கடன் வாங்கி பசுமை வீடு கட்டிய பயனாளிகள் அரசு பணம் வழங்காததால் தவிப்பு


கடன் வாங்கி பசுமை வீடு கட்டிய பயனாளிகள் அரசு பணம் வழங்காததால் தவிப்பு
x
தினத்தந்தி 26 Feb 2019 3:45 AM IST (Updated: 26 Feb 2019 2:51 AM IST)
t-max-icont-min-icon

கடன் வாங்கி பசுமை வீடு கட்டியவர்களுக்கு அரசு இன்னும் பணம் வழங்காததால் பயனாளிகள் தவித்து வருகின்றனர்.

மணப்பாறை,

வீடு இல்லாத ஏழை, எளிய மக்களுக்கு அரசு சார்பில் பல்வேறு திட்டங்களில் கீழ் வீடுகள் வழங்கப்பட்டு வருகிறது. இதே போல் பசுமை வீடு திட்டத்தின் மூலமும் ஒரு வீட்டிற்கு அரசு சார்பில் ரூ.2 லட்சத்து 10 ஆயிரம் வழங்கப்படுகிறது. இதில் ரூ.30 ஆயிரம் சோலாருக்கு எடுத்துகொள்ளப்பட்டு, மீதமுள்ள தொகை பயனாளிகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது.

அரசு நிர்ணயித்துள்ள அளவு மற்றும் விதிமுறைகளின் படி மிகவும் குறைந்த செலவில் வீடு கட்ட வேண்டும் என்றாலும் கூட ரூ.4 லட்சத்தை கடந்து விடுகிறது. இருப்பினும் பாதி தொகையை கடன் பெற்றாவது ஒரு வீட்டை கட்டி விடலாம் என்ற ஆசையுடன் பல ஏழைகள் வீடு கட்டி வருகின்றனர். இந்த திட்டத்தில் மணப்பாறை, வையம்பட்டி, மருங்காபுரி ஆகிய 3 ஒன்றியங்களிலும் இந்த ஆண்டிற்காக (2018-19) பசுமை வீடுகள் வழங்கப்பட்டுள்ளது.

கடன் வாங்கி

அதன்படி மணப்பாறை ஒன்றியத்தில் 57 வீடுகளும், வையம்பட்டி ஒன்றியத்தில் 37 வீடுகளும், மருங்காபுரி ஒன்றியத்தில் 66 வீடுகளும் ஒதுக்கீடு செய்யப்பட்டு பயனாளிகள் வீட்டை கட்டி வருகின்றனர். பலரும் வீட்டை கட்டி முடித்து விட்டனர். ஆனால் வீடு கட்டுவதற்கு சிமெண்டு, கம்பி உள்ளிட்ட ஏதும் வழங்கவில்லை. எப்படியும் அரசாங்கம் நமக்கு தந்து விடும் என்ற நம்பிக்கையில் பயனாளிகள் கடன் வாங்கி, தங்களிடம் இருந்த தொகை என அனைத்தையும் வைத்து வீட்டை கட்டி விட்டனர்.

ஆனால் அப்படி வீடுகட்டியவர்களுக்கு இதுவரை ஒரு தவணை தொகை கூட வழங்கப்படவில்லை. இதனால் வீடுகட்ட வாங்கிய கடனை அடைக்க முடியாமலும், கடனுக்கு வட்டி கட்ட முடியாமலும் அவதி அடைந்து வருகின்றனர். சிலர் தங்களது வாழ்வாதாரமான கால்நடைகளை விற்று வட்டி கட்டி பசுமை வீட்டுக்காக வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வருகின்றனர்.

கோரிக்கை

பல இடங்களில் வீடுகள் கட்டி பாதியில் நிற்கிறது. கடந்த ஆண்டு வையம்பட்டி ஒன்றியத்தில் கட்டப்பட்ட 55 வீடுகளில் 26 வீடுகளுக்கு இன்னும் பணம் வழங்கப்படவில்லை. இதற்காக அந்த பயனாளிகள் பலமுறை அலைந்தும் பணத்தை பெற முடியவில்லை. எனவே பசுமை வீடுகள் திட்டத்தில் வீடு கட்டிய பயனாளிகளுக்கு உடனடியாக பணம் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் கோரிக்கை விடுத்துள்ளனர். 

Next Story