இறக்குமதிக்கு தடை எதிரொலி: பருப்பு வகைகள் விலை திடீர் உயர்வு கூடுதல் விலை கிடைப்பதால் இந்திய விவசாயிகள் மகிழ்ச்சி


இறக்குமதிக்கு தடை எதிரொலி: பருப்பு வகைகள் விலை திடீர் உயர்வு கூடுதல் விலை கிடைப்பதால் இந்திய விவசாயிகள் மகிழ்ச்சி
x
தினத்தந்தி 26 Feb 2019 4:00 AM IST (Updated: 26 Feb 2019 3:50 AM IST)
t-max-icont-min-icon

வெளிநாட்டில் இருந்து இறக்குமதிக்கு மத்திய அரசு தடை விதித்துள்ளதால் பருப்பு வகைகள் விலை திடீரென உயர்ந்துள்ளன. கூடுதல் விலை கிடைப்பதால் இந்திய விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

சென்னை, 

இந்தியாவுக்கு பர்மாவில் இருந்து உளுந்தம் பருப்பும், தான்சானியாவில் இருந்து துவரம் பருப்பும், அமெரிக்காவில் இருந்து கருப்பு மற்றும் வெள்ளை கடலையும், கனடா - ஆஸ்திரேலியாவில் இருந்து பட்டாணியும் அதிகம் இறக்குமதி செய்யப்பட்டு வந்தன. தற்போது, இந்திய விவசாயிகளை காப்பாற்றவும், அவர்கள் உற்பத்தி செய்யும் விளைபொருட்களுக்கு கூடுதல் விலை கிடைக்கவும் மத்திய அரசு நடவடிக்கை மேற்கொண்டது.

அதன் காரணமாக, வெளிநாடுகளில் இருந்து பருப்பு வகைகள் இறக்குமதிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக இந்திய விவசாயிகள் சாகுபடி செய்துள்ள பருப்பு வகைகளுக்கு கூடுதல் விலையும் கிடைக்க தொடங்கியுள்ளது. இதனால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ள அதே நேரத்தில், நாடு முழுவதும் பருப்பு வகைகள் விலையும் திடீரென உயர்ந்துள்ளது.

கடந்த மாதம் 100 கிலோ எடை கொண்ட துவரம் பருப்பு மூட்டை ரூ.7 ஆயிரத்துக்கு விற்பனை செய்யப்பட்டது. தற்போது, ரூ..8200 ஆக அது உயர்ந்துள்ளது. ஒரு கிலோ துவரம் பருப்பு ரூ.75-ல் இருந்து ரூ.85 ஆக அதிகரித்துள்ளது. இதேபோல், உளுந்தம் பருப்பு மூட்டை (100 கிலோ) ரூ.7 ஆயிரத்தில் இருந்து ரூ.7600 ஆகவும், ஒரு கிலோ உளுந்தம் பருப்பு ரூ.74-ல் இருந்து ரூ.80 ஆகவும் விலை கூடியுள்ளது.

பாசி பருப்பு மூட்டை ரூ.7,500-ல் இருந்து ரூ.8,500 ஆகவும், ஒரு கிலோ பாசி பருப்பு ரூ.80-ல் இருந்து ரூ.90 ஆகவும் விலை உயர்ந்துள்ளது. 50 கிலோ எடை கொண்ட பட்டாணி பருப்பு மூட்டை ரூ.2,500-ல் இருந்து ரூ.2,850 ஆக விலை அதிகரித்துள்ளது. இதேபோல், வெள்ளை பட்டாணி மூட்டை ரூ.2,450-ல் இருந்து ரூ.2,800 ஆகவும், பச்சை பட்டாணி மூட்டை ரூ.3,300-ல் இருந்து ரூ.3,700 ஆகவும் விலை கூடியுள்ளது.

கருப்பு கடலை மூட்டை (50 கிலோ) ரூ.1800-ல் இருந்து ரூ.1950 ஆகவும், வெள்ளை கடலை மூட்டை ரூ.1,900-ல் இருந்து ரூ.2,200 ஆகவும் விலை உயர்ந்துள்ளது. மேலும், விலை உயர வாய்ப்பு இருப்பதாக தமிழ்நாடு அனைத்து மளிகை வியாபாரிகள் சங்க தலைவர் எஸ்.பி.சொரூபன் தெரிவித்தார்.

அதேபோல், இந்த ஆண்டு தமிழ்நாட்டில் பருவ மழை பொய்த்து போனதால், நெல் விளைச்சலும் போதிய அளவில் இல்லை. இதன் காரணமாக அரிசி விலையும் உயர்ந்து வருகிறது. கோ-51 ரக பொன்னி அரிசி மூட்டை (25 கிலோ) ரூ.650-ல் இருந்து ரூ.700 ஆகவும், ஐ.ஆர். 39 ரூ.700-ல் இருந்து ரூ.750 ஆகவும், ஏ.டி.டி. 45 750-ல் இருந்து ரூ.800 ஆகவும் விலை அதிகரித்துள்ளது.

இதேபோல், டீலக்ஸ் பொன்னி அரிசி மூட்டை (25 கிலோ) ரூ.800-ல் இருந்து ரூ.850 ஆகவும், பி.பி.டி. பொன்னி பழையது ரூ.1,150-ல் இருந்து ரூ.1,200 ஆகவும், புதியது ரூ.950-ல் இருந்து ரூ.1,000 ஆகவும், சோனா வெள்ளை பொன்னி பழையது ரூ.1,300-ல் இருந்து ரூ.1,350 ஆகவும், புதியது ரூ.1,200-ல் இருந்து ரூ.1,250 ஆகவும் விலை கூடியுள்ளது. அரிசி விலை மேலும் உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Next Story