ஐகோர்ட்டு வளாக மோதல் வழக்கு: 31 வக்கீல்களுக்கு எழும்பூர் கோர்ட்டு ‘சம்மன்’ 28-ந் தேதி ஆஜராக உத்தரவு
ஐகோர்ட்டு வளாகத்தில் 10 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த மோதல் வழக்கில் 31 வக்கீல்கள் 28-ந் தேதி ஆஜராக எழும்பூர் கோர்ட்டு சம்மன் அனுப்பி உள்ளது.
சென்னை,
சென்னை ஐகோர்ட்டு வளாகத்தில் வக்கீல்களுக்கும், போலீசாருக்கும் இடையே 2009-ம் ஆண்டு பிப்ரவரி 19-ந் தேதி கடும் மோதல் ஏற்பட்டது. இதில் நூற்றுக்கணக்கான வக்கீல்கள் படுகாயம் அடைந்தனர். நீதிபதி ஒருவரும் தாக்கப்பட்டார். போலீசார் சிலருக்கும் காயம் ஏற்பட்டது.
தமிழக போலீசார் விசாரித்து வந்த இந்த மோதல் தொடர்பான வழக்கு விசாரணை சி.பி.ஐ.க்கு மாற்றப்பட்டது. சி.பி.ஐ. விசாரணை நடத்தி அப்போதைய வக்கீல் சங்க தலைவர் கருப்பன் உள்பட 32 பேர் மீது வழக்குப்பதிவு செய்தது. இதன்பின்பு, எழும்பூர் கோர்ட்டில் இடைக்கால குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.
இதை எதிர்த்து வக்கீல்கள் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு, எழும்பூர் கோர்ட்டு இந்த வழக்கை தொடர்ந்து விசாரிக்க தடை விதித்தது. 10 ஆண்டுகளாக நிலுவையில் இருந்து வந்த இந்த வழக்கை மீண்டும் விசாரித்த ஐகோர்ட்டு, எழும்பூர் கோர்ட்டு விசாரணைக்கு விதிக்கப்பட்டிருந்த தடையை நீக்கி உத்தரவிட்டது.
இதைத்தொடர்ந்து இந்த வழக்கின் விசாரணை எழும்பூர் கோர்ட்டில் தொடங்கி உள்ளது. அதன்படி, இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 32 பேரில் வக்கீல் கருப்பன் இறந்துவிட்டதால் மீதமுள்ள சென்னை ஐகோர்ட்டு வக்கீல்கள் சங்க தலைவர் மோகனகிருஷ்ணன் உள்பட 31 பேரும் 28-ந் தேதி நேரில் ஆஜராக எழும்பூர் கோர்ட்டு சம்மன் அனுப்பி உள்ளது.
இந்நிலையில் எழும்பூர் கோர்ட்டு விசாரணைக்கு தடை விதிக்கக்கோரி வக்கீல் மகேந்திரன் ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளார்.
அதில், ‘போலீசாரின் அத்துமீறலை மறைக்கும் வகையில் வக்கீல்களுக்கு எதிராக பொய் குற்றச்சாட்டுகளை கூறி சி.பி.ஐ. இடைக்கால குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்துள்ளது. எனவே, இடைக்கால குற்றப்பத்திரிகையை ரத்து செய்ய வேண்டும். வழக்கை நியாயமாக விசாரிக்க சி.பி.ஐ.க்கு உத்தரவிட வேண்டும். அதுவரை எழும்பூர் கோர்ட்டு விசாரணைக்கு தடை விதிக்க வேண்டும்’ என்று கூறப்பட்டுள்ளது.
இந்த மனு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது.
Related Tags :
Next Story