பெட்ரோலிய குழாய் பதிப்பு திட்ட முதல் கட்ட பணியை நிறுத்த வேண்டும் - திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் குடும்பத்துடன் தர்ணா


பெட்ரோலிய குழாய் பதிப்பு திட்ட முதல் கட்ட பணியை நிறுத்த வேண்டும் - திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் குடும்பத்துடன் தர்ணா
x
தினத்தந்தி 26 Feb 2019 5:00 AM IST (Updated: 26 Feb 2019 2:39 AM IST)
t-max-icont-min-icon

விவசாய நிலங்கள் வழியாக செல்லும் பெட்ரோலிய குழாய் பதிப்பு திட்ட முதல்கட்ட பணியை நிறுத்த வேண்டும் என்று கூறி திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் குடும்பத்துடன் தர்ணாவில் ஈடுபட்டனர்.

திருப்பூர்,

திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று காலை நடைபெற்றது. கூட்டத்துக்கு கலெக்டர் கே.எஸ்.பழனிசாமி தலைமை தாங்கினார். மாவட்ட வருவாய் அதிகாரி சுகுமார் முன்னிலை வகித்தார். பொதுமக்கள் தங்கள் குறைகளை மனுக்களாக கொடுத்தனர்.

பாரத் பெட்ரோலியத்தின் கோவை மாவட்டம் இருகூர் முதல் கர்நாடக மாநிலம் தேவனகொந்தி வரையிலான பெட்ரோலிய எண்ணெய் குழாய் பதிப்பு திட்டத்தால் பாதிக்கப்பட உள்ள விவசாயிகள் கூட்டமைப்பு சார்பில் திருப்பூர், ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலெக்டர் அலுவலகத்துக்கு குடும்பத்துடன் திரண்டு வந்தனர். பின்னர் அவர்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடக்கும் அரங்கு முன்பு தரையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர்.

இதைத்தொடர்ந்து முக்கிய நிர்வாகிகளை மட்டும் கலெக்டரை சந்திக்க போலீசார் அனுமதித்தனர். மற்றவர்களையும் கலெக்டரை சந்திக்க விட வேண்டும் என்று விவசாயிகள் அங்கிருந்த போலீஸ் அதிகாரியிடம் முறையிட்டனர். ஆனால் அவர்களை விடாமல் போலீசார் தடுத்து நிறுத்தினார்கள். அப்போது போலீசாருக்கும், விவசாயிகளுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் அங்கு திடீர் பரபரப்பு ஏற்பட்டது.

தங்களை மரியாதைக்குறைவாக போலீஸ் அதிகாரி பேசியதாக விவசாயிகள் குற்றம்சாட்டினார்கள். பின்னர் வருவாய்த்துறை அதிகாரிகள் வந்து விவசாயிகளிடம் சமாதானம் பேசி கலெக்டரிடம் அவர்களை அழைத்துச்சென்றனர்.

விவசாயிகள் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:-

கொங்கு மண்டலத்தின் 7 மாவட்ட விவசாய நிலங்கள் வழியாக கெயில் நிறுவனம் கியாஸ் குழாய் பதிப்பதை நிறுத்தி வைக்கவும், சாலையோரமாக திட்டத்தை நிறைவேற்ற தமிழக அரசு ஒத்துழைக்கும் என்றும் சட்டமன்றத்தில் முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா கூறினார். ஆனால் தற்போது பாரத் பெட்ரோலியம் நிறுவனம் சார்பில் கோவை மாவட்டம் இருகூர் முதல் கர்நாடகா மாநிலம் தேவனகொந்தி வரை 294 கிலோ மீட்டர் தூரத்துக்கு பெட்ரோலிய குழாய் பதிக்கும் பணிக்கு மத்திய அரசிடம் அனுமதி பெற்று, முதல்கட்டமாக திட்டப்பாதை செல்ல உள்ள நிலங்களின் புல எண்கள் மற்றும் புல வரைபடத்தை சேகரிக்கும் பணியை தொடங்கியுள்ளது.

இதன் மூலமாக கோவை, திருப்பூர், ஈரோடு, நாமக்கல், சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் 8 ஆயிரம் விவசாய குடும்பத்தினர் பாதிக்கப்படுவார்கள். அவர்களின் எதிர்கால வாழ்வாதாரம் கேள்விக்குறியாகும். இந்த திட்டத்தால் ஒட்டுமொத்த நிலத்தின் மதிப்பு சரிவதுடன் நிலம் துண்டாடப்படுவதால் பாகப்பிரிவினை செய்ய இயலாது. தென்னை உள்ளிட்ட மரங்களை சம்பந்தப்பட்ட நிலத்தில் வளர்க்க முடியாது. திட்டப்பாதையில் உள்ள நிலத்தடி நீரை பயன்படுத்த முடியாதது போன்ற கடுமையான பாதிப்புகள் ஏற்படும். எனவே தமிழக அரசின் கொள்கை முடிவுப்படி எண்ணெய் குழாய் திட்டங்களை சாலையோரமாக செயல்படுத்த வேண்டும். வருவாய்துறையில் புல எண்கள், புல வரைபடம் சேகரிக்கும் பணியை உடனடியாக நிறுத்த வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் அவர்கள் கூறியுள்ளனர்.

மனுவை பெற்றுக்கொண்ட கலெக்டர், இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள், விவசாயிகளுடன் ஆலோசனைக்கூட்டம் நடத்தி முடிவு செய்யப்படும் என்று கூறினார். பின்னர் இதுகுறித்து விவசாயிகள் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் பொன்னையன் நிருபர்களிடம் கூறும்போது, தமிழகத்தில் விவசாயிகளிடம் இருந்து நிலத்தை பறித்து வருகிறார்கள். எங்களுக்கு ரூ.6 ஆயிரம் உதவித்தொகை வேண்டாம். நிலங்கள் தான் எங்களுக்கு முக்கியம். கொங்கு மண்டலம், தஞ்சை மண்டலம் பகுதியை சேர்ந்த விவசாயிகளை ஒருங்கிணைத்து விவசாய நிலங்களை பறிபோகாமல் தடுக்க முடிவு செய்துள்ளோம். வரும் நாடாளுமன்ற தேர்தலில் எங்கள் கோரிக்கையை தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டு உறுதி அளிப்பவர்களுக்கு ஆதரவை தெரிவிப்போம் என்றார்.

கட்சி சார்பற்ற தமிழக விவசாயிகள் சங்க மாநில தலைவர் சண்முகம், செயலாளர் சந்திரசேகர், திருப்பூர் மாவட்ட தலைவர் ஈஸ்வரன் உள்ளிட்டவர்கள் உடன் இருந்தனர்.


Next Story