அவினாசியில் அத்திக்கடவு–அவினாசி திட்ட அடிக்கல் நாட்டு விழா முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நாளை நடக்கிறது


அவினாசியில் அத்திக்கடவு–அவினாசி திட்ட அடிக்கல் நாட்டு விழா முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நாளை நடக்கிறது
x
தினத்தந்தி 27 Feb 2019 4:00 AM IST (Updated: 27 Feb 2019 12:34 AM IST)
t-max-icont-min-icon

அவினாசியில் அத்திக்கடவு–அவினாசி திட்ட அடிக்கல் நாட்டு விழா முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நாளை நடக்கிறது. இதில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொள்ள உள்ளதால் விழா நடைபெறும் இடத்தில் பிரமாண்ட பந்தல் அமைக்கப்பட்டுள்ளது.

அவினாசி,

திருப்பூர், கோவை, ஈரோடு ஆகிய 3 மாவட்டங்களை சேர்ந்த மக்களின் 60 ஆண்டு கால கோரிக்கையாக அத்திக்கடவு–அவினாசி திட்டம் இருந்து வருகிறது. இந்த திட்டத்துக்கான தொடக்க விழா நாளை (வியாழக்கிழமை) அவினாசியில் நடைபெறுகிறது. இதில் முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கலந்துகொண்டு அடிக்கல் நாட்டுகிறார். விழாவையொட்டி அவினாசி சுற்றுவட்டாரப்பகுதி முழுவதும் விழாக்கோலம் பூண்டுள்ளது.

திருப்பூர், கோவை, ஈரோடு மாவட்டங்களில் உள்ள நூற்றுக்கணக்கான குளங்கள், ஆயிரக்கணக்கான குட்டைகளுக்கு நீர் நிரப்பும் திட்டம் தான் அத்திக்கடவு–அவினாசி திட்டம். இதற்கு தமிழக அரசு ரூ.1,532 கோடி மதிப்பில் திட்டம் தயாரிக்கப்பட்டு டெண்டர் விடப்பட்டுள்ளது. எனவே இந்த திட்டத்தை தொடங்கும் வகையில் அவினாசி–கோவை பைபாஸ் சாலையில் எம்.நாதம்பாளையம் பிரிவு எதிரே அமைக்கப்பட்டுள்ள பிரமாண்ட பந்தலில் அடிக்கல் நாட்டு விழா நடக்கிறது.

விழாவில் முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, சபாநாயகர் ப.தனபால், அமைச்சர்கள் உள்பட ஆயிரக்கணக்கான பொதுமக்கள் பங்கேற்க உள்ளனர். இதற்கான விழா ஏற்பாடுகள் கடந்த 4 நாட்களாக நடைபெற்று வருகிறது. விழாவில் திரளானோர் பங்கேற்பது குறித்து அத்திக்கடவு–அவினாசி திட்ட கூட்டமைப்பினர் ஆலோசனைக்கூட்டங்கள் நடத்தி வருகின்றனர்.

இதுகுறித்து அத்திக்கடவு –அவினாசி திட்ட போராட்ட குழு ஒருங்கிணைப்பாளர்கள் கூறுகையில். ‘‘நாளை நடைபெற உள்ள அத்திக்கடவு–அவினாசி திட்ட அடிக்கல் நாட்டுவிழாவில் விவசாயிகள், தொழில் அதிபர்கள், வியாபாரிகள், தொழிலாளர்கள் மற்றும் பொதுமக்கள் குடும்பத்துடன் பங்கேற்று இது ஒரு குடும்ப விழாவாக கொண்டாட முடிவு செய்யப்பட்டுள்ளது. அடிக்கல் நாட்டு விழா நடைபெறும் நாளான நாளை அவினாசி லிங்கேஸ்வரர் கோவிலில் சிறப்பு வழிபாடு நடத்தி 1,008 தேங்காய் உடைப்பது.

பின்னர் அங்கிருந்து விழா நடைபெறும் மேடைக்கு இருசக்கர வாகன பேரணியுடன் கூட்டமாக செல்வது. தொடர் உண்ணாவிரதப்போராட்டத்தால் இத்திட்டம் தொடங்கியதால் விழாவின் முடிவில் அன்னதானம் வழங்குவது, விழாவிற்கு வரும் முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமியை திருப்பூரில் இருந்து அவினாசியில் நடைபெறும் விழா மேடை வரை இருசக்கர வாகன பேரணியுடன் அழைத்துச்செல்வது. அங்கு 108 கும்ப மரியாதை கொடுத்து முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, சபாநாயகர் தனபால், அமைச்சர்கள் மற்றும் மாவட்ட கலெக்டர் உள்பட அதிகாரிகளை சிறப்பாக வரவேற்பது.

அவினாசி, பெருமாநல்லூர், கோவை மாவட்டம் அன்னூர், ஈரோடு மாவட்டம் பெருந்துறை உள்ளிட்ட பகுதிகளில் இருந்து பொதுமக்களை வேன் மூலம் விழாவிற்கு அழைத்து வரவேண்டும்.

இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து நேற்று போலீஸ் துணை கமி‌ஷனர் உமா தலைமையில் ஆலோசனைக்கூட்டம் நடந்தது. இதில் உதவி ஆணையர் ரமேஷ்கிருஷ்ணன், அவினாசி துணை போலீஸ் சூப்பிரண்டு பரமசாமி, இன்ஸ்பெக்டர் வேல்முருகன் மற்றும் அத்திக்கடவு திட்ட கூட்டமைப்பினர் கலந்து கொண்டனர்.

இதில் விழாவிற்கு வரும் அனைத்து வாகனங்களையும், போக்குவரத்திற்கும், பொதுமக்களுக்கும் இடையூறு இன்றி நிறுத்த ஏற்பாடு செய்வது. அவசர உதவிக்கு ஆம்புலன்ஸ், தீயணைப்பு வாகனம், விழா மேடை அருகே நிறுத்தி வைப்பது. விழாவிற்கு வரும் அனைவரும் மெட்டல் டிடெக்டர் கருவி மூலம் சோதனை செய்து விழா பந்தலுக்குள் அனுப்புவது, விழா நடைபெறும் போது சிறிது நேரம் போக்குவரத்தை மாற்றுப்பாதையில் திருப்பி அனுப்புவது, விழா நடைபெறும் மேடையை சுற்றிலும் பலத்த போலீஸ் பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்வது என்று முடிவு செய்யப்பட்டது.


Next Story