST)
t-max-icont-min-icon

உடுமலை அரசு மருத்துவமனையில் ரூ.6 கோடி செலவில் கூடுதல் கட்டிடம் கட்டும் பணிகளை அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் தொடங்கி வைத்தார்.

உடுமலை,

உடுமலை அரசு மருத்துவமனை வளாகத்தில் தேசிய சுகாதார திட்டத்தின் கீழ் ரூ.6 கோடியில் கூடுதல் கட்டிடம் கட்டப்பட உள்ளது. 23 ஆயிரத்து 413 சதுர அடி பரப்பளவில் கூடுதல் கட்டிடம் கட்டப்பட உள்ளது. இதற்கான பூமிபூஜை மற்றும் பணிகள் தொடக்க விழா நேற்று நடந்தது. விழாவிற்கு கலெக்டர் கே.எஸ்.பழனிசாமி தலைமை தாங்கினார். புதிய கட்டிட கட்டுமானப்பணிகளை கால்நடை பராமரிப்பு துறை அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் தொடங்கிவைத்தார்.

இதே விழாவில் குடிமங்கலம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட சோமவாரப்பட்டி, தொட்டம்பட்டி, ஆமந்தக்கடவு ஆகிய 3 ஊராட்சிப்பகுதிகளில் தலா ரூ.24 லட்சத்தில் துணை சுகாதார நிலையக்கட்டிடம் கட்டும் பணிகளையும் அமைச்சர் தொடங்கி வைத்தார். விழாவில் உடுமலை ஆர்.டி.ஓ. அசோகன், மாவட்ட மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இணை இயக்குனர் டாக்டர் கோமதி, தலைமை மருத்துவ அதிகாரி டாக்டர் எம்.முருகன், உடுமலை ஊராட்சி ஒன்றியக்குழு முன்னாள் துணைத்தலைவர் போடிபட்டி ஆர்.ஜி.ஜெகநாதன், முன்னாள் ஒன்றியக்குழு உறுப்பினர் பி.செல்வராஜ், காந்திநகர் கூட்டுறவு வீட்டு வசதி சங்கத்தலைவர் ஏ.ஹக்கீம், உடுமலை கூட்டுறவு வீட்டு வசதி சங்க இயக்குனர்கள் செல்வராஜ், வார்டன் பொன்னுசாமி, வக்கீல் கண்ணன் மற்றும் தாசில்தார் தங்கவேல், வக்கீல் மாரிமுத்து உள்பட பலர் கலந்துகொண்டனர்.

விழாவை தொடர்ந்து அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- உடுமலை அரசு மருத்துவமனையில் ரூ.6 கோடி மதிப்பீட்டில் கூடுதலாக புதிய கட்டிடம் கட்டப்படுகிறது. இதில் 100 படுக்கை வசதிகள் ஏற்படுத்தப்படும்.

பிரசவ முன் கவனிப்பு வார்டு, குளிர்சாதன வசதியுடன் கூடிய நவீன அறுவை சிகிச்சை அரங்கு, குழந்தைகளுக்கான வார்டு, பெண்களுக்கு தனி வார்டு, அவசர சிகிச்சைப்பிரிவு, ரத்த சேமிப்பு வங்கி உள்ளிட்ட கூடுதல் வசதிகள் அமைக்கப்படும். இந்த கட்டிடத்திற்கு மேல் கூடுதலாக 2 தளம் கட்டுவதற்கு ஏற்ற வகையில் இந்த கட்டிடம் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த கட்டிடம் கட்டுமானப்பணிகளை 15 மாதங்களில் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த மருத்துவமனையில் ரத்த சுத்திகரிப்பு கருவி மற்றும் சி.டி.ஸ்கேன் கருவி ஆகியவை விரைவில் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும். மருத்துவத்துறையில் இந்தியாவிலேயே தமிழ்நாடு முதன்மை மாநிலமாக திகழ்கிறது. மருத்துவத்துறையில் மனிதர்களுக்கு சிகிச்சை அளிப்பது போன்று கால்நடைத்துறையின் சார்பில் அனைத்து கால்நடைகளுக்கும் சிகிச்சை அளிக்கவும் பல்வேறு வகையான திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. ஒவ்வொரு துறையிலும் மக்களுக்கு தேவையான திட்டங்கள் முனைப்புடன் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.


Next Story