கலெக்டர் அலுவலகம் முன்பு மண்சோறு சாப்பிட்டு போராட்டம்


கலெக்டர் அலுவலகம் முன்பு மண்சோறு சாப்பிட்டு போராட்டம்
x
தினத்தந்தி 26 Feb 2019 2:45 AM IST (Updated: 26 Feb 2019 4:26 AM IST)
t-max-icont-min-icon

திருவள்ளூர் பேரண்டூர் கிராமமக்கள் அடிப்படை வசதி செய்து தராத ஊராட்சி செயலாளர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி திருவள்ளூர் கலெக்டர் அலுவலக வளாகம் முன்பு மண் சோறு சாப்பிட்டு நூதன போராட்டம் நடத்தினர்.

சென்னை, 

திருவள்ளூரில் உள்ள மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு நேற்று திருவள்ளூரை அடுத்த எல்லாபுரம் ஓன்றியம் பேரண்டூர் கிராமத்தை சேர்ந்த திரளான பொதுமக்கள் மக்கள் வளர்ச்சி இயக்க தலைவர் பிரேம்குமார், ஒருங்கிணைப்பாளர் தேசிங்கு ராஜன் தலைமையில் முற்றுகையிட்டு கண்டன கோஷங்களை எழுப்பினார்கள். அப்போது அவர்கள் கூறியதாவது:-

எங்கள் பகுதி ஊராட்சி செயலாளர் அங்கு எந்த ஒரு அடிப்படை வசதியும் இதுவரை செய்து தரவில்லை. அவர் தனி நபர் கழிப்பறை கட்டும் திட்டத்தின் கீழ் 135 கழிப்பறைகள் கட்டி முடிக்கப்பட்டதாக தவறான கணக்கு காட்டி அதில் முறைகேடு செய்து உள்ளார். மேலும் சாலை வசதி, மயான பாதை ஆக்கிரமிப்பு, நீர்நிலை ஆக்கிரமிப்பு அகற்றுதல் உள்ளிட்ட பணிகளை செய்யாமல் ரூ.1 கோடியே 30 லட்சம் வரை மோசடி செய்துள்ளதாக தெரிவித்தனர்.

இது சம்பந்தமாக வட்டார வளர்ச்சி அலுவலரிடம் பலமுறை மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. அதிகாரிகள் ஊராட்சி செயலாளர் மீது நடவடிக்கை எடுக்காமல் அவருக்கு உடந்தையாக உள்ளதாகவும் கூறினர். எனவே ஊராட்சி செயலாளர் மீது தக்க நடவடிக்கை எடுத்து, துணை போகும் அதிகாரிகளை கண்டறிந்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்தனர்.

பின்னர் அவர்கள் கலெக்டர் அலுவலக நுழைவு வாயில் முன்பு தரையில் அமர்ந்து மண்சோறு சாப்பிட்டு நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர். இதைக்கண்ட அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு அவர்களை அழைத்து சென்றனர்.

இது தொடர்பான புகார் மனுவை மாவட்ட கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமாரிடம் மக்கள் அளித்தனர். மனுவை பெற்றுக்கொண்ட அவர் அதன் மீது உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார்.

Next Story