‘ஸ்மார்ட்’ ஓட்டுனர் உரிமம்-வாகன பதிவு புத்தகம் வழங்கும் பணி
திண்டுக்கல்லில் ஸ்மார்ட் ஓட்டுனர் உரிமம்-வாகன பதிவு புத்தகம் வழங்கும் பணியை வட்டார போக்குவரத்து அலுவலர் ஆனந்த் தொடங்கி வைத்தார்.
திண்டுக்கல்,
தமிழகத்தில் அனைத்து விதமான வாகன ஓட்டுனர் உரிமத்தில், அரசு முத்திரை ஒட்டப்பட்டு வழங்கப்படுகிறது. மேலும் உரிமம் பெறுபவர், டிஜிட்டல் முறையில் கையெழுத்திட வேண்டும். இதிலும் ஒருசிலர் முறைகேடுகள் செய்து விடுவதாக குற்றச்சாட்டு எழுந்தது. எனவே, அதை தடுக்கும் வகையில் ஸ்மார்ட் ஓட்டுனர் உரிமம் வழங்கும்படி போக்குவரத்து ஆணையர் சமயமூர்த்தி உத்தரவிட்டார்.
இதில் மாநிலம் முழுவதும் ஒவ்வொரு சரகமாக ஸ்மார்ட் ஓட்டுனர் உரிமம், ஸ்மார்ட் வாகன பதிவு புத்தகம் (ஆர்.சி.) வழங்கப்படுகின்றன. அதன்படி மதுரை சரகத்தில் இணை ஆணையர் ஜெய்சங்கர் அறிவுரையின்படி மதுரை, திருமங்கலம், மேலூர், திண்டுக்கல், நத்தம், ஒட்டன்சத்திரம், வத்தலக்குண்டு, வேடசந்தூர், பழனி, தேனி, உத்தமபாளையம் உள்பட 15 வட்டார போக்குவரத்து அலுவலகங்களில் ஸ்மார்ட் ஓட்டுனர் உரிமம் வழங்கும் பணி நேற்று தொடங்கியது.
திண்டுக்கல் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் ஸ்மார்ட் ஓட்டுனர் உரிமம் மற்றும் வாகன பதிவு புத்தகம் வழங்கும் பணியை, வட்டார போக்குவரத்து அலுவலர் ஆனந்த் தொடங்கி வைத்தார். முதல் நாளான நேற்று 5 பேருக்கு ஸ்மார்ட் ஓட்டுனர் உரிமம், ஸ்மார்ட் வாகன பதிவு புத்தகம் ஆகியவை வழங்கப்பட்டன. இதில் மோட்டார்வாகன ஆய்வாளர் விஜயக்குமார் உள்ளிட்ட அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
இதுபற்றி வட்டார போக்குவரத்து அலுவலர் ஆனந்த் கூறுகையில், ஸ்மார்ட் ஓட்டுனர் உரிமத்தில் ஒரு சிப் பொருத்தப்பட்டு உள்ளது. அதில் உரிமம் பெறுபவர்களின் விவரங்கள் அனைத்தும் இடம்பெற்று இருக்கும். எனவே, முறைகேடுகள் செய்ய முடியாது. இதற்கு கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவது இல்லை. அதேநேரம் ஸ்மார்ட் வாகன பதிவு புத்தகம் பெறுவதற்கு ரூ.200 கூடுதல் கட்டணமாக செலுத்த வேண்டும். மேலும் பழைய ஓட்டுனர் உரிமத்தையும், ஸ்மார்ட் ஓட்டுனர் உரிமமாக மாற்றி கொள்ளலாம். இதற்கான உத்தரவு வந்ததும் மாற்றி கொடுக்கப்படும், என்றார்.
இதேபோல் வேடசந்தூரில் உள்ள வட்டார போக்குவரத்து அலுவலகம் மோட்டார் வாகன ஆய்வாளர் மணிவண்ணன், பொதுமக்களுக்கு ஸ்மார்ட் ஓட்டுனர் உரிமம் வாகன பதிவு சான்றுகளை வழங்கி பேசினார்.
Related Tags :
Next Story