வேலூர் மாவட்டத்தில் டவுன் பஸ்களில் திடீர் கட்டண உயர்வு


வேலூர் மாவட்டத்தில் டவுன் பஸ்களில் திடீர் கட்டண உயர்வு
x
தினத்தந்தி 26 Feb 2019 3:00 AM IST (Updated: 26 Feb 2019 3:14 AM IST)
t-max-icont-min-icon

வேலூர் மாவட்டத்தில் டவுன் பஸ்களில் திடீரென கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.

வேலூர், 

வேலூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியூர் மற்றும் வெளி மாவட்டங்களுக்கு செல்லும் அரசு பஸ்களில் கட்டணம் உயர்த்தப்பட்டது. இந்த நிலையில் திடீரென வேலூர் மாவட்டத்தில் இயக்கப்படும் டவுன் பஸ்களிலும் எந்தவித அறிவிப்பும் இன்றி கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.

அனைத்து நிறுத்தங்களிலும் நின்றுசெல்லும் டவுன் பஸ்கள் தற்போது எல்.எஸ்.எஸ். என மாற்றப்பட்டுள்ளது. இதனால் குறிப்பிட்ட நிறுத்தங்களில் மட்டுமே நிறுத்தப்படுகிறது. அதோடு கட்டணமும் உயர்த்தப்பட்டுள்ளது. இதன் மூலம் குறைந்தபட்ச கட்டணம் ரூ.4-ல் இருந்து ரூ.5-ஆக உயர்த்தப்பட்டுள்ளது. வெளியூர்களுக்கு செல்லும் பஸ்களில் 10 கிலோமீட்டர் தூரம் வரை குறைந்த பட்சம் ரூ.6 கட்டணமாக வசூலிக்கப்பட்டது. தற்போது ரூ.7 வசூல் செய்யப்படுகிறது.

15 கிலோமீட்டர் தூரத்திற்கு ரூ. 9 மட்டுமே வசூலிக்கப்பட்டு வந்ததாகவும், இந்த கட்டணம் தற்போது ரூ.12 முதல் ரூ.14 வரை உயர்த்தி வசூலிக்கப்படுவதாகவும் பயணிகள் குற்றம்சாட்டுகின்றனர். டவுன் பஸ்கள் எல்.எஸ்.எஸ். என மாற்றப்பட்டு குறிப்பிட்ட இடங்களில் மட்டுமே நிறுத்தப்படுவதால் பொதுமக்கள் மட்டுமின்றி மாணவ- மாணவிகளும் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். மேலும் பஸ்கட்டண உயர்வு காரணமாக பயணிகளுக்கும், கண்டக்டர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு வருகிறது.

பஸ் கட்டணம் உயர்த்தப்பட்டு குறிப்பிட்ட நிறுத்தங்களில் மட்டுமேநிறுத்தினாலும் பயண நேரம் குறையவில்லை. மேலும் பஸ்களும் அடிக்கடி பழுதாகி நின்றுவிடுவதாகவும் பயணிகள் கூறுகிறார்கள். முன்னறிவிப்பின்றி உயர்த்தப்பட்ட கட்டண உயர்வை குறைக்கவேண்டும் என்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story