என்.எல்.சி.க்கு நிலம் கொடுத்தவர்களுக்கு வேலை வழங்க வேண்டும் - நெய்வேலியில் டி.டி.வி.தினகரன் பேச்சு


என்.எல்.சி.க்கு நிலம் கொடுத்தவர்களுக்கு வேலை வழங்க வேண்டும் - நெய்வேலியில் டி.டி.வி.தினகரன் பேச்சு
x
தினத்தந்தி 27 Feb 2019 4:30 AM IST (Updated: 27 Feb 2019 2:59 AM IST)
t-max-icont-min-icon

என்.எல்.சி.க்கு நிலம் கொடுத்தவர்களுக்கு வேலை வழங்க வேண்டும் என்று நெய்வேலியில் அ.ம.மு.க.துணை பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் பேசினார்.

நெய்வேலி,

அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணை பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் எம்.எல்.ஏ., கடலூர் மாவட்டத்தில் நேற்று 2-வது நாளாக மக்கள் சந்திப்பு பயணத்தை மேற்கொண்டார். குறிஞ்சிப்பாடி சட்டமன்ற தொகுதிக்குப்பட்ட சத்திரத்தில் இருந்து அவர் தனது பயணத்தை தொடங்கினார். இதையடுத்து முத்தாண்டிக்குப்பம் கடைவீதி, நெய்வேலி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு சென்று டி.டி.வி.தினகரன் திறந்த வேனில் நின்றபடி பொதுமக்கள் மத்தியில் பேசினார்.

நெய்வேலி மெயின் பஜாரில் டி.டி.வி.தினகரன் பேசியதாவது:-

அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணி, ஒரு சந்தர்ப்பவாத கூட்டணி. ஒரு வாரத்துக்கு முன்பு வரை அ.தி.மு.க. அரசை விமர்சித்தவர்கள், ஜெயலலிதா படத்தை சட்டசபையில் வைக்க எதிர்ப்பு தெரிவித்தவர்கள், ஜெயலலிதாவிற்கு நினைவிடம் கட்ட எதிர்ப்பு தெரிவித்து கோர்ட்டில் வழக்கு தொடர்ந்த பா.ம.க.வை இன்று அ.தி.மு.க. கூட்டணியில் சேர்த்துள்ளது. மக்கள் வெறுக்கும் பா.ஜ.க.வையும் அ.தி.மு.க. கூட்டணி சேர்த்துள்ளது.

இந்த கூட்டணிக்கு தமிழக மக்கள் வாக்களிக்க மாட்டார்கள். கடந்த காலங்களில் காங்கிரஸ் கட்சியுடன் கைகோர்த்த தி.மு.க.வும் தமிழகத்திற்கு எதுவும் செய்யவில்லை. எனவே இன்னும் 2 மாதத்தில் நாடாளுமன்ற தேர்தல் நடக்க இருக்கிறது. பிரதமரை தேர்ந்தெடுக்கும் பொறுப்பு உங்களிடம் உள்ளது.

என்.எல்.சி. இந்தியா நிறுவனத்தின் பங்குகளை தனியாருக்கு தாரை வார்ப்பதை தடுத்து நிறுத்தியவர் ஜெயலலிதா. இந்த நிறுவனத்திற்கு வீடு, நிலம் கொடுத்தவர்களுக்கு என்.எல்.சி.யில் வேலை வழங்க வேண்டும். ஒப்பந்த தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும். என்.எல்.சி. தொழிலாளர்களின் ஊதிய மாற்று ஒப்பந்தத்தை மத்திய மந்திரி பியூஷ் கோயல் தள்ளிப்போட்டு வருகிறார்.

எனவே, மக்கள் பிரச்சனை தீர அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்திற்கு வாக்களிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

இதனை தொடர்ந்து வடலூர் பஸ் நிலையம் அருகே டி.டிவி.தினகரன், திறந்த வேனில் நின்றபடி பொதுமக்கள் மத்தியில் பேசினார். அங்கு அவர், தனது பயணத்தை நிறைவு செய்தார். இந்நிகழ்ச்சியில் கடலூர் கிழக்கு மாவட்ட செயலாளர் கலைச்செல்வன் எம்.எல்.ஏ., மாவட்ட அண்ணா தொழிற்சங்க அ.ம.மு.க. செயலாளர் மனோகர், கடலூர் கிழக்கு மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளர் டாக்டர் பக்தரட்சகன், நெய்வேலி நகர செயலாளர் ஜெயக்குமார் மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

3-வது நாளாக இன்று (புதன்கிழமை) கடலூர், குறிஞ்சிப்பாடி சட்டமன்ற தொகுதிகளுக்கு உட்பட்ட பகுதிகளில் டி.டி.வி.தினகரன் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.

Next Story