பெண்கள் சுயமாக முன்னேற தொகுதிக்கு 5 ஆயிரம் பசுமாடுகள் வழங்க திட்டம் முதல்-அமைச்சர் நாராயணசாமி தகவல்


பெண்கள் சுயமாக முன்னேற தொகுதிக்கு 5 ஆயிரம் பசுமாடுகள் வழங்க திட்டம் முதல்-அமைச்சர் நாராயணசாமி தகவல்
x
தினத்தந்தி 27 Feb 2019 12:00 AM GMT (Updated: 26 Feb 2019 7:51 PM GMT)

பெண்கள் சுயமாக தொழில் செய்து முன்னேற ஏதுவாக தொகுதிக்கு 5 ஆயிரம் பசுமாடுகள் வழங்கும் திட்டம் அமல்படுத்தப்படும் என்று முதல்-அமைச்சர் நாராயணசாமி கூறினார்.

காரைக்கால்,

காரைக்காலை அடுத்த கீழகாசாகுடி தனியார் திருமண மண்டபத்தில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலகம் மூலம் செயல்படும் மகளிர் சுய உதவிக்குழுக்கள் மற்றும் கூட்டமைப்புகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

அமைச்சர் கமலக்கண்ணன் தலைமை தாங்கினார். மாவட்ட துணை ஆட்சியர் ஆதர்ஸ் வரவேற்றார். கீதா ஆனந்தன் எம்.எல்.ஏ., சீனியர் போலீஸ் சூப்பிரண்டு மகேஷ்குமார் பன்வால், வட்டார வளர்ச்சி அதிகாரி பிரேமா ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு சுய உதவிக்குழுக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி முதல்-அமைச்சர் நாராயணசாமி பேசினார்.

அப்போது அவர் பேசியதாவது:-

இன்றைய காலகட்டத்தில் ஒரு குடும்பத்தில் கணவன் மட்டும் சம்பாதித்து குடும்பம் நடத்த முடியாது. அதனால்தான் பெண்களும் சுயதொழில் செய்து குடும்ப சுமையை குறைக்க வேண்டும். புதுச்சேரியைவிட காரைக்கால் பெண்கள் சாமர்த்தியசாலிகளாக உள்ளனர்.

வடக்கில் இன்னமும் பெண்கள் சுதந்திரமாக நடமாட முடியாது. பெண்களுக்கு அதிகமாக அநீதி இழைக்கப்படுகிறது. ஆனால் இங்கு பெண்கள் சுதந்திரமாக, சுயமாக தொழில் செய்வோராக உள்ளர்கள். இதேபோல் பெண்கள் அரசியல் மற்றும் அரசு அதிகாரியாக வர வேண்டும். பெண்கள் இனி வட்டிக்கு விடுவதை குறைத்துக்கொண்டு சுயதொழில் செய்து மேலும் முன்னுக்கு வரவேண்டும்.

மக்கள் நலத்திட்டங்களுக்காக வீதியில் இரவு பகலாக படுத்து உறங்கி போராடி வருகிறோம். மக்களுக்கான நலத்திட்டங்களை யார் முட்டுக்கட்டை போட்டாலும், தகர்த்து எறிவோம். உங்களுக்காக நாங்கள் போராடுவதுபோல் மக்களும் ஆட்சியாளர்களுக்கு துணையாக ஒத்துழைக்க வேண்டும். விரைவில் பெண்கள் சுயமாக முன்னேற தொகுதிக்கு 5 ஆயிரம் பசுமாடுகள் வழங்கும் திட்டம் அமலுக்கு கொண்டு வரப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

இதில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் ரவி பிரகாஷ், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் சந்திரசேகர், மண்டல மேலாளர் வீரராகவன், திட்ட அதிகாரி மோகன் குமார், விரிவாக்க அதிகாரி சிவகுரு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Next Story