கள்ளக்காதல் விவகாரத்தில் கொலை செய்யப்பட்ட 1½ வயது குழந்தையின் உடல் தோண்டி எடுப்பு
கள்ளக்காதல் விவகாரத்தில் கொலை செய்யப்பட்ட 1½ வயது குழந்தையின் உடல் தோண்டி எடுக்கப்பட்டு, தாசில்தார் முன்னிலையில் பிரேதபரிசோதனை செய்யப்பட்டது.
பண்ருட்டி,
பண்ருட்டியை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன் மகன் நடராஜன், வக்கீல். இவருக்கு 2 மனைவிகள் உள்ளனர். இந்த நிலையில் நடராஜனுக்கு பண்ருட்டி வள்ளலார் தெருவைச்சேர்ந்த கமலி(28) என்பவருடன் கள்ளக்காதல் ஏற்பட்டதாக தெரிகிறது.
இந்த விவகாரம் நடராஜனின் 2-வது மனைவி தைரியலட்சுமிக்கு தெரியவந்தது. இதையடுத்து அவர் கணவர் நடராஜனையும், கமலியையும் கண்டித்துள்ளார். கள்ளக்காதலுக்கு இடையூறாக உள்ள தைரியலட்சுமியை பழிவாங்க கமலியும், நடராஜனும் திட்டமிட்டனர்.
இந்த நிலையில் கமலியின் வீடு அருகே உள்ள தைரியலட்சுமியின் உறவினரான முருகன்-சிவரஞ்சனி தம்பதியர் வீட்டுக்கு தைரியலட்சுமி அடிக்கடி வந்துசெல்வார். இதனால் சிவரஞ்சனியின் 1½ வயது மகள் பிரியதர்ஷினியை கொலை செய்து விட்டு, பழியை தைரியலட்சுமி மீது போட்டு விடலாம் என்று கமலியும்- நடராஜனும் சேர்ந்து சதித்திட்டம் தீட்டியதாக தெரிகிறது.
அதன்படி, 19.12.2018 அன்று சிவரஞ்சனி தனது மூத்த மகளை பள்ளியில் இருந்து அழைத்து வருவதற்காக சென்றார். இதனால் அவர் பிரியதர்ஷினியை பார்த்துக்கொள்ளுமாறு கமலியிடம் கூறி விட்டு சென்றிருந்தார். அப்போது கமலி, குழந்தை பிரியதர்ஷினியை தலையணையால் அமுக்கி கொலை செய்துவிட்டு எதுவும் தெரியாதது போல இருந்தார்.
சிறிதுநேரம் கழித்து வீட்டுக்கு வந்த சிவரஞ்சனி, பிரியதர்ஷினி மூச்சுபேச்சு இல்லாமல் கிடந்ததால் அவர், குழந்தையை தூக்கிக்கொண்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு சென்றார். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள், ஏற்கனவே குழந்தை இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.
இதனால் அதிர்ச்சியடைந்த அவரது பெற்றோர், உறவினர்கள் குழந்தை திடீரென மூச்சுதிணறல் ஏற்பட்டு இறந்ததாக நினைத்து கெடிலம் ஆற்றங்கரையோரம் உள்ள சுடுகாட்டில் உடலை அடக்கம் செய்தனர். இருப்பினும் கமலியின் நடவடிக்கை அப்பகுதியில் சந்தேகத்தை ஏற்படுத்தியது.
இது பற்றி பண்ருட்டி கிராம நிர்வாக அதிகாரி தங்கமணி சம்பவ இடத்துக்கு நேரில் சென்று விசாரித்தார். இதில் பயந்து போன கமலி, தங்கமணியிடம் குழந்தை பிரியதர்ஷினியை கொன்றுவிட்டு கடந்த 2 மாதமாக நாடகமாடியதாக தெரிவித்தார். பின்னர் இது குறித்த புகாரின் பேரில் கமலி, வக்கீல் நடராஜன் ஆகியோர் மீது போலீசார் வழக்குப்பதிந்து கமலியை கைது செய்தனர். மேலும் தலைமறைவான நடராஜனை தேடி வருகின்றனர்.
இந்த நிலையில் குழந்தை பிரியதர்ஷினியின் உடலை தோண்டி எடுத்து பிரேத பரிசோதனை செய்ய போலீசார் முடிவு செய்தனர். அதன்படி, நேற்று பண்ருட்டியில் தாசில்தார் ஆறுமுகம் முன்னிலையில் குழந்தை பிரியதர்ஷினியின் உடல் தோண்டி எடுக்கப்பட்டது.
பின்னர் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவக்குழுவினர் அங்கேயே பிரேதபரிசோதனை செய்தனர். அதன்பிறகு மீண்டும் குழந்தையின் உடல் அங்கேயே புதைக்கப்பட்டது. இந்த வழக்கு தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story