செம்மரக்கட்டை கடத்தியதாக விளையாட்டு வீரர் கைது: மாஜிஸ்திரேட்டும், வனத்துறை அதிகாரியும் விளக்கம் அளிக்க வேண்டும் ஐகோர்ட்டு உத்தரவு


செம்மரக்கட்டை கடத்தியதாக விளையாட்டு வீரர் கைது: மாஜிஸ்திரேட்டும், வனத்துறை அதிகாரியும் விளக்கம் அளிக்க வேண்டும் ஐகோர்ட்டு உத்தரவு
x
தினத்தந்தி 25 Feb 2019 9:30 PM GMT (Updated: 25 Feb 2019 10:51 PM GMT)

செம்மரக்கட்டை கடத்தியதாக விளையாட்டு வீரரை கைது செய்தது குறித்து வனத்துறை அதிகாரியும், எழும்பூர் மாஜிஸ்திரேட்டும் விளக்கம் அளிக்கவேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

சென்னை, 

சென்னையை சேர்ந்த என்ஜினீயரிங் கல்லூரி மாணவர் கண்ணன் (பெயர் மாற்றப்பட்டுள்ளது). ‘பில்லியார்ட்ஸ்’ விளையாட்டு வீரர். இவரை கடந்த 22-ந் தேதி செம்மரக்கட்டை கடத்தியதாக முத்தையால்பேட்டை போலீசார் பிடித்து, மாவட்ட வன அதிகாரியிடம் ஒப்படைத்தனர்.

வனத்துறை அதிகாரிகள், மாணவர் கண்ணனை கைது செய்து, எழும்பூர் 5-வது கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். மாஜிஸ்திரேட்டு அவரை 15 நாட்கள் சிறையில் அடைக்க உத்தரவிட்டார். இதையடுத்து அவர் ஜாமீன் கேட்டு சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை நீதிபதி என்.ஆனந்த்வெங்கடேஷ் விசாரித்தார்.

அப்போது மனுதாரர் சார்பில் ஆஜரான வக்கீல், ‘மனுதாரர் கண்ணன் கடந்த 22-ந்தேதி தனது பயிற்சியாளருடன் இருசக்கர வாகனத்தில் பாரிமுனை வந்தார். தம்புசெட்டி தெருவில் நின்றபோது முத்தையால்பேட்டை போலீசார் இவரை பிடித்து, வனத்துறையினரிடம் ஒப்படைத்துள்ளனர். இதைதொடர்ந்து சுமார் 9 துண்டுகளாக இருந்த 105 கிலோ செம்மரக்கட்டையை கடத்த முயன்றதாக இவர் கைது செய்யப்பட்டார். இவரை வாரண்டு இல்லாமல், கைது செய்தது சட்டவிரோதமாகும்’ என்று வாதிட்டார்.

அரசு கூடுதல் குற்றவியல் வக்கீல் பிரபாவதி, ‘செம்மரக்கட்டை கடத்தியதாக மாணவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த குற்றம் ஜாமீனில் வெளிவரமுடியாத குற்றமாகும்’ என்று வாதிட்டார்.

இருதரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதி பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:-

கைது செய்யப்பட்ட மாணவன் என்ஜினீயரிங் கல்லூரியில் படித்துக் கொண்டிருக்கிறார். மாநில அளவில் ‘பில்லியார்ட்ஸ்’ விளையாட்டு வீரராகவும் திகழ்ந்து வருகிறார். எதற்காக கைது செய்யப்பட்டோம் என்ற விவரம் கூட அவருக்கு தெரியவில்லை. இதனால், வாழ்நாள் முழுவதும் அவருக்கு பாதிப்பு ஏற்பட்டுவிடும்.

ஒருவரைக் கைது செய்யும்போது எதற்காக கைது செய்யப்படுகிறார் என்ற வாரண்ட் காட்டப்படவேண்டும். அதுகூட தெரிவிக்காமல் சட்டவிரோதமாக கைது செய்வது தனி மனித சுதந்திரத்திற்கு எதிரானது. எழும்பூர் கோர்ட்டும் எந்திரனத்தனமாக செயல்பட்டு, மனுதாரரை சிறையில் அடைக்க உத்தரவிட்டுள்ளது. எனவே, இந்த சம்பவம் குறித்து மாஜிஸ்திரேட்டு, வனத்துறை அதிகாரி மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

அதற்கு முன்பாக அவர்கள் இருவரும், இந்த ஐகோர்ட்டுக்கு விளக்கம் அளிக்க வேண்டும். இந்த வழக்கில், மனுதாரர் கண்ணனுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்குகிறேன்.

இவ்வாறு அவர் உத்தரவிட்டுள்ளார்.

Next Story