நவீன தொழில்நுட்பத்தில் கொருக்குப்பேட்டை- திருவொற்றியூர் இடையே மெட்ரோ ரெயில் பாதை


நவீன தொழில்நுட்பத்தில் கொருக்குப்பேட்டை- திருவொற்றியூர் இடையே மெட்ரோ ரெயில் பாதை
x
தினத்தந்தி 27 Feb 2019 4:00 AM IST (Updated: 26 Feb 2019 10:33 PM IST)
t-max-icont-min-icon

நவீன தொழில்நுட்பத்தில் கொருக்குப்பேட்டை- திருவொற்றியூர் இடையே மெட்ரோ ரெயில் பாதை அமைக்கப்பட்டு வருகிறது. இந்தப்பணி சவாலாக இருப்பதாக அதிகாரிகள் கூறினார்கள்.

சென்னை,

சென்னை, மெட்ரோ ரெயில் திட்டத்தின் முதல் கட்டப்பணிகள் நிறைவடைந்து மெட்ரோ ரெயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. இதனை தொடர்ந்து வண்ணாரப்பேட்டையில் இருந்து திருவொற்றியூர் விம்கோ நகர் வரை 9 கிலோ மீட்டர் தொலைவிற்கு நீட்டிக்கும் பணிகள் ரூ.3 ஆயிரத்து 770 கோடி செலவில் நடந்து வருகிறது.

முதல் கட்ட நீட்டிப்பு பணிகளில் சுரங்கப்பாதையில் சர்.தியாகராயர் கல்லூரி நிலையம் மற்றும் கொருக்குப்பேட்டை நிலையம் ஆகிய இரண்டு ரெயில் நிலையங்கள் மற்றும் உயர்மட்டப்பாதையில் தண்டையார்பேட்டை, சுங்கச்சாவடி, தாங்கல், கவுரி ஆசிரமம், திருவொற்றியூர், விம்கோநகர் ஆகிய 6 ரெயில் நிலையங்களும் அமைக்கப்பட்டு வருகின்றன.

வண்ணாரப்பேட்டையில் இருந்து திருவொற்றியூர் விம்கோ நகர் வரை முதல் கட்ட பணிகள் குறித்த காலத்தில் முடிக்கப்பட்டு 2020-ம் ஆண்டு ஜூன் மாதம் போக்குவரத்து தொடங்க திட்டமிடப்பட்டு உள்ளது.

இதுகுறித்து சென்னை மெட்ரோ ரெயில் நிறுவன அதிகாரிகள் கூறியதாவது:-

வண்ணாரப்பேட்டையில் இருந்து 1 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள சர்.தியாகராயர் கல்லூரி, அங்கிருந்து 1 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள கொருக்குப்பேட்டை ரெயில் நிலையம் வரை 2 கிலோ மீட்டர் தூரத்துக்கான சுரங்கம் தோண்டும் பணி முற்றிலுமாக நிறைவடைந்து விட்டன.

தற்போது இந்த 2 ரெயில் நிலையத்துக்கும் இடையே தண்டவாளம் அமைக்கும் பணி 50 சதவீதம் முடிந்துள்ளது. தொடர்ந்து சுரங்கப்பாதைக்கு செல்லும் வழிகள் முறையாக அமைக்கப்பட்டு வருகிறது. இந்தப்பாதையில் சிக்னல் அமைப்பதற்கான ஆரம்பக்கட்டப் பணிகள் நடந்து வருகிறது.

கொருக்குப்பேட்டை ரெயில் நிலைய பணிகள் முடிந்த உடன் டோல்கேட் பகுதியில் இருந்து உயர்த்தப்பட்ட பாதை மற்றும் ரெயில் நிலையங்கள் அமைக்கப்பட்டு வருகிறது. இதில் டோல்கேட்டில் இருந்து கவுரி ஆஸ்ரமம் வரை அரை கிலோ மீட்டர் தூரத்துக்கான பணிகள் நிறைவடைந்து உள்ளன.

கோயம்பேடு முதல் ஆலந்தூர் வரை உள்ள சாலை 100 அடி அகலமான சாலையாக இருந்ததால், அப்பகுதியில் மெட்ரோ ரெயிலுக்கான உயர்த்தப்பட்ட பாதை கிரைன்கள் உதவியுடன் பாதை எளிதாக அமைக்கப்பட்டது. ஆனால் டோல்கேட்டில் இருந்து திருவொற்றியூர் விம்கோ நகர் வரை உள்ள 7 கிலோ மீட்டர் தூரம் கொண்ட சாலை, குறுகலான சாலையாக இருப்பதால் இந்த சாலையில், உயர்த்தப்பட்ட பாதை அமைப்பது சவாலாக உள்ளது.

இந்தப்பாதையில் சாலையில் கிரேன்கள் மற்றும் நீளம் கொண்ட டிரைலர் வாகனங்களை கொண்டு வந்து பணி செய்ய முடியாது என்பதால், நாட்டிலேயே முதன் முறையாக ‘லான்ஜிங் கிரிடர்’ என்று அழைக்கப்படும் ஒரு வகையான பாலம் கட்டும் எந்திரம் மூலம் நவீன தொழில் நுட்பத்தில் ஒரு இடத்தில் இருந்தபடியே ‘சிமெண்ட் சிலாப்புகள்’ கொண்டு சென்று உயர்த்தப்பட்ட பாதை அமைக்கும் பணி நடந்து வருகிறது.

குறிப்பாக ஒரு தூணுக்கும் மற்றொரு தூணுக்கும் இடையே முன்னேறி செல்லும் நவீன எந்திரம் மூலம் இந்த பாதை அமைக்கப்படுகிறது. பொதுவாக நெடுஞ்சாலை மற்றும் அதிவேக ரெயில் பாலம் கட்டுமானத்திட்டங்களுக்கான சிமெண்ட் பாக்ஸ்கள் நிறுவ இந்த தொழில் நுட்பம் பயன்படுகிறது.

அதேபோன்று முதல் கட்டத்தில் உயர்த்தப்பட்ட பாதையின் அருகில் சாலையின் ஓரத்தில் ரெயில் நிலையங்கள் அமைக்கப்பட்டு உள்ளன. இதனால் அதிக அளவில் நிலங்கள் தேவைப்பட்டன. இதற்காக கூடுதல் நிதியும் செலவிடப்பட்டது. ஆனால் விரிவாக்கப்பணியில் உயர்த்தப்பட்ட பாதையின் கீழே ரெயில் நிலையங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. இந்த திட்டத்திற்கான செலவு முற்றிலும் குறைக்கப்பட்டு உள்ளது. குறிப்பாக முதல் கட்டத்தில் சுரங்கப்பாதையில் உள்ள ரெயில் நிலையங்கள் 220 மீட்டர் நீளமும், 27 மீட்டர் அகலத்திலும் அமைக்கப்பட்டன. ஆனால் விரிவாக்கத்தில் அனைத்து ரெயில் நிலையங்களும் 148 மீட்டர் நீளமும், 20 மீட்டர் அகலத்தில் அமைக்கப்பட்டு வருகிறது. இதனால் இடம் மற்றும் கட்டுமான செலவினங்கள் முற்றிலும் குறைந்து உள்ளது.

இந்தப்பாதையை முடிக்க 2022-ம் ஆண்டு வரை காலஅவகாசம் இருந்தாலும், 2020-ம் ஆண்டு ஜூன் மாதம் ரெயில் இயக்க திட்டமிடப்பட்டு பணிகள் வேகமாக நடந்து வருகிறது. இவ்வாறு அதிகாரிகள் கூறினார்கள்.

Next Story