நெல்லை கலெக்டர் அலுவலகத்தை கிராம மக்கள் முற்றுகை தினமும் குடிநீர் வழங்கக்கோரிக்கை


நெல்லை கலெக்டர் அலுவலகத்தை கிராம மக்கள் முற்றுகை தினமும் குடிநீர் வழங்கக்கோரிக்கை
x
தினத்தந்தி 26 Feb 2019 3:00 AM IST (Updated: 26 Feb 2019 3:36 AM IST)
t-max-icont-min-icon

தினமும் குடிநீர் வழங்கவேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி கிராம மக்கள் நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

நெல்லை,

நெல்லை மாவட்ட மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் அலுவலக வளர்ச்சி மன்ற கூட்ட அரங்கில் நேற்று நடந்தது. கலெக்டரின் கூடுதல் நேர்முக உதவியாளர்(நிலம்) ராமசுப்பிரமணியன், சமூக பாதுகாப்பு திட்ட உதவி கலெக்டர் மாறன், ஆய்வு குழு அலுவலர் நந்தீசுவரன் ஆகியோர் தலைமை தாங்கி பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை வாங்கினார்கள்.

இந்த கூட்டத்தில் இலவச வீட்டுமனைபட்டா, முதியோர் உதவி தொகை, ஆதரவற்ற விதவைக்கான உதவித்தொகை கேட்டும், சத்துணவு அங்கன்வாடி மையத்திற்கு உதவியாளர் வேலை கேட்டும் ஏராளமான பெண்கள் நேற்று மனு கொடுத்தனர்.

அம்பை அருகே உள்ள சிவந்திபுரம் கிராம பஞ்சாயத்து பகுதியை சேர்ந்த பெண்கள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்டு கட்சியின் ஒன்றிய குழு உறுப்பினர் ரபேக்காள் தலைமையில் கலெக்டர் அலுவலகத்திற்கு திரண்டு வந்து முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது தினமும் குடிநீர் வழங்கவேண்டும் என்று கோஷங்கள் எழுப்பினார்கள்.

இதைத்தொடர்ந்து அவர்கள் கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர். அந்த மனுவில், சிவந்திபுரம் கிராம பஞ்சாயத்து உட்பட்ட ஆறுமுகம்பட்டி கிராமத்திற்கு வாரத்திற்கு ஒரு நாள் தான் குடிநீர் வருகிறது. இது குறித்து பல முறை மனு கொடுத்தும் எந்த நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இங்கு 2 வருடங்களுக்கு முன்பு கட்டப்பட்ட மேல்நிலை நீர்தேக்க தொட்டியை இன்னும் திறக்காமல் காலம் தாழ்த்தி வருகிறார்கள். தாமிரபரணி நதிக்கரையில் உள்ள எங்களுக்கு வாரத்திற்கு ஒரு நாள் குடிநீர் வழங்குவது கண்டிக்கத்தக்கது. தினமும் எங்களுக்கு குடிநீர் கிடைக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கூறி உள்ளனர். பின்னர் முற்றுகையை கைவிட்டு அனைவரும் கலைந்து சென்றனர்.

கடையம் அருகே உள்ள மேட்டூர் ரெயில்வேகேட்டியில் இருந்து சபரிநகர் வரை மோசமாக கிடந்த சாலையை சீரமைக்க மெட்டல் சாலை அமைத்து கற்களை சாலையில் போட்டு வைத்து உள்ளனர். இதனால் அந்த வழியாக செல்லமுடியவில்லை. உடனே சாலை பணியை முடிக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கலெக்டரிடம் மனு கொடுத்தனர்.

நெல்லை அரசு சட்டகல்லூரியில் படிக்கின்ற மாணவர்கள் கலெக்டர் அலுவலகத்திற்கு திரண்டு வந்து மனு கொடுத்தனர். அந்த மனுவில், மதுரை விமானநிலையத்திற்கு தேவேந்திரகுலவேளாளர் குலத்தை சேர்ந்த மக்கள் நிலம் கொடுத்தனர். எனவே அந்த விமானநிலையத்திற்கு தியாகி இம்மானுவேல்சேகரனார் பெயர் சூட்டவேண்டும். தேவேந்திரகுல வேளாளர் சமூகத்தை தாழ்த்தப்பட்டோர் பட்டியல் பிரிவில் இருந்து மற்ற பிரிவுக்கு மாற்றவேண்டும் என்று கூறி உள்ளனர். மாவீரன் சுந்தரலிங்கனார் மக்கள் இயக்கத்தினர் தலைவர் மாரியப்பபாண்டியன் தலைமையில் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்து மனு கொடுத்தனர். அந்த மனுவில், நாங்குநேரி தாலுகா செங்காளகுறிச்சி கிராமத்திற்கு உட்பட்ட சுந்தரராஜபுரத்தில் உள்ள பொதுப்பாதையை ஆக்கிரமித்தவர்கள் மீது நடவடிக்கை எடுத்து பொதுபாதையை மீட்டு தரவேண்டும் என்று கூறி உள்ளனர்.

ஆலங்குளம் பகுதியை சேர்ந்த மாற்றுத்திறனாளிகள், தங்களுக்கு 3 சக்கர மோட்டார் சைக்கிள் வழங்கவேண்டும் என்று கூறி மனு கொடுத்தனர். 

Next Story