குடியிருப்புகள், வழிபாட்டு தலங்களுக்கு சீல் வைக்க எதிர்ப்பு-நகராட்சி அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகை
குடியிருப்புகள், வழிபாட்டு தலங்களுக்கு சீல் வைக்க எதிர்ப்பு தெரிவித்து நகராட்சி அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டனர். முதற்கட்டமாக 258 வணிக வளாகங்களை மூட நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வருகிறது.
கொடைக்கானல்,
கொடைக்கானல் நகர் பகுதியில் அனுமதியின்றியும், அனுமதிக்கப்பட்ட அளவுகளை விட அதிக அளவில் கட்டப்பட்ட 1,415 கட்டிடங்களை பூட்டி ‘சீல்’ வைக்க மதுரை ஐகோர்ட்டு உத்தரவு பிறப்பித்தது. இதுதொடர்பான அறிக்கையை அடுத்த மாதம் (மார்ச்) 11-ந் தேதி தாக்கல் செய்யவும் உத்தரவிட்டது.
இதற்கான கணக்கெடுப்பு பணிகளில் நகராட்சி அதிகாரிகள் முழுவீச்சில் ஈடுபட்டனர். இதனையடுத்து பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் பொதுமக்கள் 200-க்கும் மேற்பட்டோர் நகராட்சி அலுவலகத்தை நேற்று முற்றுகையிட்டு ஆணையாளரிடம் பல கோரிக்கைகளை முன் வைத்தனர்.
அதில், சீல் வைக்கும் கட்டிடங்களின் உரிமையாளர்களுக்கு முறைப்படியான நோட்டீஸ் கொடுக்க வேண்டும், கால அவகாசம் வழங்க வேண்டும், அனுமதியின்றி கட்டப்பட்ட அரசு கட்டிடங்களுக்கு முதலாவதாக சீல் வைக்க வேண்டும். குடியிருப்புகள், வழிபாட்டு தலங்களுக்கு சீல் வைப்பதற்கு கால அவகாசம் வழங்க வேண்டும் என கேட்டுக்கொண்டனர். அவர்களிடம் ஆணையாளர் முருகேசன், போலீஸ் துணை சூப்பிரண்டு பொன்னுச்சாமி ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தி கலைந்து போக செய்தனர்.
இதுதொடர்பாக நகராட்சி ஆணையாளர் முருகேசன் நிருபர்களிடம் கூறியதாவது:-
மதுரை ஐகோர்ட்டு கிளையின் திருத்திய உத்தரவின்படி நகர் பகுதியில் உள்ள குடியிருப்பு பகுதிகள், அரசு மற்றும் பொது பயன்பாட்டு கட்டிடங்கள், வழிபாட்டு தலங்கள் ஆகியவற்றினை தவிர்த்து மீதம் உள்ள 258 வணிக வளாக கட்டிடங்களுக்கு சீல் வைத்து மூடும் பணி தொடங்க உள்ளது. இதற்காக பல்வேறு நகராட்சிகளில் இருந்து வருகை தந்த நகரமைப்பு ஆய்வாளர்கள் தலைமையில் 4 தனி குழுக்களாக பிரிக்கப்பட்டு சீல் வைக்கும் பணிகள் இன்று (செவ்வாய்க்கிழமை) தொடங்கப்படும். அனைத்து கட்டிடங்களுக்கும் சீல் வைக்கப்பட்டு மார்ச் 11-ந் தேதிக்குள் மதுரை ஐகோர்ட்டில் அறிக்கை தாக்கல் செய்யப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
பேட்டியின் போது நகரமைப்பு அலுவலர் முருகானந்தம், ஆய்வாளர் ரவிச்சந்திரன், பொறியாளர் சாகுல்அமீது ஆகியோர் உடன் இருந்தனர்.
Related Tags :
Next Story