தூக்கணாம்பாக்கத்தில் மாட்டு வண்டிகளில் மணல் கடத்திய 6 பேர் கைது
தூக்கணாம்பாக்கத்தில் மாட்டு வண்டிகளில் மணல் கடத்திய 6 பேரை போலீசார் கைது செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட 16 மாடுகளை கோசாலையில் ஒப்படைக்க கலெக்டர் உத்தரவிட்டார்.
நெல்லிக்குப்பம்,
தூக்கணாம்பாக்கம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தேவேந்திரன் தலைமையில் போலீசார் திருப்பணாம்பாக்கம் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது மாட்டு வண்டிகளில் மணல் கடத்தியதாக தனசேகரன் (வயது 40), பாக்கியராஜ் (30), வேல்முருகன் (35) உள்பட 6 பேரை கைது செய்தனர். இவர்களுடன் வந்த 2பேர் தப்பி ஓடிவிட்டனர். மேலும் அவர்களிடமிருந்து 8 மாட்டு வண்டிகளை போலீசார் பறிமுதல் செய்து போலீஸ் நிலையத்திற்கு கொண்டு சென்றனர். இதை அறிந்த கைதானவர்களின் உறவினர்கள் ஒன்று திரண்டு போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டு, கைது செய்தவர்களை உடனே விடுவிக்க வேண்டும், மாட்டு வண்டிகளை ஒப்படைக்க வேண்டும் என்று கோஷமிட்டனர்.
இது பற்றி தகவல் அறிந்த கடலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு சாந்தி, ரெட்டிச்சாவடி இன்ஸ்பெக்டர் சரவஸ்வதி ஆகியோர் விரைந்து வந்து முற்றுகையில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது அந்த வழியாக மாவட்ட கலெக்டர் அன்புசெல்வன் காரில் சென்றார். போலீஸ் நிலையம் முன்பு கூட்டமாக இருந்ததை பார்த்த அவர் காரை நிறுத்தி, போலீசாரை அழைத்து விசாரித்தார். அப்போது போலீசார் மணல் கடத்தலில் ஈடுபட்டு கைதானவர் களை விடுவிக்கக்கோரி உறவினர்கள் தகராறு செய்வதாக கூறினர்.
இதை கேட்ட கலெக்டர், மணல் கடத்துவது சட்டப்படி தவறான செயல். எனவே 6 பேர் மீது நடவடிக்கை எடுப்பதோடு, பறிமுதல் செய்யப்பட்ட வண்டிகளில் பூட்டப் பட்டிருந்த 16 மாடுகளை உடனே கோசாலையில் ஒப்படைக்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.
இதை பார்த்த போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
Related Tags :
Next Story