ஆக்கிரமித்து கட்டப்பட்ட வீட்டை இடிக்க எதிர்ப்பு தெரிவித்து குடும்பத்துடன் தீக்குளிக்க முயன்ற விவசாயி


ஆக்கிரமித்து கட்டப்பட்ட வீட்டை இடிக்க எதிர்ப்பு தெரிவித்து குடும்பத்துடன் தீக்குளிக்க முயன்ற விவசாயி
x
தினத்தந்தி 27 Feb 2019 4:30 AM IST (Updated: 27 Feb 2019 2:25 AM IST)
t-max-icont-min-icon

மூங்கில்துறைப்பட்டு அருகே அரசு இடத்தை ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த வீட்டை அதிகாரிகள் இடித்து அகற்றினர். வீட்டை இடிக்க எதிர்ப்பு தெரிவித்து குடும்பத்துடன் விவசாயி தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

மூங்கில்துறைப்பட்டு, 

மூங்கில்துறைப்பட்டு அருகே உள்ள ரங்கப்பனூர் கிராமத்தை சேர்ந்தவர் சேகர்(வயது 54), விவசாயி. இவர் அரசுக்கு சொந்தமான இடத்தை ஆக்கிரமித்து வீடு கட்டி உள்ளதாக மாவட்ட நிர்வாகத்துக்கு புகார் சென்றது. அதன்அடிப்படையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு சங்கராபுரம் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் அறிவுச்செல்வி தலைமையிலான அதிகாரிகள் ரங்கப்பனூருக்கு விரைந்து வந்து சேகர் வீட்டை அளவீடு செய்தனர். அப்போது சேகர் அரசு இடத்தை ஆக்கிரமித்து வீடு கட்டியிருப்பது உறுதியானது. அதைத்தொடர்ந்து 25.2.2019-க்குள் வீட்டை தாமாக முன்வந்து இடித்து அகற்றி விட வேண்டும். இல்லையென்றால் அடுத்த நாள் வீடு அகற்றப்படும் என்று அதிகாரிகள் சேகரிடம் நோட்டீசு கொடுத்துச் சென்றனர். இருப்பினும் வீட்டை சேகர் இடிக்கவில்லை.

இதையடுத்து துணை வட்டார வளர்ச்சி அலுவர் அறிவுச்செல்வி, வருவாய் ஆய்வாளர் கோவிந்தராஜ், கிராம நிர்வாக அலுவலர்கள் சிவக்குமார், குடியரசு ஆகியோர் ஆக்கிரமிப்பு வீட்டை இடிப்பதற்காக பொக்லைன் எந்திரத்துடன் ரங்கப்பனூருக்கு நேற்று காலை வந்தனர். இதையறிந்த சேகர் மற்றும் அவரது குடும்பத்தை சேர்ந்த ஏழுமலை, இருசாயி, ரஞ்சிதா, சரோஜா, லட்சுமி, சக்திவேல், வெங்கடேஷ் ஆகியோர் வீட்டை இடிக்க எதிர்ப்பு தெரிவித்து மண்எண்ணெயை தங்கள் மீது ஊற்றிக் கொண்டு தீக்குளிக்க முயன்றனர். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த திருக்கோவிலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு மகேஷ் தலைமையிலான போலீசார் தீக்குளிக்க முயன்ற சேகர் குடும்பத்தினரை தடுத்து நிறுத்தி, அவர்களை வேனில் ஏற்றி வடபொன்பரப்பி போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்றனர். அதைத்தொடர்ந்து சேகர் வீடு பொக்லைன் எந்திரம் மூலம் இடித்து அகற்றப்பட்டது. இதையடுத்து போலீஸ் நிலையத்துக்கு அழைத்து செல்லப்பட்ட சேகர் குடும்பத்தினர் மாலையில் விடுவிக்கப்பட்டனர். இந்த சம்பவத்தால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story