பெரிய மீன்பிடி விசைப்படகுகளால் பாம்பன் தூக்குப்பாலம் சேதமடையும் ஆபத்து மூடப்பட்டிருக்கும்போது கடந்து செல்கின்றன
பாம்பன் தூக்குப்பாலம் மூடப்பட்டிருக்கும் நிலையில் அனுமதியின்றி பெரிய மீன்பிடி படகுகள் கடந்து செல்வதால் பாலம் சேதமடையும் ஆபத்து ஏற்பட்டுள்ளது.
ராமேசுவரம்,
ராமேசுவரம் தீவை மண்டபத்துடன் இணைப்பதில் முக்கிய பங்கு வகிப்பது பாம்பன் ரெயில்வே பாலம். இந்த பாலத்தின் மையப்பகுதியில் கப்பல்கள், பெரிய விசைப்படகுகள் போன்றவை கடந்து செல்வதற்காக திறந்து மூடும் வகையில் தூக்குப்பாலம் அமைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு தூக்குப்பாலத்தை கடந்து செல்வதற்காக வரும் கப்பல்கள் மற்றும் பெரிய மீன்பிடி படகுகள் பாம்பனில் உள்ள துறைமுக அலுவலகத்தில் அனுமதி பெற வேண்டும். அவற்றின் நீளம், அகலம் மற்றும் எடைக்கு ஏற்ப கட்டணம் நிர்ணயிக்கப்படும். அந்த கட்டணத்தை துறைமுக அலுவலகத்தில் செலுத்திய பின்னரே கப்பல் மற்றும் படகுகளுக்கு பாலத்தை கடந்து செல்ல அனுமதி வழங்கப்படும்.
இதுவரை இந்த தூக்குப்பாலத்தை ஆயிரத்துக்கும் மேற்பட்ட கப்பல்கள், படகுகள் கடந்து சென்றுள்ளன. இதன் மூலம் துறைமுக அலுவலகத்திற்கு பல கோடி ரூபாய் வருவாய் கிடைத்து வருகிறது.
இந்த நிலையில் தூக்கு பாலத்தை கடந்து செல்ல வரும் தூத்துக்குடி, நாகப்பட்டினம் மற்றும் கன்னியாகுமரி சேர்ந்த ஒரு சில பெரிய மீன்பிடி விசைப்படகுகள் உரிய அனுமதி பெறாமல் தூக்குப்பாலம் மூடப்பட்டிருக்கும் நிலையிலேயே அதனை கடந்து செல்கின்றன. இவ்வாறு தூக்குப்பாலம் மூடப்பட்டிருக்கும் நிலையில் அதனை கடந்து செல்ல முயன்ற பல மீன்பிடி விசைப்படகுகள் பாலத்தில் மோதி உள்ளன. இதனால் தூக்குப்பாலம் சேதம் ஏற்பட்டு சீரமைக்கப்பட்ட நிகழ்வுகளும் நடந்துள்ளன.
மேலும் தூக்குப்பாலத்தை திறக்காமல் எந்த ஒரு பெரிய மீன்பிடி படகுகளும் கடந்து செல்லக்கூடாது என உத்தரவு இருந்தும் அதை வெளியூர்களை சேர்ந்த மீனவர்கள் யாரும் பின்பற்றுவது கிடையாது.
இந்த நிலையில் நேற்று பாக்ஜலசந்தி கடல் பகுதியில் இருந்து மன்னார் வளைகுடா கடல் பகுதி செல்வதற்காக நாகப்பட்டினத்தில் இருந்து வந்த பெரிய மீன்பிடி விசைப்படகு தூக்குபாலம் மூடப்பட்டிருந்த நிலையில் அவற்றின் மீது உரசுவது போல் கடந்து சென்றது. ஏற்கனவே தூக்குப்பாலத்தில் ஏற்பட்ட விரிசல் காரணமாக கடந்த 2 மாதத்திற்கும் மேலாக சீரமைப்பு பணிகள் நடைபெற்றுள்ளது. இதற்காக நிறுத்தப்பட்ட ரெயில் போக்குவரத்து இன்று(புதன்கிழமை) மீண்டும் தொடங்கப்படுகிறது. இந்த நிலையில் இவ்வாறு மீன்பிடி படகுகள் எதையும் கவனத்தில் கொள்ளாமல் தூக்குப்பாலத்தை கடந்து செல்வதால் விபரீதம் ஏற்பட வாய்ப்பு உள்ளது.
எனவே இந்த பாலத்தின் பாதுகாப்பு கருதி சம்பந்தப்பட்ட அதிகாரிகளும், கடலோர போலீசாரும் இனிவரும் காலங்களில் அனுமதியின்றி பெரிய மீன்பிடி படகுகள் தூக்குபாலத்தை கடந்து செல்வதை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று சமூக ஆர்வலர்களும், பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.