கலெக்டர் அலுவலகத்துக்கு பட்டங்களை பறக்கவிட்டபடி வந்த விவசாயிகள் அனைத்து கடன்களையும் தள்ளுபடி செய்ய வலியுறுத்தி கோஷம்


கலெக்டர் அலுவலகத்துக்கு பட்டங்களை பறக்கவிட்டபடி வந்த விவசாயிகள் அனைத்து கடன்களையும் தள்ளுபடி செய்ய வலியுறுத்தி கோஷம்
x
தினத்தந்தி 26 Feb 2019 4:15 AM IST (Updated: 26 Feb 2019 3:04 AM IST)
t-max-icont-min-icon

அனைத்து விவசாய கடன்களையும் தள்ளுபடிசெய்யக்கோரி பட்டங்களை பறக்கவிட்டபடி கலெக்டர் அலுவலகத்துக்கு விவசாயிகள் வந்தனர். மேலும் அவர்கள் கோரிக்கை அட்டைகளை கழுத்தில் அணிந்து கோஷங்களும் எழுப்பினர்.

தஞ்சாவூர்,

தஞ்சை கலெக்டர் அலுவலகத்துக்கு தமிழக விவசாயிகள் சங்கங்களின் கூட்டு இயக்க மாநில துணைத்தலைவர் சுகுமாறன் தலைமையில் மாவட்ட தலைவர் ஜெயபால், செயலாளர் சக்திவேல் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட விவசாயிகள் பட்டங்களை பறக்க விட்டபடி வந்தனர். பின்னர் அவர்கள், அனைத்து விவசாய கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும். வங்கியில் அடகு வைத்த நகைகளை ஏலம் விடக்கூடாது என கோஷங்கள் எழுப்பினர்.

மேலும் அவர்கள் இந்த கோரிக்கைகளை அட்டையில் எழுதி அதை கழுத்தில் தொங்கவிட்டபிடி வந்தனர். பின்னர் அவர்கள் கலெக்டர் அண்ணாதுரையிடம் கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது:-

மத்திய அரசும், மாநில அரசும், விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ.6 ஆயிரம் ஊதியம் வழங்குவது ஒரு வட்டத்திற்கு 2 அல்லது 3 பேருக்கு மேல் பயன்பெற முடியாது. காரணம் குடும்பத்தில் யாரும் பட்டதாரியாக இருக்க முடியாது. பட்டா நிலம் வைத்திருப்பவர்களுக்கு மட்டும் தான். குத்தகை நிலம் வைத்திருப்பவர்களுக்கு பொருந்தாது. இது போல் விவசாயிகளுக்கு சலுகை என்று சொல்லி ஏமாற்றாதே, இது வெறும் காகித அறிக்கை தான். இது காற்றில் பறக்கும் பட்டம் போல் உள்ளது.

மேலும் மாநில அரசு 2 ஆயிரம் வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ளவர்களுக்கு மட்டும் என்று கூறி உள்ளது. இது ஆளும் கட்சிக்காரர்களுக்கு மட்டும் தான் சலுகை. கரும்புக்கான நிலுவைத்தொகையை 4 ஆண்டாக வழங்கவில்லை. இதனால் அடகு வைத்த நகைகளை மீட்க முடியவில்லை. விவசாயிகளின் நகைக்கடன், விவசாய கடனுக்கு நகைகளை ஏலம் விடுவதை உடனே ரத்து செய்ய வேண்டும். விவசாயிகளை தற்கொலையில் இருந்து காப்பாற்ற வேண்டும். அனைத்து விவசாய கடன்களையும் தள்ளுபடி செய்ய வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது.

திருவிடைமருதூர் தாலுகா நரசிங்கன்பேட்டை தியாகராஜபுரத்தைச் சேர்ந்த 50க்கும் மேற்பட்ட பெண்கள் கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது:-

நாங்கள் கூலி வேலை செய்து பிழைப்பை நடத்தி வருகிறோம். ஆனால் எங்களது பெயர் வறுமைகோட்டிற்கு கீழ் உள்ளவர்கள் பட்டியலில் இடம் பெறவில்லை. இதனால் அரசின் நலத்திட்ட உதவிகள் எதுவும் கிடைப்பது இல்லை. எங்கள் பகுதியைச் சேர்ந்த வசதி படைத்தவர்களுக்கு அரசின் நலத்திட்ட உதவிகள் எல்லாம் கிடைக்கிறது. தற்பொழுது தமிழக அரசால் வழங்கப்படவுள்ள ரூ.2 ஆயிரமும் எங்களுக்கு கிடைக்காது என்று தெரியவருகிறது. எனவே உண்மையாக வறுமைகோட்டிற்கு கீழ் உள்ள எங்களை வறுமைகோட்டிற்கு கீழ் உள்ளவர்கள் பட்டியலில் சேர்க்க வேண்டும்

இவ்வாறு அதில் கூறி இருந்தனர்.

தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு காவாலிப்பட்டி, கருவாவிடுதி, பணிகொண்டான்விடுதி ஆகிய 3 கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்கள் அளித்த மனுவில், “எங்கள் பகுதியில் 100க்கும் மேற்பட்ட ஓட்டு வீடுகள் கஜா புயலால் பாதிப்படைந்தது. நாங்கள் தங்குவதற்கு வீடுகள் இல்லாமல் இருக்கிறோம். கஜா புயல் தாக்கி 100 நாட்களை கடந்து விட்டது. ஆனால் இதுநாள் வரை நிவாரணம் வழங்கப்படவில்லை. எனவே கஜா புயலால் தாக்கப்பட்ட எங்களுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும்”என கூறி இருந்தனர்.

தஞ்சை மருத்துவக்கல்லூரி சாலையில் உள்ள கருணாநிதி நகரை சேர்ந்த பொதுமக்கள் அளித்த மனுவில், கடந்த 1972ம் ஆண்டு பிரதமராக இருந்த மறைந்த இந்திராகாந்தி குடும்பக்கட்டுப்பாட்டை ஊக்குவிப்பதற்காக அனைத்து மாநிலங்களிலும் அறிவுறுத்தியிருந்தார். இதன் அடிப்படையில் அப்போது தமிழகத்தின் முதல்-அமைச்சராக இருந்த கருணாநிதி குடும்பக்கட்டுப்பாடு செய்தவர்களுக்கு தஞ்சை மருத்துவக்கல்லூரியின் பின்புறம் 14ஏக்கரில் இடம் கொடுத்தார்.

அவ்வாறு 248 குடும்பங்களை சேர்ந்தவர்களுக்கு கொடுத்த இந்த இடத்தில் கடந்த 46 ஆண்டு காலத்திற்கும் மேலாக வசித்து வருகிறோம். இந்த பகுதியில் வசிப்பவர்கள் எல்லோரும் ஏழை தொழிலாளிகள். கடந்த 46 ஆண்டு காலமாக இந்த இடத்திற்கு பட்டா கேட்டு செல்லாத அலுவலகம் இல்லை. ஆனால் இதுநாள் வரை பட்டா கிடைக்கவில்லை. எனவே எங்களுக்கு இனியும் காலம் தாழ்த்தாமல் பட்டா வழங்க வேண்டும்”என கூறி இருந்தனர்.

Next Story