டாஸ்மாக் மேற்பார்வையாளரை வெட்டி ரூ.47 ஆயிரத்தை கொள்ளையடித்த 2 பேர் கைது
மயிலம் அருகே டாஸ்மாக் மேற்பார்வையாளரை அரிவாளால் வெட்டி ரூ.47 ஆயிரத்தை கொள்ளையடித்த 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மயிலம்,
மயிலம் அடுத்த கூட்டேரிப்பட்டு சந்தைமேடு தனியார் பெட்ரோல் பங்க் அருகே டாஸ்மாக் கடை இயங்கி வருகிறது. இந்த கடையில் ஆல கிராமத்தை சேர்ந்த சங்கர்(வயது 43) என்பவர் மேற்பார்வையாளராகவும், ஆல கிராமத்தை சேர்ந்த திருவேங்கிடம்(44), விழுப்புரத்தை சேர்ந்த சோழன்(43) ஆகியோர் விற்பனையாளர்களாகவும் பணிபுரிந்து வருகிறார்கள். கடந்த 22-ந்தேதி இரவு வியாபாரம் முடிந்ததும் மேற்பார்வையாளர் சங்கர், திருவேங்கிடம், சோழன் ஆகிய 3 பேரும் மது விற்றதில் வசூலான தொகை ரூ.1 லட்சத்து 81 ஆயிரத்தில், ரூ.1 லட்சத்து 34 ஆயிரத்தை சங்கரும், ரூ.47 ஆயிரத்தை சோழனும் எடுத்துக் கொண்டு கடையை பூட்டுவதற்காக வெளியே வந்தனர்.
அப்போது 2 மோட்டார் சைக்கிளில் அரிவாள்களுடன் வந்த 6 பேர் கொண்ட கும்பல், சங்கரை அரிவாளால் வெட்டியது. இதில் பயந்துபோன சங்கர் அங்கிருந்து ஓட்டம் பிடித்தார். இதைபார்த்த சோழன் தன்னையும் வெட்டி விடுவார்களோ? என நினைத்து தன்னிடம் இருந்த ரூ.47 ஆயிரத்தை தூக்கி வீசிவிட்டு அங்கிருந்து ஓட்டம் பிடித்தார். அதை எடுத்துக் கொண்ட கும்பல் மீண்டும் சங்கரை துரத்திச் சென்றனர். அந்த சமயத்தில் வழக்கம்போல் பாதுகாப்புக்கு வரும் மயிலம் போலீஸ்காரர் ஒருவர் டாஸ்மாக் கடைக்கு வந்தார். போலீஸ்காரர் வருவதை பார்த்த அந்த கும்பல் அங்கிருந்து, தாங்கள் வந்த மோட்டார் சைக்கிள்களில் தப்பிச் சென்று விட்டது. இந்த சம்பவம் குறித்த புகாரின்பேரில் மயிலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
இதற்கிடையே இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட 6 பேர் கொண்ட கும்பலை பிடிக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் உத்தரவின்பேரில் திண்டிவனம் துணை போலீஸ் சூப்பிரண்டு திருமால் மேற்பார்வையில் மயிலம் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) விஜி, சப்-இன்ஸ்பெக்டர்கள் விவேகானந்தன், ஆறுமுகம் ஆகியோர் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு, கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட கும்பல் குறித்து விசாரணை நடத்தியதோடு, அவர்களை வலைவீசி தேடியும் வந்தனர்.
அப்போது கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட 2 பேர் விபத்தில் சிக்கியதாகவும், அதில் ஒருவர் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் உள்நோயாளியாக சிகிச்சை பெற்று வருவதாகவும், மற்றொருவர் மேல்சிகிச்சைக்காக சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு, அங்கு சிகிச்சை பெற்று வருவதாகவும் தனிப்படை போலீசாருக்கு தெரியவந்தது.
இதையடுத்து உஷாரான போலீசார் முண்டியம்பாக்கம் மருத்துவமனைக்கு விரைந்து சென்று, அங்கு சிகிச்சை பெற்று வந்தவர் மற்றும் அவருக்கு உதவியாக மருத்துவமனையில் இருந்த மற்றொரு நபரை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்களில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தவர் சென்னை அனகாபுத்தூரை சேர்ந்த கந்தன் மகன் சீனுவாசன்(41) என்பதும், அவருக்கு உதவியாக இருந்தவர் சிவகங்கை மாவட்டம் திருப்பாச்சேத்தி ஆவாரங்காட்டை சேர்ந்த மோகன் மகன் அஜய்தேவன்(19) என்பதும் தெரியவந்தது. மேலும் இவர்கள் 2 பேரும் மேல்சிகிச்சைக்காக சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்ட சிவகங்கை மாவட்டம் திருபுவனத்தை சேர்ந்த குமார் மகன் பாலாஜி(31) உள்ளிட்டோ ருடன் சேர்ந்து டாஸ்மாக் மேற்பார்வையாளரை வெட்டி ரூ.47 ஆயிரத்தை கொள்ளை அடித்துச் சென்றது தெரியவந்தது. இதையடுத்து போலீசார், அடையாளம் காட்டுவதற்காக டாஸ்மாக் ஊழியர்களான சங்கர், சோழன் ஆகியோரை முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அழைத்து வந்து, அவர்கள் 2 பேரும் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டவர்களா? என கேட்டனர்.
அதற்கு டாஸ்மாக் ஊழியர்கள் இவர்கள் இருவரும் கொள்ளை சம்பவத்தில் தொடர்புடையவர்கள் என அடையாளம் காட்டினர்.
இதையடுத்து சீனுவாசன், அஜய்தேவன் ஆகியோரை போலீசார் கைது செய்து, அவர்களிடம் இருந்த ரூ.15 ஆயிரம் மற்றும் கொள்ளை சம்பவத்துக்கு பயன்படுத்திய வீச்சரிவாள், கத்தி, 2 மோட்டார் சைக்கிள்களை பறிமுதல் செய்தனர். இதுகுறித்து துணை போலீஸ் சூப்பிரண்டு திருமால் கூறுகையில், டாஸ்மாக் கடை ஊழியரை வெட்டி பணத்தை கொள்ளையடித்த வழக்கில் 2 பேரை கைது செய்துள்ளோம். சென்னை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் பாலாஜி உடல்நலம் தேறியவுடன் கைது செய்யப்படுவார். தலைமறைவாக உள்ள மேலும் 3 பேரை விரைவில் கைது செய்வோம் என்றார்.
Related Tags :
Next Story