நெல்லிக்குப்பத்தில் பரபரப்பு டிரைவர்கள் மீது மர்ம கும்பல் தாக்குதல்
நெல்லிக்குப்பத்தில் டிரைவர்கள் மீது மர்ம கும்பல் தாக்குதல் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
நெல்லிக்குப்பம்,
நெல்லிக்குப்பம் தனியார் சர்க்கரை ஆலையில் தற்போது கரும்பு அரவை பருவம் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதையொட்டி அந்த ஆலைக்கு நெல்லிக்குப்பம், மேல்பட்டாம்பாக்கம், பண்ருட்டி, மருதாடு மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமத்தை சேர்ந்த விவசாயிகள் அறுவடை செய்த கரும்புகளை டிராக்டர், மினிலாரிகளில் ஏற்றிக்கொண்டு ஆலைக்கு எடுத்து வருவார்கள். அவ்வாறு எடுத்துவரப்படும் வாகனங்களை ஆலையின் யார்டு பகுதிக்கு எடுத்துச் செல்லப்பட்டு கரும்பு எடைப்போடப்படும்.
கரும்பு ஏற்றி வரும் வாகனங்கள் யார்டில் நிறுத்தப்பட்ட பின்பு, அதன் டிரைவர்கள் இரவு ஓய்வு எடுப்பது வழக்கம். அதன்படி, நேற்று முன்தினம் ஆலையின் யார்டில் 50-க்கும் மேற்பட்ட டிரைவர்கள் தங்களின் வாகனங்களை நிறுத்திவிட்டு ஓய்வெடுத்துக் கொண்டிருந்தனர். அப்போது நள்ளிரவு நேரத்தில் திடீரென ஒரு கும்பல் யார்டு பகுதிக்குள் நுழைந்து அங்கு தூங்கிக்கொண்டிருந்த டிரைவர்களை சரமாரியாக தாக்கியது. இதில் டிரைவர் ஒருவர் பலத்த காயமடைந்தார்.
நள்ளிரவு நேரத்தில் திடீரென கும்பல் தாக்குதல் நடத்தியதால் டிரைவர்கள் செய்வது அறியாது திணறினர். அப்போது சில டிரைவர்கள் ஒன்று திரண்டு அந்த கும்பலை பிடிக்க முயன்ற னர். ஆனால் சுதாரித்துக் கொண்ட அந்த கும்பல் அங்கிருந்து தப்பி ஓடியது.
இதைத்தொடர்ந்து காயமடைந்த டிரைவரை அங்கிருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக கடலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இந்த நிலையில் நேற்று காலை இந்த சம்பவம் பற்றி அறிந்த 200-க்கும் மேற்பட்ட டிரைவர்கள் சர்க்கரை ஆலை முன்பு ஒன்று திரண்டு தாக்குதல் நடத்திய கும்பலை உடனே கைது செய்ய வலியுறுத்தி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதை அறிந்த நெல்லிக்குப்பம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். இதற்கிடையே தாசில்தார் ஆறுமுகம் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். இதில் சம்பந்தப்பட்ட கும்பலை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளிக்கப்பட்டது. இதையடுத்து டிரைவர்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
Related Tags :
Next Story