கொடைக்கானலில் பரபரப்பு, விதிகளை மீறி கட்டப்பட்ட 35 தங்கும் விடுதிகளுக்கு ‘சீல்’
கொடைக்கானலில் விதி முறைகளை மீறி கட்டப்பட்ட 35 தங்கும் விடுதிகளை பூட்டி நகராட்சி ஊழியர்கள் ‘சீல்’ வைத்தனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
கொடைக்கானல்,
கொடைக்கானல் நகர் பகுதியில் அனுமதியின்றியும், அனுமதிக்கப்பட்ட அளவை காட்டிலும் கூடுதலாக கட்டப்பட்ட கட்டிடங்களை அகற்ற மதுரை ஐகோர்ட்டு உத்தரவு பிறப்பித்துள்ளது. இதன் எதிரொலியாக, முதற்கட்டமாக 39 கட்டிடங்களின் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டு ‘சீல்’ வைக்கப்பட்டன.
இந்தநிலையில் கொடைக்கானலில் உள்ள 1,415 கட்டிடங்களை பூட்டி ‘சீல்’ வைத்து, அந்த அறிக்கையை அடுத்த மாதம் (மார்ச்) 11-ந்தேதி தாக்கல் செய்ய ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. இதனை எதிர்த்து சிலர் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கு நேற்று முன்தினம் விசாரணைக்கு வந்தது.
அப்போது நீதிபதிகள் குடியிருப்புகள், அரசு, பள்ளி கட்டிடங்கள் உள்ளிட்ட 6 வகையான கட்டிடங்களுக்கு நீதிபதிகள் விதிவிலக்கு அளித்தனர். அதேநேரத்தில் வர்த்தக பயன்பாட்டு கட்டிடங்களை உடனடியாக பூட்டி ‘சீல்’ வைக்க உத்தரவு பிறப்பித்தனர்.
இதனையடுத்து நேற்று காலை நகராட்சி அலுவலர் முருகேசன் தலைமையில், போலீஸ் துணை சூப்பிரண்டு பொன்னுச்சாமி முன்னிலையில், நகரமைப்பு அலுவலர் முருகானந்தம் மற்றும் நகரமைப்பு ஆய்வாளர்கள், நகராட்சி ஊழியர்கள் ஆகியோர் நகரின் பல்வேறு பகுதியில் உள்ள 35 தங்கும் விடுதிகளை பூட்டி ‘சீல்’ வைத்தனர்.
சில இடங்களில் அதிகாரிகள் சீல் வைத்தபோது கட்டிட உரிமையாளர்கள் கண்ணீர் விட்டு கதறி அழுதனர். மேலும் அங்கு பணிபுரிந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பரிதவித்தனர். மேலும் வெளியூரில் இருந்து கொடைக்கானலுக்கு வந்து தங்கி பணிபுரிந்த ஊழியர்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு திரும்பி சென்றனர்.
கொடைக்கானலில் உள்ள கட்டிடங்களை பூட்டி ‘சீல்’ வைத்தால் அதனை நம்பி உள்ள ஆயிரத்துக்கும் மேற்பட்டோரின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்றும், எனவே தமிழக அரசு இந்த பிரச்சினையில் தலையிட்டு கட்டிடங்களுக்கு ‘சீல்’ வைக்கும் நடவடிக்கையை நிறுத்தி வைக்க வேண்டும் என்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து நகராட்சி ஆணையாளர் முருகேசன் கூறுகையில், ஐகோர்ட்டு உத்தரவுப்படி கொடைக்கானல் நகரில் உள்ள 258 வணிக வளாகங்களுக்கு ‘சீல்’ வைக்கும் பணி தொடங்கி இருக்கிறது. இதற்காக நகரமைப்பு ஆய்வாளர்கள் தலைமையில் 4 குழுக்கள் அமைக்கப்பட்டு நகரில் உள்ள 35 தங்கும் விடுதிகளுக்கு ‘சீல்’ வைக்கப்பட்டுள்ளது. இந்த பணி தொடர்ந்து நடைபெறும். இது தொடர்பான அறிக்கை மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்யப்படும் என்றார். தங்கும் விடுதிகளுக்கு ‘சீல்’ வைக்கப்பட்ட சம்பவம், கொடைக்கானல் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Related Tags :
Next Story