வானூர் அருகே வீடு புகுந்து 21 பவுன் நகைகள் கொள்ளை
வானூர் அருகே வீடு புகுந்து 21 பவுன் நகைகளை கொள்ளையடித்து சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
வானூர்,
வானூர் தாலுகா நாராயணிபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் குமார். இவர் வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார். இவருடைய மனைவி பிரியா மற்றும் குடும்பத்தினர் நாராயணிபுரத்தில் வசித்து வருகிறார்கள். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு வீட்டில் உள்ளவர்கள் காற்றுக்காக வீட்டின் முன்பக்க கதவை திறந்து வைத்து விட்டு தூங்கியதாக கூறப்படுகிறது. நள்ளிரவில் மர்ம நபர்கள் வீட்டுக்குள் புகுந்து, வீட்டில் இருந்த பீரோவை உடைத்துள்ளனர். பின்னர் அதில் இருந்த நகைப்பெட்டியை எடுத்து 21 பவுன் நகைகளை கொள்ளையடித்துவிட்டு, தப்பிச் சென்றுவிட்டனர்.
நேற்று காலை வீட்டில் உள்ளவர்கள் எழுந்து பார்த்தபோது பீரோ உடைந்து கிடந்ததையும், அதில் வைக்கப்பட்டிருந்த நகைகள் கொள்ளை போனதையும் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். கொள்ளை போன நகைகளின் மதிப்பு ரூ.4½ லட்சம் இருக்கும் என்று கூறப்படுகிறது.
இதுகுறித்து வானூர் போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் சரவணன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து நகைகளை திருடிச்சென்ற மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.
நாராயணிபுரத்தில் இதுபோல் வீடு புகுந்து திருடும் சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. நேற்று முன்தினம் இரவு நடைபெற்ற கொள்ளை சம்பவம் 6-வது சம்பவமாகும். ஆனால் இதுவரை கொள்ளையர்கள் யாரும் கைது செய்யப்படவில்லை. அதனால் கிராம மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
Related Tags :
Next Story