காரைக்காலில் ரூ.2 ஆயிரம் கோடியில் பேட்டரி கார் தொழிற்சாலை நாராயணசாமி தகவல்


காரைக்காலில் ரூ.2 ஆயிரம் கோடியில் பேட்டரி கார் தொழிற்சாலை நாராயணசாமி தகவல்
x
தினத்தந்தி 27 Feb 2019 5:00 AM IST (Updated: 27 Feb 2019 1:22 AM IST)
t-max-icont-min-icon

காரைக்காலில் இங்கிலாந்தில் உள்ள நிறுவனம் சார்பில் ரூ.2 ஆயிரம் கோடி முதலீட்டில் பேட்டரி கார் தயாரிப்பு தொழிற்சாலையை அமைக்க ஆய்வு செய்து வருகிறது என்று முதல்-அமைச்சர் நாராயணசாமி கூறினார்.

காரைக்கால்,

காரைக்கால் பிள்ளைத்தெரு வாசல் துணைமின் நிலைய வளாகத்தில் ரூ.48.17 கோடி செலவில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள தானியங்கி துணை மின் நிலையத்தை மக்கள் பயன்பாட்டுக்கு அர்ப்பணிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. அமைச்சர் கமலக்கண்ணன் தலைமை தாங்கினார். எம்.எல்.ஏ.க்கள் அசனா, கீதா ஆனந்தன், மாவட்ட துணை ஆட்சியர் ஆதர்ஷ், சீனியர் போலீஸ் சூப்பிரண்டு மகேஷ்குமார் பன்வால் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

தானியங்கி துணை மின்நிலையத்தை மக்களுக்கு அர்ப்பணித்து முதல்-அமைச்சர் நாராயணசாமி பேசியதாவது:-

காரைக்கால் மாவட்ட மக்களின் மின்தேவையை பூர்த்தி செய்யும் வகையில் நெய்வேலியில் இருந்து நேரடியாக மின்சாரம் கொண்டு வரப்படுகிறது. இனிமேல் தடையற்ற மின்சாரம், குறைவான கட்டணத்திற்கு வழங்கப்படும்.

தற்போது காரைக்கால் மாவட்டத்திற்கு 70 முதல் 80 மெகாவாட் மின்சாரம் தேவைப்படுகிறது. இதில் 30 மெகாவாட் மின்சாரத்தை, காரைக்காலில் இயங்கும் புதுச்சேரி மின்திறல் குழுமம் மூலம் பெறுகிறோம். மீதியுள்ள மின்சாரத்தை வெளியில் இருந்து ஆண்டுக்கு ரூ.1,250 கோடி கொடுத்து வாங்குகிறோம். அதை ரூ.1,100 கோடிக்குதான் விற்கிறோம். இதனால் ரூ.150 கோடி அரசுக்கு இழப்பு ஏற்படுகிறது.

மேலும் ஏராளமான தொழிற்சாலைகள், நிறுவனங்கள் மின்கட்டணத்தை கடந்த பல ஆண்டுகளாக கட்டாமல் உள்ளது. ஆந்திரா, கர்நாடகா, தமிழ்நாடு உள்ளிட்ட பிற மாநிலங்களை ஒப்பிடும்போது புதுச்சேரியில் மின் கட்டணம் மிகக்குறைவு. அதனால்தான் புதுச்சேரியில் தொழிற்சாலை அமைப்பதற்கு ஏராளமானோர் போட்டி போட்டுக்கொண்டு வருகிறார்கள்.

அந்த வகையில் இங்கிலாந்து நாட்டில் இருந்து பேட்டரி மூலம் இயங்கும் கார் தொழிற்சாலையை ரூ.2 ஆயிரம் கோடி மூலதனத்தில் காரைக்காலில் அமைப்பதற்கு பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.

இந்த தொழிற்சாலை அமைந்தால், புதுச்சேரியைச் சேர்ந்த 60 சதவீதம் பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கவேண்டும் என்று வலியுறுத்த உள்ளோம். மக்கள் நலத்திட்டங்களைப் பொறுத்தவரை மத்திய அரசும், மாநிலத்தில் உள்ள கவர்னரும் முட்டுக்கட்டையாக உள்ளனர்.

இது மக்களுக்கு நன்றாக புரியும். மக்கள் நலத்திட்டங்களை பொறுத்தவரை யார் குறுக்கிட்டாலும் நாங்கள் என்ன வேண்டுமானாலும் செய்ய தயாராக உள்ளோம். எங்களது தொடர் போராட்டத்தால், கவர்னர் சில கோப்புகளில் கையெழுத்து போட்டுள்ளார்.

இவ்வாறு அவர் பேசினார்.

Next Story