புனேயில் என்ஜினீயரிங் கல்லூரி மாணவி கொலை உடன் தங்கியிருந்த ஆண் நண்பருக்கு வலைவீச்சு


புனேயில் என்ஜினீயரிங் கல்லூரி மாணவி கொலை உடன் தங்கியிருந்த ஆண் நண்பருக்கு வலைவீச்சு
x
தினத்தந்தி 26 Feb 2019 3:45 AM IST (Updated: 26 Feb 2019 3:35 AM IST)
t-max-icont-min-icon

புனேயில் என்ஜினீயரிங் கல்லூரி மாணவி கொலை செய்யப்பட்டு அழுகிய நிலையில் பிணமாக கிடந்தார். இது தொடர்பாக அவருடன் தங்கியிருந்த ஆண் நண்பரை போலீசார் தேடி வருகின்றனர்.

புனே, 

சத்தாரா பகுதியை சேர்ந்த மாணவி சோனாலி(வயது23). இவர் புனேயில் உள்ள ஒரு என்ஜினீயரிங் கல்லூரியில் படித்து வந்தார். புனே நர்கே பகுதியில் தனது ஆண் நண்பர் சோமேஷ் (24) என்பவருடன் அங்குள்ள ஒரு கட்டிடத்தில் தங்கியிருந்தார். இந்த நிலையில், அவர்கள் தங்கியிருந்த அறையில் இருந்து நேற்றுமுன்தினம் சகிக்க முடியாத அளவுக்கு துர்நாற்றம் வீசியது.

இதுபற்றி அந்த கட்டிடத்தில் வசிப்பவர்கள் போலீசுக்கு தகவல் கொடுத்தனர்.

தகவல் அறிந்ததும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று பார்த்தனர். அப்போது அறைக்குள் மாணவி சோனாலி அழுகிய நிலையில் பிணமாக கிடந்தார். அவர் கொலை செய்யப்பட்டு கிடந்தது தெரியவந்தது. போலீசார் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதற்கிடையே அவருடன் தங்கியிருந்த சோமேசை காணவில்லை. எனவே அவர் தான் சோனாலியை கொலை செய்துவிட்டு தப்பிஓடியிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவான சோமேசை வலைவீசி தேடிவருகின்றனர்.

Next Story