பாலக்காடு அருகே வடவனூரில் புதுப்பிக்கப்பட்ட எம்.ஜி.ஆர். நினைவு இல்லம்


பாலக்காடு அருகே வடவனூரில் புதுப்பிக்கப்பட்ட எம்.ஜி.ஆர். நினைவு இல்லம்
x
தினத்தந்தி 27 Feb 2019 5:00 AM IST (Updated: 27 Feb 2019 12:52 AM IST)
t-max-icont-min-icon

கேரள மாநிலம் பாலக்காடு அருகே வடவனூரில் புதுப்பிக்கப்பட்ட எம்.ஜி.ஆர். நினைவு இல்லத்தை கவர்னர் பி.சதாசிவம் திறந்து வைத்தார்.

கோவை,

மறைந்த தமிழக முதல்-அமைச்சர் எம்.ஜி.ஆர், தனது பெற்றோர் மற்றும் உறவினர்களுடன் வாழ்ந்த வீடு கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் வடவனூரில் உள்ளது. ஓடுகளால் வேயப்பட்ட இந்த வீடு பழுதடைந்த நிலையில் இருந்தது. இதை அறிந்த சென்னை முன்னாள் மேயரும், மனித நேய ஐ.ஏ.எஸ். இலவச பயிற்சி மைய தலைவருமான சைதை துரைசாமி, கேரளா சென்று அந்த வீட்டை பார்வை யிட்டார்.

பின்னர் அந்த வீட்டை புதுப்பிக்க முடிவு செய்து, எம்.ஜி.ஆரின் உறவினர்களிடம் ஒப்புதல் பெற்றார். அதன் பிறகு அந்த வீட்டை பழமை மாறாமல் புதுப்பிக்கும் பணி தொடங்கியது. அத்துடன் அங்கு அங்கன்வாடி மையம், உணவுக்கூடம், விளையாட்டு திடல், அழகிய புல்வெளி அமைக்கப்பட்டது.

புனரமைக்கப்பட்ட வீட்டில் எம்.ஜி.ஆரின் அரிய புகைப்படங்களின் கண்காட்சி, சுவர் ஓவியங்கள் என மனதை கவரும் வகையில் நினைவு இல்ல வளாகமாக மாற்றப்பட்டது. அதுபோன்று எம்.ஜி.ஆர். குறித்து பல்வேறு பிரபலங்கள், எழுத்தாளர்கள் எழுதிய புத்தகங்கள் அடங்கிய நூலகமும் அமைக்கப்பட்டது.

வீட்டின் வெளியே கல்வெட்டு அருகே எம்.ஜி.ஆரின் மார்பளவு பளிங்கு சிலையும், உள்பகுதியில் எம்.ஜி.ஆரின் தந்தை கோபால மேனன், தாய் சத்தியபாமா, எம்.ஜி.ஆர். ஆகியோரின் பளிங்கு சிலையும் அமைக்கப்பட்டன. அத்துடன் அந்த வீட்டின் வளாகத்தில் உள்ள கிணறும் புதுப்பிக்கப்பட்டது.

புதுப்பிக்கப்பட்ட எம்.ஜி.ஆர். நினைவு இல்ல திறப்பு விழா நேற்று நடந்தது. சைதை துரைசாமி தலைமை தாங்கினார். கேரள நீர்ப்பாசனத்துறை மந்திரி கே.கிருஷ்ணன் குட்டி, நெம்மாரா கே.பாபு எம்.எல்.ஏ. ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில் கேரள கவர்னர் பி.சதாசிவம் கலந்து கொண்டு எம்.ஜி.ஆர். நினைவு இல்லத்தை திறந்து வைத்து, அங்கு வைக்கப்பட்டு இருக்கும் புகைப்படங்களை பார்வையிட்டார். அந்த வளாகத்தில் அமைக்கப்பட்டு உள்ள எம்.ஜி.ஆர். மற்றும் அவருடைய பெற்றோர் சிலையை திறந்து வைத்து அதற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் நடந்த விழாவில் கவர்னர் பி.சதாசிவம் பேசும் போது கூறியதாவது:-

எம்.ஜி.ஆர். வாழ்ந்த இந்த இல்லத்தை புனரமைக்கும் பணியை மேற்கொண்ட சைதை துரைசாமிக்கு எனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். இலங்கையில் உள்ள கண்டி என்ற இடத்தில் எம்.ஜி.ஆர். பிறந்தாலும் அவர் தனது தாய், தந்தை மற்றும் குடும்பத்துடன் இந்த பகுதிக்கு வந்து, இந்த வீட்டில் வாழ்ந்தார்.

அவர் தனது 7-வது வயதில் அவருடைய அண்ணன் சக்கரபாணியின் நாடக கம்பெனியில் நடித்தார். பின்னர் படிப்படியாக நல்ல நடிகராக மாறி சினிமாவில் மாபெரும் புகழை அடைந்து, நல்ல தலைவராகவும் மாறினார். அவரது படங்களில் வரும் பாடல்கள் எனக்கு மிகவும் பிடிக்கும்.

அதில் ‘ஓடி ஓடி உழைக்கணும், ஊருக்கு எல்லாம் கொடுக்கணும்’ என்ற பாடல் எனக்கு அதிகமாக பிடிக்கும். இந்த பாடலில் அவர் ஓடி ஓடி உழைத்து, தான் மட்டும் அந்த உழைப்பை பயன்படுத்தாமல், அனைவருக்கும் கொடுக்க வேண்டும் என்ற கருத்தை உணர்த்தி இருப்பார். எம்.ஜி.ஆர். ஆட்சி செய்தபோது மாநிலத்தின் நலனுக்காக பல திட்டங்களை கொண்டு வந்தார். மகளிர் சிறப்பு பஸ், சத்துணவு திட்டம் போன்ற எண்ணற்ற பயனுள்ள திட்டங்களையும் அவர் செயல்படுத்தினார்.

நான் கடந்த 1973-ம் ஆண்டு சட்டப்படிப்பை முடித்துவிட்டு வக்கீலாக பணியை தொடங்கினேன். நான் கோர்ட்டுக்கு செல்லும் முதல் நாளில் காலை 8 மணிக்கு எம்.ஜி.ஆரை பார்க்க அவருடைய வீட்டிற்கு சென்றேன். அங்கு அவரை பார்க்க அப்போதைய சபாநாயகர் பி.எச்.பாண்டியன், பொள்ளாச்சி மகாலிங்கம் உள்பட பலர் காத்து இருந்தனர். நானும் அங்கு இருந்த எம்.ஜி.ஆரின் உதவியாளரிடம் ஒரு சீட்டில் எனது பெயரை எழுதி கொடுத்தேன். 2 நிமிடத்தில் என்னை உள்ளே செல்லும்படி உதவியாளர் கூறினார்.

நான் உள்ளே சென்றதும் எம்.ஜி.ஆரிடம் ஆசீர்வாதம் வாங்கினேன். அப்போது அவர் என்னிடம், உன்னை எதற்காக உடனே அழைத்தேன் என்றால், நீ இன்று முதல் முதலாக கோர்ட்டுக்கு செல்கிறாய், காலதாமதம் ஏற்படக்கூடாது, என்பதற்காகதான். மேலும் நீ நன்றாக முன்னேறி நீதியையும், நேர்மையையும் காப்பாற்றுவதுடன், நீதியையும் நிலைநாட்ட வேண்டும் என்று கூறி அனுப்பி வைத்தார். அவருடைய ஆசியால்தான் நான் சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதியாக பணியாற்றி ஓய்வு பெற்று தற்போது கேரளா கவர்னராக உள்ளேன்.

எம்.ஜி.ஆர். எளிமையானவர், நேர்மையானவர். அவரைபோன்று ஒவ்வொருவரும் இருக்க வேண்டும். தற்போது எம்.ஜி.ஆர். வாழ்ந்த வீட்டை சுற்றுலா மையமாக சைதை துரைசாமி மாற்றி விட்டார். இது அனைவருக்கும் உதவியாக இருக்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.

பின்னர் சைதை துரைசாமி பேசும்போது கூறியதாவது:-

தற்போது 50 ஆண்டு கால திராவிட கட்சிகள் என்று பலர் பேசுகிறார்கள். அவ்வாறு பேச காரணமாக இருந்தவர் எம்.ஜி.ஆர்.தான். அவர் இல்லை என்றால் நாட்டின் முன்னேற்றம் இல்லை.

அவர் வாழ்ந்த வீடு புனரமைக்கப்பட்டு இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது. இந்த மாநிலத்தில் ஏராளமான சுற்றுலா மையங்கள் உள்ளன. அதில் எம்.ஜி.ஆர். வாழ்ந்த வீடும் சேரப்போகிறது. இளைஞர்கள், இளம்பெண்கள், படித்தவர்கள், பட்டதாரிகள் அனைவருக்கும் இந்த இடம் பயன்தரும். இந்த பகுதியில் பட்டதாரிகள் இருப்பார்கள் என்றால் அவர்களை ஒன்று சேர்த்து இந்த இடத்தில் இலவச ஐ.ஏ.எஸ். பயிற்சியும் வழங்கப்படும்.

நான் கடந்த 54 ஆண்டுகளுக்கு முன்பு பேனா நண்பர்கள் வட்டத்தை உருவாக்கி, எம்.ஜி.ஆர். புகழை வளர்க்க நான் பணியாற்றினேன். அப்போது இருந்து இப்போது வரை நான் எம்.ஜி.ஆரை தவிர வேறு எந்த தலைவரையும் தலைவராக ஏற்கவில்லை. பதவிகளை பற்றியோ, மற்றவர்கள் தருகிற ஆசைவார்த்தைக்கு சோரம் போகாமல் இன்றுவரை எம்.ஜி.ஆரை மட்டுமே பின்பற்றி வருகிறவன்.எம்.ஜி.ஆர். 136 திரைப்படங்களில் நடித்து உள்ளார். அவர் நடிக்க மாட்டார். கதாபாத்திரமாகவே மாறிவிடுவார். அவர் தனது படங்கள் மூலம் நல்ல எண்ணங்கள், சிந்தனைகளை விதைத்து எந்த நடிகரும் சொல்லாத சீர்த்திருத்தங்களை செய்தவர். திராவிட இயக்கம் வளர எம்.ஜி.ஆர். காரணம் என்று அண்ணாவே சொன்னார். முதல்-அமைச்சராக அரசியலில் காலெடித்து வைத்தார். முதல்-அமைச்சராகவே அவர் மறைந்தார். எந்த நடிகனும் செய்ய முடியாததை அவர் செய்து உள்ளார்.

அவர்தான் நமக்கு வழிகாட்டி. அப்படிப்பட்ட எம்.ஜி.ஆர். நினைவு இல்லத்தை திறக்கும் இந்த நேரத்தில் எம்.ஜி.ஆர். பக்தர்களுக்கு ஒரு வேண்டுகோள். அவர் இந்த இயக் கத்தை எதற்காக தோற்றுவித்தாரோ அந்த நோக்கம் அழிந்துவிடக்கூடாது. குடும்ப அரசியல், ஊழல் சாம்ராஜ்யத்துக்கு எதிராக உருவாக்கப்பட்ட இந்த தர்ம யுத்த களத்தில் நாம் எங்கு இருந்தாலும், எதைசெய்தாலும் அந்த உணர்வுகளை மறந்துவிடக்கூடாது.

நமக்கு ஒரே எதிரி குடும்ப அரசியலுக்காக ஒரு கட்சியை மாற்றி இருப்பவர்கள்தான். அதை மறந்து விடக்கூடாது. எனவே எம்.ஜி.ஆரின் கொள்கையை காப்போம். இந்த இயக்கத்தை யாரும் வீழ்த்த நாம் அனுமதிக்க கூடாது. அனுமதிக்கவும் விடமாட்டோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

எம்.ஜி.ஆர். ஆட்சியின்போது அமைச்சராக இருந்தவர் எஸ்.ஆர்.ராதா. அவரும் இந்த விழாவில் பங்கேற்று பேசினார். அப்போது அவர் கூறும்போது, எம்.ஜி.ஆர். எளிமையானவர், நேர்மையாக இருந்தவர். அவர் மறைந்து பல ஆண்டுகள் ஆனாலும் அவருக்கு என்று தமிழகத்தில் 30 சதவீத வாக்குகள் இருக்கின்றன. அதை மனதில் வைத்துக்கொண்டு எம்.ஜி.ஆர். குறித்து பேசினால் மட்டுமே வெற்றி பெற முடியும். எம்.ஜி.ஆரை யார் மறக்கிறார்களோ அவர்கள் கண்டிப்பாக தோற்றுதான் போவார்கள் என்றார்.

புதிய நீதிகட்சி தலைவர் ஏ.சி.சண்முகம் கூறும்போது, எம்.ஜி.ஆருக்கு பல்வேறு இடங்களில் வெண்கல சிலைகளை வைத்து வருகிறோம். அவர் பிறந்த இலங்கையில் உள்ள கண்டியும், அவர் வாழ்ந்த கேரள மாநிலம் வடவனூரும் எங்களுக்கு புனித இடமாக இருக்கிறது. எனவே இந்த பகுதியிலும் எம்.ஜி.ஆருக்கு வெண்கல சிலை வைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். விழாவில் எம்.ஜி.ஆருக்கு சிறுநீரகம் கொடுத்த லீலாவதி, எம்.ஜி.ஆருக்கு சிகிச்சை அளித்த ராஜாமணி, பழனி பெரியசாமி மற்றும் எம்.ஜி.ஆரின் உறவினர்களுக்கு நினைவு பரிசுகள் வழங்கப்பட்டன. இதில் வடவனூர் பஞ்சாயத்து தலைவர் சைரேந்திரி மோகன்தாஸ், துணைத்தலைவர் ராஜீவ் உள்பட பலர் கலந்து கொண்டனர். 

Next Story