மரத்தில் பஸ் மோதி விபத்து, கூடலூரை சேர்ந்த பெண்கள் உள்பட 3 பேர் பலி


மரத்தில் பஸ் மோதி விபத்து, கூடலூரை சேர்ந்த பெண்கள் உள்பட 3 பேர் பலி
x
தினத்தந்தி 27 Feb 2019 4:00 AM IST (Updated: 27 Feb 2019 12:32 AM IST)
t-max-icont-min-icon

மரத்தில் பஸ் மோதிய விபத்தில் கூடலூரை சேர்ந்த பெண்கள் உள்பட 3 பேர் பலியானார்கள். இந்த சம்பவம் குறித்து கேரள போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கூடலூர், 

நீலகிரி மாவட்டம் கூடலூர் தாலுகா ஓவேலி பேரூராட்சி சீபுரத்தை சேர்ந்தவர் அப்துல்காதர். இவர் ஏற்கனவே இறந்து விட்டார். இவரது மனைவி பாத்துமா (வயது 66), மகள் சுபேரா (40). இவர்கள் 2 பேரும் கேரளாவில் நடைபெற்ற உறவினர் வீட்டு திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக கடந்த சில தினங்களுக்கு முன்பு கேரளா சென்றனர். திருமணம் முடிந்து நேற்று மஞ்சேரியில் இருந்து வழிக்கடவுக்கு தனியார் பஸ்சில் வந்து கொண்டிருந்தனர். பாத்துமாவும், சுபேராவும் பஸ்சின் முன்பக்கம் இடதுபுறம் அமர்ந்து இருந்தனர்.

இந்த சமயத்தில் பகல் 1.30 மணிக்கு நிலம்பூரில் இருந்து மஞ்சேரி செல்வதற்காக வாலிபர் ஒருவர் மோட்டார் சைக்கிளை வேகமாக ஓட்டி வந்தார். எடவண்ணா குண்டுத்தோடு பகுதியில் மோட்டார் சைக்கிளும், தனியார் பஸ்சும் மோதியது. அப்போது கட்டுப்பாட்டை இழந்த பஸ் தாறுமாறாக சென்று சாலையோரத்தில் இருந்த மரத்தில் மோதியது.

இந்த விபத்தில் பஸ்சின் முன்பகுதி பலத்த சேதம் அடைந்தது. மேலும் பாத்துமா, சுபேரா உள்பட 50 பேர் பலத்த காயம் அடைந்தனர். இதனிடையே மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபரும் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த மஞ்சேரி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விபத்தில் படுகாயம் அடைந்த பயணிகளை மீட்டு மஞ்சேரி மருத்துவக்கல்லூரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் செல்லும் வழியிலேயே பாத்துமா, சுபேரா ஆகியோர் பரிதாபமாக இறந்தனர்.

பின்னர் 3 உடல்களையும் போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மஞ்சேரி மருத்துவக்கல்லூரிக்கு கொண்டு சேர்த்தனர். விசாரணையில் மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபர் பெயர் அர்ஷத் (28) என தெரியவந்தது. ஆனால் அவர் எந்த ஊரை சேர்ந்தவர் என்பது தெரியவில்லை. இந்த விபத்து குறித்து மஞ்சேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story